அரசு முறைப் பயணமாக சென்னை வந்த பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தற்கு மறுநாளே (15.2.2021), சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர், பிப்ரவரி 24 முதல் மார்ச் 5 வரை விருப்ப மனுக்களைத் தரலாம் என்ற விறுவிறு அறிவிப்பை வெளியிட, ர.ர.க்களிடையே ஏக பரபரப்பு.
அ.தி.மு.க. அறிவித்த நாளிலேயே தி.மு.க.வும் பிப்ரவரி 17 முதல் பிப்.24 வரை விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என அறிவித்தது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பிலும் விருப்ப மனுக்கள் பெறுவதை அறிவித்திருக்கிறார் கமல்ஹாசன். இதனால் தேர்தல் களம் விறுவிறுப்பாகியிருக்கிறது.
பிரதமர் மோடி - எடப்பாடி பழனிசாமி சந்திப்புக்கும், விருப்ப மனு அறிவிப்பிற்கும் தொடர்பு இருப்பதாக அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் எதிரொலி இருக்கும் நிலையில், மத்திய உளவுத்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, "மோடியை தனியாகச் சந்தித்து பேசுவதற்கு ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் பிரதமர் அலுவலகத்தில் நேரம் கேட்டிருந்தனர். அரசு முறை பயணம் என்பதால் தனி சந்திப்புக்குப் பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சனிடம் ஆலோசித்துள்ளார். டெல்லியிடம் தலைமைச் செயலாளர் எடுத்த முயற்சியில், 10 நிமிடம் பிரதமரிடம் பேச எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் நேரம் ஒதுக்கப்படும் என மோடி புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது.
அந்த தனிப்பட்ட சந்திப்பில் பிரதமரிடம், ‘எங்கள் கைகளை உயர்த்தி கூட்டணியை உறுதிப்படுத்தியதில் ரொம்ப மகிழ்ச்சி’ என பகிர்ந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, ‘இடைக்கால பட்ஜெட்டில் சில அறிவிப்புகளைச் செய்யலாம் என திட்டமிடுகிறேன். அதற்கான நிதி ஆதாரங்களைக் காட்ட வேண்டும். தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை 19 ஆயிரம் கோடியைக் கொடுத்து உதவ ஆவன செய்யுங்கள். அது கிடைக்கும் பட்சத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டால், தேர்தல் வெற்றிக்கு உதவும்’ என சொல்ல, நிதியமைச்சரிடம் (நிர்மலா சீதாராமன்) சொல்கிறேன். அவரிடம் பேசுங்கள் என தெரிவித்திருக்கிறார் பிரதமர். இதை க்ரீன் சிக்னலாக கருதி, மோடி புறப்பட்டதும் ஓபிஎஸ்- சிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்கான தேதியை முடிவு செய்ததுடன், எல்லா வகையிலும் டெல்லி நமக்குப் பாசிட்டிவ்வாக இருப்பதையும், தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்பதையும் விவாதித்திருக்கிறார். இதனையடுத்தே, அ.தி.மு.க.வில் விருப்ப மனு பெறும் தேர்தல் நடவடிக்கைகளைத் துவக்க இருவரும் முடிவு செய்தனர்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் உளவுத் துறையினர்.
விருப்ப மனுவுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் யார் யாருக்கு சீட் கிடைக்கும் என ஒவ்வொரு மாவட்ட அ.தி.மு.க.விலும் தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளன. விருப்ப மனு செய்வதற்கு முன்பே சீட்டுகளை உறுதி செய்துகொள்வதற்காக பலரும் பல வழிகளையும் தேர்ந்தெடுத்துள்ளனர். இதில், எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமான சேலம் இளங்கோவனை பலரும் அணுகியுள்ளனர். இளங்கோவன் பெயரைச் சொல்லி வசூல் வேட்டையும் அ.தி.மு.க.வில் களை கட்டுகிறது. ஒரு சீட்டுக்கு 2சி என முடிவு செய்து, அட்வான்ஸாக 1 சி-யும், சீட் கிடைத்ததும் 1 சி-யும் கொடுக்க வேண்டும் என பேரம் பேசப்படுகிறது.
இந்தப் பேரத்தில், கடலூர் மாவட்ட அ.ம.மு.க.விலிருந்து அ.தி.மு.க.வுக்குத் தாவிய கார்த்தி என்பவர் இளங்கோவன் பெயரைச் சொல்லி தூள் கிளப்புவதாக அ.தி.மு.க. தலைமைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிசாமிக்கும், கட்சியின் சீனியர்களுக்கும் நெருக்கமானவர்கள் என சொல்லிக்கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் சீட் வாங்கித் தர மீடியேட்டர்கள் பலர் அ.தி.மு.க.வில் முட்டி மோதுகின்றனர். அ.தி.மு.க.வின் வழிகாட்டும் குழு உறுப்பினர்களிடமும், மூத்த தலைவர்களின் வாரிசுகளிடமும் சிபாரிசை வேண்டி நிற்கிறார்கள் ர.ர.க்கள். அ.தி.மு.க.வில் விருப்பப் மனு கொடுத்தவர்களிடம் பெரும்பாலும் நேர்காணல் நடத்தப்படுவதில்லை என்பதாலேயே கட்சியில் வலிமையானவர்களின் சிபாரிசுகளைப் பெற துடிக்கின்றனர்.
சிட்டிங் எம்.எல்.ஏ.க்களில் 50 சதவீதம் பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி எடுத்த சர்வேயில் சொல்லப்பட்டிருப்பதால், அவர்களுக்குக் கல்தா கொடுக்கும் முடிவில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. பண வசதியுடன் இருப்பது சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள்தான் என்பதால், அவர்களைப் புறக்கணித்தால், தேர்தல் நேரத்தில் எந்த அளவுக்கு ஒத்துழைப்பார்கள்? எப்படி செலவு செய்வார்கள்? உள்ளிட்ட வில்லங்கங்களும் அலசப்பட்டிருக்கின்றன. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய அரசு பதவிகள் கொடுக்கப்படும் என உத்தரவாதம் தரும் யோசனையும் இருக்கிறதாம்.