Skip to main content

அரசு உதவிபெறும் பள்ளியில் இப்படியும் ஒரு ஊழல்! - 'பங்கு தந்தை'யான ஆர்.சி. பிஷப்? EXCLUSIVE ஆதாரம்

 

ஏழை எளிய மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற  நோக்கத்தில்தான் சிறுபான்மை பள்ளிகளை அரசே நடத்திவருகிறது. ஆனால், அரசாங்கம்  ஒதுக்கும் நிதியை மாணவர்களின் கல்விமேம்பாட்டுக்கு பயன்படுத்தாமல் முறைகேட்டில் ஈடுபடுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதில், நடந்த முறைகேடு ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதிர்ச்சி அடையவைக்கிறது கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பு.
 

Government Aided school - r.c.bishop Scam


 

 இதுகுறித்து நாம் விசாரிக்க ஆரம்பித்தபோது,  “அரசுநிதியில் முறைகேட்டில்  ஈடுபட்டது  மட்டுமல்ல… லட்சக்கணக்கில் லஞ்சம்  வாங்கிக்கொண்டு  தகுதி  குறைந்த  ஆசிரியர்களை நியமித்து  ஏழை எளிய சிறுபான்மை மாணவர்களின் எதிர்காலத்தையும்  பாழாக்கிக்கொண்டிருக்கின்றன சிறுபான்மை பள்ளிகள்” என்று குற்றஞ்சாட்டுகிற  கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பு  தலைவர்  க்ளமெண்ட் செல்வராஜ் நம்மிடம்,
 

        “தமிழகத்தில்  ஆர்.சி.  எனப்படும்  ரோமன்  கத்தோலிக்க திருச்சபையின் கீழ்  தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட மறைமாவட்ட பள்ளிகள் உள்ளன.  இதில், சென்னை –மயிலை மறைமாவட்டத்திற்குட்பட்ட 75 சிறுபான்மைப்பள்ளிகளில்  50  பள்ளிகளுக்கு  அரசே  நிதியுதவி செய்துவருகிறது.  அதாவது,  அப்பள்ளியின் கட்டமைப்பு வசதிகள்,  ஆசிரியர்கள் மற்றும் அலுவலகர்களுக்கான சம்பளம் அனைத்தையும்  அரசாங்கமே  வழங்கிவிடும்.  இந்த நிதியில்தான்  மாபெரும்  மோசடிகள் நடந்துகொண்டிருக்கிறது” என்று சொல்ல… என்ன மோசடி? என்று நாம் கேட்டபோது ஆதாரத்துடன் சொல்ல ஆரம்பித்தார் இணைப் பொதுசெயலாளர் எல்சியூஸ் ஃபெர்னாண்டோ,


 

Superintendent balasamy

           
“ஒரு  பள்ளியில்  பணிபுரியாமலேயே பணிபுரிந்ததுபோல போலி ஆவணங்களை தயார்செய்து லட்சக்கணக்கில் அரசாங்கத்திடம் மோசடி செய்திருக்கிறார்கள்.  அதாவது,  சென்னை  எருக்கஞ்சேரியிலுள்ள  செயிண்ட்  ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் 1996 ஜூந் 24 ந்தேதிலிருந்து 2018 மே-31 ந்தேதி வரை  என 22 வருடங்களாக  மேனேஜ்மெண்ட் ஸ்டாஃபாக  பணிபுரிந்து  அதற்கான  சம்பளத்தை  வாங்கிக்கொண்டிருக்கிறார் லூயிஸ் சகாயராஜ் என்கிற இளநிலை உதவியாளர்.   

 

Amalraj


ஆனால், அதே  லூயிஸ்  சகாயராஜ்  கத்தோலிக்க திருச்சபையின்கீழ்   இயங்கும்  சென்னை வியாபாசர்பாடியிலுள்ள மற்றொரு  அரசு  உதவிபெறும்  அன்னை  வேளாங்கண்ணி   உயர்நிலைப்பள்ளியில்  கடந்த  2015 மார்ச்-2 ந்தேதிலிருந்து   2018 மே-31  ந்தேதிவரை  மூன்று வருடங்களாக  பணிபுரிந்ததுபோல்  போலி ஆவணங்களை  தயார்செய்து  மாதம் 25,000 ரூபாய்  சம்பளத்தொகையாக  5 லட்சத்து 81 ஆயிரத்து 288 ரூபாய் அரசு உதவியைப் பெற்று  அரசாங்கத்தை ஏமாற்றியிருப்பது ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது” என்று அதற்கான ஆர்.டி.ஐ. ஆதாரங்களை நம்மிடம் கொடுத்தவர்,  மோசடிக்கு துணைபோனவர்கள் யார் யார்? என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.  

 

Luyis sakayaraj

           
 “சென்னை  எருக்கஞ்சேரி  செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருந்த லூயிஸ் சகாயராஜ்  அதே  காலக்கட்டத்தில் வியாசர்பாடி அன்னை வேளாங்கண்ணி  உயர்நிலைப்பள்ளியில்  பணியாற்றியதுபோல் முன் தேதியிட்ட பணிநியமன ஆணையை  சென்னையிலுள்ள  ஆர்.சி. பள்ளிகளை நிர்வகிப்பவரும்  கண்காணிப்பாளருமான  பாதிரியார்  எம். பாலசாமி  வழங்கியதால்தான்  அப்போதைய சென்னை வடக்கு  மாவட்ட  கல்வி  அதிகாரி பசுபதியிடம் இதற்கான ஒப்புதலை வாங்கிவிட்டார்கள் அன்னை வேளாங்கண்ணி பள்ளியின் தாளாளர்  எஸ்.எக்ஸ். அமல்ராஜும், தலைமையாசிரியர் எபிநேசர் அமலோற்பவராஜும்.

 

Government Aided school - r.c.bishop Scam


 

இதில், எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் ஆர்.டி.ஐயில் விண்ணப்பித்தபோது,  2018 ஜூன் 1 ந்தேதிதான் லூயிஸ் சகாயராஜ்  பணிமாற்றம்  செய்யப்பட்டு  அன்னை வேளாங்கண்ணி பள்ளியில்  சேர்ந்திருக்கிறார்  என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தோம்.  அப்படியென்றால், கடந்த 2015 மார்ச் 2ந் தேதிலிருந்து 2018 மே 31ந் தேதி வரை மூன்று வருடங்களாக போலி ஆவணங்கள் மூலம் அரசாங்கத்தை ஏமாற்றியிருக்கிறார்கள் என்று ஆர்.டி.ஐ. ஆதாரங்களுடன் சென்னை மயிலை  மறைமாவட்ட  பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமிக்கு  பலமுறை எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

r.c.bishop antony samy


ஆதாரத்தோடு பேராயரிடம் பல முறை புகார் கொடுத்தும் அதைபற்றி விசாரிக்கக்கூட இல்லை. இப்படியொரு மோசடியை கொஞ்சம்கூட கண்டுகொள்ளாததால்  இவரும் இந்த ‘மோசடியில் பங்குத்தந்தையாக’ இருக்கிறாரோ  என  எங்களுக்கு  மிகப்பெரிய சந்தேகம் எற்படுள்ளது.
 

இதனால், முதலமைச்சர் தனிப்பிரிவு,  மாநகர கமிஷனர், கல்வித்துறை,  மாவட்ட கலெக்டர்,  சி.இ.ஓ.  இப்படி அனைவருக்கும்  புகார்  கொடுத்தும்  யாரும்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  எங்கள் கண்ணுக்கு தெரிந்தது இது, என்றால்  எங்களுக்கு தெரியாமல் எவ்வளவு லட்சங்கள் இப்படி போலியான ஆவணங்கள் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டிருப்பார்கள்?   

 

clement selvaraj


 

இதே,  லூயிஸ் சகாயராஜை வைத்துதான் சென்னை மறைமாவட்டத்திலுள்ள  அனைத்து  ஆர்.சி. பள்ளிகளிலும்  நிறைய  முறைகேடுகளை  செய்வதுவருவதாகவும் இவரை கண்காணிப்பாளர்  எம்.பாலசாமி  ஒரு தரகராகவே  பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.  
 

லூயிஸ் சகாயராஜ் மீது நடவடிக்கை எடுத்தால் ஒட்டுமொத்த ஆர்.சி. பள்ளிகளில்  நடக்கும் ஊழல் மோசடிகளும் வெளிவந்துவிடும்  என்பதால்தான்  கண்டுகொள்ளாததுபோல் இருக்கிறார்கள்.  அதனால், ஏழை எளிய மாணவர்களின் நலன் மற்றும் ஆசிரியர்களின்  நீதிமன்றத்தில் சட்டரீதியாக போராடப்போகிறோம்” என்றதும்,   
 

ஆசிரியர் நியமனத்தில் நடக்கும் லஞ்ச ஊழல் மோசடிகளை வெளிப்படுத்துகிறார் பொதுச்செயலாளர்  ஜெயபாலன்.  “ஒரு பள்ளியானது தரமான ஆசிரியர்களை நியமிக்கவேண்டுமல்லவா?  அதற்காகத்தானே… அரசாங்கத்தில்  டி.இ.டி.  தேர்வுகள்  எல்லாம்  வைத்து ஆசிரியர்கள்  நியமனம்  செய்யப்படுகிறார்கள்.  ஆனால், சென்னை  ஆர்.சி.  பள்ளிகள்  கண்காணிப்பாளர்  பாலசாமியிடம்  கொடுக்கவேண்டியதை  கொடுத்துவிட்டால் போதும்   அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்  ஆகிவிடலாம்.  அதேபோல், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்காமல் பாலசாமியை கவனிக்கிறவர்களுக்கு  மட்டுமே  பதவி  உயர்வு, ட்ரான்ஸ்ஃபர் எல்லாம்  எளிதாக கிடைக்கும். இப்படியிருந்தால்,  ஏழை எளிய கிறிஸ்துவ சிறுபான்மை  பள்ளிகளின்  தரம்  எப்படி உயரும்?  மாணவர்கள்  எதிர்காலம்தான் வீணாகும். ஆசிரியர்கள் நியமனம் போலவே அதிக டொனேஷன்  கொடுக்கும் மாணவர்களையே பள்ளியில் சேர்க்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?” என்று குற்றஞ்சாட்டுகிறவர், 

 

fernando


 

      “முறைகேட்டுக்கு எதிராக புகார் கொடுத்து போராடுவதால் எங்களுக்கு  மறைமாவட்டத்தின் பெயரில் நிறைய  மிரட்டல்கள் வருகின்றன.  ஆனாலும் எங்களது கடவுள் துணையாக இருப்பார் என்ற நம்பிக்கையில்தான் நீதியின் பக்கம் உறுதியுடன் நின்று சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்” என்கிறார் ஆணித்தரமாக. 
 

இதுகுறித்து, அன்னை வேளாங்கண்ணி பள்ளியின்  தாளாளர் எஸ்.எக்ஸ். அமல்ராஜை தொடர்புகொண்டபோது ஸ்விட்ச் ஆஃப்  நிலையில் இருந்ததால் தலைமை ஆசிரியர் எபிநேசர் அமலோர்பவராஜிடம் பேசினோம், “லூயிஸ் சகாயராஜ்தான் எங்களது பள்ளியில் பணிபுரிந்ததுபோல் போலியான பதிவேடுகளை தயார் செய்திருக்கிறார். ஆனால், நான் வைத்திருக்கும் வருகைப்பதிவேட்டில் காலிப்பணியிடமாக இருக்கிறது என்றுதான் குறிப்பிட்டு வைத்துள்ளேன். அவர், இங்கு பணிபுரிந்தார் என்பதற்கான ஆவணங்களில் தாளாளரின் கையெழுத்துதான் உள்ளதே தவிர எனது கையெழுத்து எதுவும் இல்லை. எனக்கும் இந்த முறைகேடுக்கும் எந்த தொடர்பும் இல்லை. லூயிஸ் சகாயராஜை நாங்கள் டெர்மினேட் செய்துவிட்டோம்”என்று விளக்களித்தார்.
 

பள்ளிக்கல்வித்துறை தற்போதையே வடக்கு மாவட்ட கல்வி அதிகாரி கோபாலகிருஷ்ணனிடம் பேசியபோது, “முறைகேடு நடந்திருப்பது உண்மை என தெரியவந்ததால் லூயிஸ் சகாயராஜ்மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றவரிடம் இந்த முறைகேட்டுக்கு காரணமான அன்னை வேளாங்கண்ணி பள்ளியின்  தாளாளர் எஸ்.எக்ஸ்.அமராஜ் மற்றும் ஆர்.சி. பள்ளிகளின் கண்காணிப்பாளர் பாலசாமி ஆகியோர் மீது என்ன நடவடிக்கை என்று கேட்டதற்கு அவரிடம் பதில் இல்லை. 

 

jayabalan


 

ஆர்.சி. பள்ளிகளின் கண்காணிப்பாளர் பாதிரியார் பாலசாமியை தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்தவர், “நான் யாருக்கும் பணி நியமனம் வழங்கவில்லை. லூயிஸ் அமலராஜ்  எனது பெயரில் ஃபோர்ஜரியாக ஆவணம் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்” என்றார் ஒரே போடாக. 
 

இதுகுறித்து, ஆர்.சி. பிஷப் அந்தோனிசாமியிடம் விளக்கம் கேட்க பேராயர் இல்லத்தின் எண்களுக்கு பலமுறை  தொடர்பு கொண்டபோதும் யாரும் அட்டெண்ட் செய்யவில்லை. நமது கட்டுரைக்கு சம்பந்தப்பட்டவர்கள் முறையான விளக்கத்தை அளித்தார் நக்கீரன் அதை வெளியிட தயாராகவே இருக்கிறது. 
 

அரசு உதவிபெறும் பள்ளிகளில் எங்கெல்லாம் மோசடி நடந்திருக்கிறது என்பதுகுறித்து ஆராயப்படவேண்டும். அரசு கொடுக்கும் நிதியை ஏழை எளிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பதே உண்மையான கிறிஸ்துவ விசுவாசிகளின் கோரிக்கையாக உள்ளது. 
 

 

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

மிஸ் பண்ணிடாதீங்க

சார்ந்த செய்திகள்