முதல் மொழி சித்திரைத் திருவிழா என்ற இலக்கிய நிகழ்வு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானராஜசேகரன் பேசுகையில்,
”லஞ்சம் என்ற விஷயத்தை நான் எப்போது முதலில் சந்தித்தேன் என்று யோசித்து பார்க்கும்போது என்னுடைய கல்லூரி காலத்தில் நடந்த ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ஹாஸ்டலில் என்னுடன் இருந்த ஒரு பையனின் உறவினர் ஒருவர் போலீஸ் எஸ்.ஐ.யாக முயற்சி செய்துகொண்டிருந்தார். அதனால் அமைச்சர் ஒருவரின் பரிந்துரைக்காக ஊரில் இருந்து கிளம்பி குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார். எனக்கு சென்னை ஏரியா நன்றாக தெரியும் என்பதால் அந்த அமைச்சரை சந்திக்க என்னையும் அழைத்துச் சென்றார்கள். அந்த அமைச்சரின் வீடு அண்ணா நகரில் இருந்தது.
நான் வெளியே நின்றுகொண்டேன். அவர்கள் மட்டும் உள்ளே சென்று பேசினார்கள். 25 ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சமாக வாங்கிக்கொண்டு அவரின் பெயரை ஒரு பேப்பரில் குறித்து வைத்துக்கொண்டார்கள். பின், அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டோம். ஆனால், எஸ்.ஐ. ரிசல்ட் வந்தபோது இந்தப் பையன் தேர்ச்சி பெறவில்லை. உடனே அவர்கள் ஊரில் இருந்து கிளம்பிவந்துவிட்டார்கள். மீண்டும் அந்த அமைச்சரை சந்திக்கச் சென்றோம். ஏதோ தகராறு நடக்கப்போகிறது என்றுதான் நான் நினைத்தேன். அந்த அமைச்சர் அப்போது இல்லை. அவரது உதவியாளரிடம் விஷயத்தைக் கூறியதும் எல்லா விவரங்களையும் சரி பார்த்துவிட்டு, அந்தப் பணத்தை திருப்பிக்கொடுத்துவிட்டார்.
’நேர்மைனா இப்படித்தான்யா இருக்கணும்’ என்று அந்த அமைச்சரை காரில் வரும்போது இவர்கள் புகழ்ந்துகொண்டே வந்தார்கள். ’காசு வாங்குனார், காரியம் நடக்கல என்றதும் நேர்மையாக திருப்பிக்கொடுத்துட்டாரே...’ என்று அந்த அமைச்சரைப் பற்றி பெருமையாக பேசினார்கள். இன்றைக்கும் இதுதான் நேர்மை என்று மக்கள் நினைக்கிறார்கள்.
ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நான் இருந்தபோது, ‘தமிழ்நாடு ஊழலும் முதலிடத்திலும் உள்ளது, வளர்ச்சியிலும் முதலிடத்தில் உள்ளது, இது எப்படி சாத்தியம்’ என்று எங்கு சென்றாலும் என்னிடம் கேட்பார்கள். அது உண்மைதான். ஊழல், வளர்ச்சி இரண்டலுமே தமிழகம் முன்வரிசையில் உள்ளது. பீகாரில் ஊழல் அதிகம். ஆனால், அங்கு வளர்ச்சியில்லை. தமிழ்நாட்டில் மட்டும் இது எப்படி சாத்தியம்? இது பற்றி ஆய்வு செய்தபோது ஒரு பெரிய உண்மை தெரியவந்தது.
எப்போதுமே சிவில் சம்மந்தமான வேலைகளில்தான் அதிக ஊழல் நடக்கும். ஒரு ரோடு போட 100 ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்றால் பிற மாநிலங்கள் ரோட்டில் முதலீடு செய்யும் காசைவிட தமிழ்நாட்டில் அதிக அளவு காசு ரோட்டில் முதலீடு செய்யப்படுகிறது. அதாவது 100 ரூபாயில் 80 ரூபாய்வரை சாலைபோட பயன்படுத்துகிறார்கள். ஊழலே இல்லாத மாநிலம் என்று சொல்லப்படும் கேரளாவில்கூட 60 ரூபாய்தான் ரோட்டிற்காக செலவழிக்கிறார்கள். மீதமுள்ள பணத்தில் ஊழல் செய்யப்படுகிறது. எல்லா மாநிலங்களிலும் இதே மாதிரியான விகிதம்தான் உள்ளது. எனவே, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இது முக்கிய காரணம்.
அப்படியென்றால் ஊழலில் எப்படி தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. பிற மாநிலங்களில் அரசு பணத்தை அதிகமாக எடுத்துதான் அங்குள்ள அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அரசு பணத்தை பெரிய அளவில் எடுக்காமலே வேறு வகையில் ஊழல் செய்கிறார்கள். இதைத்தான் விஞ்ஞான ஊழல் என்கிறார்கள். அதாவது அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாத வகையில் ஒரு லஞ்ச உலகத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒன்று இல்லை. என்னுடைய நண்பர் ஒருவருக்கு ஆளுங்கட்சியின் கோவை மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் பதவி ஒதுக்கப்படுகிறது. அதற்காக அவரிடம் ஒரு கோடி கேட்டார்கள். இவர் 75 லட்சம்வரை கொடுக்க தயாராக இருந்தார். ஆனால், பேரம் படியாததால் அந்தப் பதவி வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இதுபோல அரசாங்கம் சம்மந்தப்படாத விஷயங்களிலேயே பல வகையான லஞ்சத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஊழலில் தமிழ்நாடு முன்னோடியாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்”. இவ்வாறு ஞானராஜசேகரன் பேசினார்.