தமிழ்நாட்டில் முதன்முறையாக யூதர்களின் சூதபள்ளியைக் குறிக்கும் கி.பி.13-ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டை ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுத்துள்ளது.
வாலாந்தரவைக் கல்வெட்டு:
ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் பழமையான ஒரு கல்வெட்டு இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த ப.சதீஷ் அளித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அதை படி எடுத்து ஆய்வு செய்தார். இதுபற்றி கல்வெட்டு ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது, சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் வாலாந்தரவை செ.புல்லாணி என்பவரின் தந்தை கிணறு கட்டுவதற்காக கடற்கரை பாறைக் கற்களை பெரியபட்டினத்திலிருந்து வாங்கி வந்துள்ளார். அதனுடன் கல்வெட்டு உள்ள இக்கல்லும் வந்துள்ளது. துணி துவைக்கப் பயன்படுத்தியதால் இது வெளியில் கிடந்துள்ளது. 3 அடி நீளமும் 1 அடி அகலமும் கொண்ட இக்கல் தூணில் 50 வரிகளில் நான்கு பக்கத்திலும் கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டு தகவல்:
ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கும் இக்கல்வெட்டில் சூதபள்ளியான ஐந்நூற்றுவன் பெரும் பள்ளிக்கு தானமாக வழங்கப்பட்ட காணியாவதுக்கு (உரிமை நிலத்தின்) எல்லை சொல்லும் போது, அங்கிருந்த பள்ளிகள், நிலங்கள், தோட்டங்கள் குறிப்பிடப்படுகின்றன. கிழக்கு எல்லையில் வளைச்சேரி, முடுக்கு வழி சொல்லப்படுகிறது. தெற்கு எல்லையில் திருமுதுச்சோழசிலை செட்டியார், பதிநெண்பூமி செயபாலன், கூத்தன் தேவனார் ஆகியோரின் தோட்டங்களும், மேற்கு எல்லையில் நாலு நாட்டாநி சோணச்சந்தி, ஸ்ரீசோழப்பெருந்தெரு, தரிசப்பள்ளி மதிளி, பிழார் பள்ளி, தரிசாப்பள்ளி தென்மதிள் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
நாலு நாட்டாநி என்ற சொல் நானாதேசி என்பதன் தமிழ் வடிவமாக உள்ளது. இங்கு ஐந்நூற்றுவர், பதிநெண்பூமி, நானாதேசி ஆகிய வணிகக்குழுக்களுக்குச் சொந்தமான இடங்கள், தோட்டங்கள் இருந்துள்ளன.
சூதப்பள்ளி:
பெரியபட்டினத்தில் சூதபள்ளி, தரிசப்பள்ளி, பிழார்பள்ளி ஆகிய பள்ளிகள் இருந்ததாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சைவ, வைணவக் கோயில்கள் தவிர்த்த பிற மத வழிபாட்டிடங்கள் பள்ளி என அழைக்கப்பட்டுள்ளது.
இதில் சூதபள்ளி என்பது யூதர்களின் பள்ளி ஆகும். தமிழில் ‘ய’ எனும் எழுத்து மேற்கத்திய மொழிகளில் ‘ச’ வாகத் திரியும். ஆகவே சூதபள்ளி என்பது யூதர்களின் பள்ளி ஆகும். ஐந்நூற்றுவர் எனும் வணிகக்குழுவினர் யூதர்களுக்கு பெரியபட்டினத்தில் பள்ளி கட்டிக் கொடுத்துள்ளனர். பெரியபட்டினத்தில் இருந்த மரியம் என்ற யூதப் பெண்ணின் ஹீப்ரு மொழி கல்லறைக் கல்வெட்டு மத்திய தொல்லியல் துறையின் 1946-47-ம் ஆண்டறிக்கையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் கோட்டயம் செப்பேடுகளில் குறிப்பிடப்படும் தரிசப்பள்ளி சிரியன் கிறித்துவப்பள்ளியாகக் கருதப்படுகிறது. அதேபோல் வாலாந்தரவைக் கல்வெட்டிலும் தரிசப்பள்ளி குறிப்பிடப்படுகிறது. இதை பெரியபட்டினத்தில் இருந்த சிரியன் கிறித்துவப்பள்ளி எனலாம். மேலும் கல்வெட்டில் உள்ள பிழார்ப்பள்ளி என்ற சொல்லில் ‘பி’ என்ற எழுத்து இருந்த இடம் சேதமடைந்துள்ளது. ழ-ம வாகத் தேய்ந்துள்ளது. கல்வெட்டில் மார்ப்பள்ளி என உள்ளதை பிழார்ப்பள்ளி என படிக்கலாம்.
பெரியபட்டினம் ஜலால் ஜமால் என்ற முஸ்லிம் பள்ளி பிற்காலப் பாண்டியர்களின் வெட்டுப் போதிகைகள், சதுரத் தூண்களுடன் கி.பி.13-ம் நூற்றாண்டு கட்டிடக்கலை அமைப்பில் கடற்கரைப் பாறைகளால் கட்டப்பட்டுள்ளது. வாலாந்தரவை கல்வெட்டு, கட்டிட கலை அமைப்பு மூலம் பெரியபட்டிணம் ஜலால் ஜமால் பள்ளிதான் திருப்புல்லாணி கோவில் கல்வெட்டில் சொல்லப்படும் பிழார்ப்பள்ளி என்பதை உறுதிப்படுத்தலாம்.
சோழநாட்டு வணிகர்கள் பெரியபட்டினத்தில் தங்கியிருந்த தெரு ஸ்ரீசோழப்பெருந்தெரு எனப்படுகிறது. தானமாக வழங்கிய நிலத்துக்கு காணி கல் வெட்டி நாட்டிக் கொள்ள சொல்லப்பட்டுள்ளது. இறையிலி, மனைவரி, பெரு நாங்கெல்லைக்கு ஆகிய சொற்களும், தொன்றுதொட்டு வரும் வழக்கம் என்ற பொருளில் பண்டாடு பழநடை என்ற சொல்லும் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. எழுத்தமைதியைக் கொண்டு இதை கி.பி.1200-1250க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகக் கூறலாம். இவ்வாறு அவர் கூறினார்.