Skip to main content

கரோனா சுனாமியால் நிலைகுலைந்த குடும்பம்; தாய், தந்தையை இழந்து வாடும் 5 பிள்ளைகள்!

Published on 04/07/2021 | Edited on 04/07/2021

 

CORONA

 

ஓசூரில், கரோனா சுனாமியால் ஒரே ஆதரவாக இருந்த தாயையும் பறிகொடுத்துவிட்டு 4 மகள்கள் உள்பட 5 பிள்ளைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 

கடந்த ஆண்டு கரோனா முதல் அலையால் ஏற்பட்ட கடுமையான ஊரடங்கால் மற்றெந்த பிரிவினரையும் விட தினக்கூலித் தொழிலாளர் வர்க்கத்தினரும், சொற்ப ஊதியத்திற்கு பணியாற்றி வரும் தனியார் ஊழியர்களும் வேலையிழப்பு, பொருளாதார இழப்பால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

 

அதையெல்லாம் கவனத்தில் கொண்ட தமிழக அரசு, இந்தமுறை கரோனா இரண்டாவது அலையின்போது, சற்று தளர்வுகளுடனேயே ஊரடங்கு விதிகளை அமல்படுத்தியது. ஆனாலும், கடந்த ஆண்டு ஏற்பட்ட முடக்கத்தில் இருந்தே மீளாத சாமானியர்களில் பலரை இரண்டாம் அலை கருணையின்றி காவு வாங்கிவிட்டது.

 

இந்த அலையில் சிக்கி சின்னாபின்னமான ஆயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்றுதான், நிவிதாவின் குடும்பமும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அண்ணா நகரில் பழைய பரிமளம் பள்ளிக்கூடம் அருகே வசிக்கிறது நிவிதாவின் குடும்பம்.

 

இவருடைய தந்தை, ராமன். மரத்தச்சு தொழிலாளி. தாய், லட்சுமி. கடந்த ஐந்து ஆண்டுக்கு முன்பு கல்லீரல் புற்றுநோயால் ராமன் உயிரிழந்துவிட்டார். அதன்பிறகு லட்சுமிதான், தந்தையுமானவராக இருந்து குடும்பத்தை பராமரித்து வந்தார்.

 

இந்த தம்பதிக்கு சசிகலா (23), நிவிதா (22), தாட்சாயணி (20), கவுரி (18), முருகேஷ்வரி (16) என ஐந்து மகள்களும் சிவா (15) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

 

salem

 

ராமன் மறைவுக்குப் பிறகு லட்சுமிக்கு, 6 குழந்தைகளையும் நல்லபடியாக கரை சேர்க்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. வீடு அருகே தள்ளுவண்டி கடையில் பஜ்ஜி, போண்டா என பலகாரம் சுட்டு வியாபாரம் செய்து வந்திருக்கிறார். சேமிப்புக்கு எடுத்து வைக்கும் அளவுக்கு லாபம் இல்லாவிட்டாலும், பிள்ளைகளை பட்டினியில் இருந்து காப்பாற்ற பலகார வியாபாரம் உதவியிருக்கிறது. பல நேரங்களில் மீந்து போன பலகாரங்களை உண்டுதான் குழந்தைகள் பசியாறியிருக்கிறார்கள்.

 

எப்படியோ பாடுபட்டு மூத்த மகள் சசிகலாவை மட்டும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். அதுவரை சசிகலாவும் வேலைக்குச் சென்று வந்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு அவர் மூலம் கிடைத்து வந்த வருமானமும் நின்று போனது.

 

மீண்டும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது லட்சுமியின் குடும்பம். எல்லாம் ஜான் ஏறினால் முழம் சறுக்கிய கதைதான்.
 

இதனால், எஸ்எஸ்எல்சி படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த இரண்டாவது மகள் நிவிதாவும், பி.காம்., இறுதியாண்டு படித்து வரும் தாட்சாயணியும் வேலைக்குச் செல்லத் தொடங்கினர். ஓசூர், தொழிற்சாலைகள் நிறைந்த நகரம். டைடான் தொழிற்சாலையின் ஒரு பிரிவில் மாதம் 11500 ரூபாய் ஊதியத்தில் நிவிதாவும், தாட்சாயணி டாடா குழும ஆலையில் 11500 ரூபாய் சம்பளத்திலும் வேலைக்குச் சென்று வந்துள்ளனர்.

 

ஊரடங்கு காரணமாக நிவிதாவுக்கு வேலை இல்லை என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டதால், இப்போது தாட்சாயணியின் ஒற்றை சம்பளத்தை நம்பியே குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்தநிலையில்தான் எதிர்பாராதவிதமாக கரோனா நோய்த்தொற்றுக்கு அவர்களுடைய தாயார் லட்சுமியும் கடந்த மே மாதம் உயிரிழந்தார். குடும்பத்திற்கு ஒரே ஆதரவாக இருந்த அவரும் தவிக்க விட்டுவிட்டுச் சென்றுவிட்டதால், இப்போது நான்கு பெண் பிள்ளைகளும், ஒரு சிறுவனும் ஆதரவற்று, நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 

கரோனாவால் பெற்றோரை இழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்குவதாகவும், படிக்கும் பிள்ளைகளின் கல்விச்செலவையும் அரசே ஏற்பதாகவும் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக உதவிகள் கேட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளதாக நிவிதா கூறினார்.

 

பெற்றோரை இழந்ததால் பொருளாதார நெருக்கடி ஒருபுறம் இருக்க, சமூகப்பாதுகாப்பும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

 

வயது வந்த நான்கு பெண் பிள்ளைகள், ஒரு சிறுவன் என 5 பேர் இருப்பதால் ஓசூரில் பலர் அவர்களுக்கு குடியிருக்க வாடகைக்கு வீடும் கொடுப்பதில்லை. கேட்டால், தண்ணீரை அதிகமாக பயன்படுத்துவார்கள் என்று சொல்லி, வாடகைக்கு பலரும் வீடு கொடுக்க மாட்டேன்கிறார்கள் என்கிறார் நிவிதா. இதனால் கடந்த ஓரே ஆண்டில் மூன்று முறை வாடகை வீட்டை மாற்றியிருக்கிறார்கள்.

 

இப்போது இருக்கும் வீட்டு உரிமையாளர், தங்களிடம் கனிவாக நடந்து கொள்வதாக கூறும் அவர், ''இதற்கு முன்பு குடியிருந்த இடங்களில் வாடகை கொடுக்க 10 தேதி ஆகிவிட்டாலே, அடிக்கடி வந்து வாடகை கேட்டு டார்ச்சர் கொடுப்பாங்க. கண்டபடி திட்டுவாங்க. சொந்தமா வீடோ... பெரிய வருமானமோ இல்லாத நாங்க அடங்கிப் போறத தவிர வேறு வழியில்லையே அங்கிள்,'' என  கவலையுடன் கூறினார், நிவிதா.

 

நிவிதா நம்மிடம் தொடர்ந்து பேசினார்.

 

salem

 

''அப்பாவுக்கு சிகிச்சை செலவுக்கே 3.50 லட்சம் ரூபாய் ஆச்சு. அவருக்காக வாங்கின கடன் பாக்கி இன்னும் 2 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கு. நானும் தாட்சாயணியும்தான் அங்கிள் வேலைக்குப் போய்க்கிட்டு இருந்தோம். இப்போ ரெண்டு மாசமா எனக்கும் வேலை இல்ல. தாட்சாயணி மட்டும்தான் வேலைக்கு போய்க்கிட்டு இருக்கா. காலேஜ் திறந்துட்டாங்கனா அவளும் வேலைக்குப் போக முடியாது. அதனால, முன்னாடி வேலை செய்திட்டு இருந்த இடத்திலேயே எனக்கு சீக்கிரம் திரும்பவும் வேலை கிடைச்சுட்டா பரவால.

 

அப்பா, அம்மாவை இழந்து நாங்க கஷ்டப்படறத பார்த்துட்டு, ஒரு காலை பத்திரிகையில் செய்தி வந்துச்சு. அதைப் பார்த்த பிறகும் கூட எங்க சொந்தக்காரங்க ஒருத்தர்கூட இதுவரை வந்து எங்களுக்கு உதவ முன்வரல. அப்பா, அம்மா கஷ்டத்துல இருந்த காலத்திலயும் கூட யாருமே கண்டுக்கல.

 

எங்களுக்கு உங்களைப் போல யாரோ முகம் தெரியாத சிலர்தான் விசாரிச்சு பார்த்துட்டு அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் எல்லாம் கொடுத்து உதவி செஞ்சாங்க. அதுவே இன்னும் நாலஞ்சு மாசத்துக்கு தாங்கும். ஒரு சிலர், எங்களுக்கு வங்கி கணக்கு மூலமாக நிதியுதவியும் செய்திருக்காங்க.

 

இப்ப வரைக்கும் ரேஷன் அரிசிலதான் குடும்பம் ஓடிக்கிட்டு இருக்கு. சிலர் அரிசியும் வாங்கிக் கொடுத்ததால அதை சமைச்சு சாப்பிட்டுக்கிறோம் அங்கிள். சிலரின் உதவியால் இப்போது சாப்பாட்டுக்கு எந்த குறையும் இல்லை. அதேநேரம், போட்டுக்க நல்ல துணிமணிகூட இல்ல அங்கிள்.

 

இப்போதைக்கு கருணை அடிப்படையில் எங்களில் யாராவது ஒருவருக்கு அரசாங்க வேலை கிடைச்சா பரவால. என் தங்கைகளும் தம்பியும் படிக்கவும் அரசு உதவி செய்யணும்,'' என்ற நிவிதா, ''எங்களுக்கு உதவி செய்யற சிலரை பார்த்து எங்களுக்கும் ஒரு ஆசை இருக்கு அங்கிள்... எங்கள விட கீழான நிலையில் இருக்கற பத்து பேருக்காவது மாசம் மாசம் சோறு போடணும்னு நினைக்கிறோம்,'' என்றார்.

 

நிலைகுலைந்த குடும்பத்திற்கு உண்ண உணவு, உடுக்க உடை, பாதுகாப்பான வீடு ஆகியவற்றை செய்து கொடுப்பது அரசின் கடமை மட்டுமல்ல; சக மனிதர்களாக நமது கடமையும் கூட என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.