Skip to main content

இந்தியாவில் பட்டாசின் வரலாறு... 

Published on 06/11/2018 | Edited on 04/02/2020
diwali history

 

இந்தியா முழுவதும் பரவலாக பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகை, தீபாவளி. தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு, பட்டாசு தான் பிரதானம். இதில் இன்று பெரும் பேசுபொருளாக உள்ளது பட்டாசு. சுற்றுசூழல் பாதிப்பு, சீன இறக்குமதி, உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிப்பு என பல்வேறு அரசியலை கொண்டுள்ள பட்டாசின் வரலாறு சுவாரசியம் நிறைந்தது.

சீனாவில் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போரில் பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு வித வெடிமருந்தில் இருந்து பரினமித்ததே இந்த பட்டாசு. இது சீனாவில் புத்தாண்டு மற்றும் நிலவு திருவிழாவின் பொழுது பெருமளவு பயன்படுத்தபட்டது. சீன நம்பிக்கையின்படி பட்டாசுகள் தீய சக்தியை விரட்டுவதாக நம்பப்படுகிறது.வரலாற்று ஆய்வாளர் பரசுராம் கோடேவின் ஆய்வுப்படி, 13 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து அரேபியர்களின் மூலம் பட்டாசு இந்தியாவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. 13  ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் விஜயநகர அரசன் இரண்டாம் தேவரையாவின் அரண்மனையில் பெர்சிய நாட்டு தூதரால்  முதன்முதலில் பட்டாசுகள் கொண்டு விழா நடத்தப்பட்டது.

பின்னர் முகலாய மன்னர்கள் பட்டாசு தயாரிக்கும் கலையை சீனாவிடம் தெரிந்துகொண்டு இந்தியாவில் பட்டாசு செய்ய ஆரம்பித்தனர். ஆரம்ப காலத்தில் போர்க்களத்தில் ஆயுதமாக பயன்படுத்தபட்ட வெடிமருந்து பின் அவர்கள் அரன்மனை விழாக்களில் பெருமளவு வெடிக்கப்பட்டது. பட்டாசு வெடிப்பது பெருமையாக கருதப்பட்டது, இதற்காக பெரும் தொகை செலவிடப்பட்டது. தரையில் மட்டும் வெடிக்கும் பட்டாசுகள் இருந்த காலத்தில்,அவர்கள் ஐரோப்பாவிலிருந்து வானில் சென்று வெடிக்கும் ராக்கெட்களை வாங்கி உபயோகபடுத்தினர்.

இப்படி இருந்த நிலையில் 18 ஆம் நூற்றாண்டு முதல் தான் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் வழக்கம் ஆரம்பித்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விளக்கு கொண்டு வீடுகள் ஒளியேற்றப்பட்டது போல் ராக்கெட் கொண்டு வானும் ஒளியூட்டப்பட்டது. அந்த காலகட்டத்தில் பெரும்பாலும் சீனா மற்றும் ஐரோப்பாவிலிருந்து பட்டாசு இறக்குமதி செய்யப்பட்டது. பின்னர் இந்தியாவில் கல்கத்தா மற்றும் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் தொடங்கப்பட்டன. இதில் சிவகாசி இன்றுவரை இந்தியாவின் முக்கிய பட்டாசு உற்பத்தியாளராக திகழ்கிறது.

என்னதான் பட்டாசு சீனாவில் தோன்றியிருந்தாலும், அது பல நூற்றாண்டுகளாக இந்திய தேசம் மற்றும் பன்பாட்டுடன் ஒன்றிவிட்டது. இந்நிலையில், வருடம் முழுவதும் இயங்கும் தொழிற்சாலைகள் ஏற்படுத்தாத மாசினையா இந்த ஒரு நாளில் பட்டாசுகள் ஏற்படுத்திவிடபோகின்றன என்பதை இதற்கு கட்டுப்பாடு விதித்தவர்கள் சற்று யோசித்து பார்க்க வேண்டும்.

 

 

 

Next Story

பட்டாசு ஆலையில் வெடி விபத்து; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
passed away toll rises to 10 in firecracker factory incident

விருதுநகர் அருகே உள்ள முத்துசாமி புரத்தில் விஜய் என்பவருக்கு சொந்தான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த நிலையில் இன்று வழக்கம் போல பட்டாசு ஆலையில் வேலைகள் நடந்துவந்த நிலையில் மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் கிட்டத்தட்ட 30 பேர் அங்கு பணியாற்றியதாக கூறப்படுகிறது. 

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரில் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும் போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

Next Story

1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
1000 year old Mahavira sculpture discovered

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மணவராயனேந்தலில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கி.பி.11ம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சுழி பகுதியில் கள ஆய்வின் போது, மணவராயனேந்தலில் இளையராஜா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 24 ஆம் தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் இருப்பதை அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் சு. ராஜபாண்டி, தொல்லியல் துறை பயிற்சி மாணவர் மீ. சரத் ராம் ஆகியோர் கண்டுபிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, ஆய்வாளர் நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு கூறியதாவது, ‘விருதுநகர் மாவட்டத்தில் கோவிலாங்குளம், தொப்பலாக்கரை, குறண்டி, இருஞ்சிறை, புல்லூர், பாலவநத்தம், பந்தல்குடி, பாறைக்குளம், திருச்சுழி, புலியூரான், ஆவியூர், இருப்பைக்குடி, குலசேகரநல்லூர், சேத்தூர், சென்னிலைக்குடி, கீழ் இடையன்குளம், கிள்ளுக்குடி உள்ளிட்ட இடங்களில் சமண சமயம் பரவி இருந்ததற்கான தடயங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மணவராயனேந்தலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகாவீரர் சிற்பம் பாதி மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. கருங்கல்லால் ஆன இச்சிற்பத்தில் மகரத் தண்டுகளுடன் கூடிய சிம்மாசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். அவருக்குப் பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டம் உள்ளது. அதன் மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்திய விநோதம், சகல பாசனம் ஆகியவற்றைக் குறிக்கும் முக்குடை அமைப்பு உள்ளது. முக்குடை அழகிய கொடிகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மகாவீரரின் இருபுறமும் இரு இயக்கர்கள் உள்ளனர். இதன் காலம் கி.பி.11-ம் நூற்றாண்டாகக் கருதலாம். திருப்புல்லாணியிலிருந்து கமுதி, திருச்சுழி வழியாக மதுரை செல்லும் பெருவழிப் பாதையில் அநேக இடங்களில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன.

சிற்பம் உள்ள இடத்தைச் சுற்றிலும் இரும்புக் காலத்தைச் சேர்ந்த வழுவழுப்பான கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வூர் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலம் முதல் மக்கள் குடியிருப்பாக இருந்துள்ளதற்கு இவை ஆதாரமாக உள்ளன. பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் இச்சிற்பத்தை அரசு அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்வதாக’ அவர் தெரிவித்தார்.