சில நாட்களுக்கு முன்பு அதிமுக தலைமையகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்றது. அப்போது கட்சியின் மூத்த தலைவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம்; நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு...
"அதிமுக தலையில்லாத முண்டமாக இருக்கிறது. அதனால் அதிமுகவில் இதே மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். இவர்கள் இரண்டு பேருமே பிரிந்திருக்கிறார்கள். அதிமுக பல பிரிவுகளாக துண்டுதுண்டாக சிதறிப்போய் உள்ளது. எனவே தலைமை இல்லாமல் எந்த கட்சியும் அடுத்த கட்டத்திற்கு செல்ல இயலாது. எனவே அதிமுக மட்டும் அதற்கு விதிவிலக்கு இல்லை. இப்போது மதுசூதனன் இறந்துவிட்டார், அவர் வகித்து வந்த அவைத்தலைவர் பதவியை வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டும். ஆனால் இத்தனை நாட்கள் கடந்தும் இன்னொருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு பதவியை இவர்களால் கொடுக்க முடியவில்லை. அப்படி கொடுக்க முயன்றால் நீ என்ன சொல்வது நாங்க என்ன கேட்பது என்று ஒருவருக்கு ஒருவர் சண்டை போடுகிறார்கள். யாரும் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை.
அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் தன்னை தலைவராக நினைத்துக்கொள்ளும் நிலைதான் தற்போது உள்ளது. தலைமையகத்தில் அந்த கூட்டம் நடந்த தகவல் இதுவரை முறையாக வெளிவந்ததா என்றால் இல்லை. ஏதாவது தீர்மானம் நிறைவேற்றினார்களா? இவர் அவரை அடித்தார், அவர் இவரை அடித்தார், இவர் கண்ணீர்விட்டு கதறினார், மன்னிப்பு கேட்டார் என்று தான் செய்தி வெளிவருகிறதே தவிர் கட்சி நலன் சார்ந்து இதை பேசினோம் என்ற தகவல் இதுவரை வெளிவந்துள்ளதா? அப்படி எந்த செய்தியும் இதுவரை வெளிவரவில்லை. ஏனென்றால் இவர்கள் ஒருவர் பேச்சை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற யுத்தம் அதிமுகவில் நடைபெற்று வருகிறது. எனவே இவர்களால் எந்த முடிவு எடுக்க முடியாது. மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு மரியாதை கொடுக்க தயாராகத்தான் இருக்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இல்லை. யார் தலைமைக்கு நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்ற குழப்பமே அவர்களுக்கு தற்போது நிலையில் இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய இந்த அற்புதமான இயக்கத்தை இன்றைக்கு இடையில் வந்த இவர்கள் படிப்படியாக சீரழித்து வருகிறார்கள்.
முஸ்லிம் சமூகத்துக்கு அன்வர் ராஜா தான் பிரதிநிதியாக இதுவரை இருந்தார். ஆனால் தற்போது அவரை மனிதனாக கூட இவர்கள் மதிக்கவில்லையே. ஜெயலலிதா இருந்த போது அவர் எவ்வளவு செல்வாக்காக இருந்தவர். நல்லவேளை மதுசூதனன் இறந்துவிட்டார். இல்லையென்றால் அவருக்கு அனவர்ராஜா நிலைதான் வந்திருக்கும். அந்த கூட்டத்தில் வந்தவர்கள் எத்தனை பேர் எம்ஜிஆரை பார்த்திருக்கிறார்கள். ஜெயலலிதாவிடம் பேசி இருக்கிறார்கள். இவர்கள் இருவராலும் நியமிக்கப்பட்ட ஜால்ரா கூட்டம் தான் அங்கே இருக்கிறது. அவர்கள் இருவரும் என்ன சொல்கிறாரோ அதுபடி நடந்துகொள்வார்கள். அதைத்தாண்டி இவர்கள் இருவருக்கு ஒன்றும் தெரியாது. இப்போது கட்சியில் இருக்கும் நிர்வாகிகளிடம் அண்ணாவை யார் என்று கேளுங்கள், தெரியலையே என்றுதான் அண்ணா பெயரில் இருக்கும் அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கூறுவார்கள். இதுதான் அந்த கட்சியின் நிலையாக இருக்கிறது. சக்தி வாய்ந்த தலைமை அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என்றால் அதிமுக காணாமல் போகிற நிலைமைக்குத்தான் இன்றைய சூழல் இருக்கிறது.