சிவகங்கையை அடுத்த அரசனேரி கீழமேடு பேச்சி குளம் கண்மாய் பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரும்பு உருக்காலை எச்சம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை தொல் நடை குழுவைச் சேர்ந்த அரசனேரி கீழமேடு கா.சரவணன் சிவகங்கை தொல் நடைக் குழுவிற்கு பேச்சி குளம் கண்மாய் பகுதியில் வித்தியாசமான கற்கள் கிடப்பதாக தகவல் கொடுத்ததின் பெயரில் அவ்விடத்திற்கு சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, தலைவர் நா.சுந்தரராஜன், செயலர் நரசிம்மன் மற்றும் சேதுபதி, பிரவீன், கார்த்தி ஆகியோர் அவ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது,
இரும்பு உருக்கு ஆலை:
பெருங்கற்காலத்தில் இரும்பை உருக்கும் அறிவை தமிழர்கள் பெற்றிருந்தனர். ஒவ்வொரு சிற்றூர் பகுதிகளிலும் தமக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய இயற்கை சார்ந்த சூழலை அன்றைய மக்கள் பெற்றிருந்ததாக கருத முடிகிறது. தமக்கு தேவையான பானைகளை வனைந்து கொள்ளுதல் மர வேலைகளை செய்து கொள்ளுதல் போன்றவற்றைக் காண முடிகின்றன. அதைப்போல இரும்பு உருக்கும் தொழில்நுட்பத்தையும் தமிழ்நாடு முழுமையாக பெருங்கற்காலத்தில் பரவலாக மக்கள் பயன்படுத்தியமை ஆய்வுகளால் தென்படுகின்றன.
வட்ட வடிவ உலைகள்:
தரையோடு ஒட்டியதாக வட்டவடிவிலான உலைகள் சிதைவுற்ற நிலையில் காணப்படுகின்றன. இவை பேச்சிகுளம் கண்மாய் பகுதியில் தண்ணீர்க்குள்ளும் தரையிலும் காணக் கிடைக்கின்றன.
இரும்புக் கழிவு குவியல்கள்:
இரும்பை செம்பிராங்கல் போன்ற கல்லாலான மூலப் பொருளிலிருந்து பிரித்து எடுத்திருப்பது தெரிய வருகிறது. மேலும் அவைகளை இந்த உலைகள் மூலம் கொதி நிலைக்கு கொண்டு வந்து கற்களில் இருந்து இரும்பைப் பிரித்தெடுத்து இருக்கலாம். அப்படியான குவியல்கள் இரும்பு கழிவு குவியல்களாக இங்கு காணக்கிடைக்கின்றன.
சுடுமண் குழாய்கள்:
சுடுமண்ணால் ஆன குழாய்கள் சிதைவுற்று காணக்கிடைக்கின்றன. இவை உலை அமைப்புகளை எரியூட்டுவதற்காக துருத்தி போல தூரத்திலிருந்து காற்று கொண்டுபோக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் மேலும் இரும்புகளை உருக்கி கம்பி வடிவமாக கருவிகள் செய்வதற்கும் குழாய் அமைப்பை பயன்படுத்தி இருக்கலாம்.
அரசனேரி கீழமேடு:
சிவகங்கையை அடுத்த விரிவாக்க பகுதியாக இது இருந்தாலும் அரசன் ஏரி கீழமேடு என்பது அரசனையும் தொன்மை சார்ந்த மேட்டையும் குறிப்பதாக கருதமுடிகிறது. மேலும் இந்த பேச்சி குளம் கண்மாயை ஒட்டியுள்ள கப்பரோட்டுகாளி முனீஸ்வரர் கோவில் போன்ற பகுதிகளிலும் பழமையான ஓடுகள் சிதைந்த நிலையில் பெருவாரியாக தரை மேற்பரப்பில் காணக் கிடைக்கின்றன.
கல்லங் குத்தல்:
இப்பகுதி மக்கள் இரும்பு கழிவுகள் நிறைந்து கிடைக்கக்கூடிய இந்த மேட்டுப் பகுதியை கல்லங்குத்தல் என பேச்சு வழக்கில் அழைக்கின்றனர். மேலும் புதுக்கோட்டை பகுதியில் இரும்பு உருக்கு ஆலைகள் தொடர்ச்சியாக இருந்ததற்கான சான்றாக பதிமூன்றாம் நூற்றாண்டு பாண்டிய மன்னன் வீரபாண்டியன் காலக் கல்வெட்டு செய்தியும் புதுக்கோட்டை சமஸ்தான புள்ளிவிவர செய்திக் குறிப்பும் ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து சிவகங்கைப் பகுதியிலும் இரும்பு உருக்காலை இருந்ததற்கான எச்சங்களை வெளிப்பட்டு இருப்பதில் சிவகங்கை தொல்நடைக் குழு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. மேலும் இதை தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வுக்குட்படுத்தி விரிவான செய்திகளை தரவும் பாதுகாக்கவும் சிவகங்கை தொல் நடைக் குழு கோரிக்கை வைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.