Skip to main content

12,000 ஆண்டுகள் தொடர் வரலாற்றுச் சிறப்புடன் நுண்கற்கால கருவிகள் கண்டுபிடிப்பு! 

Published on 03/01/2022 | Edited on 03/01/2022

 

Discovery of fine stone tools with a series of 12,000 years of historical significance!

 

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே விழுப்பனூரில் நுண்கற்காலம், புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 12,000 ஆண்டுகள் தொடர் வரலாற்றுச் சிறப்புகொண்ட இப்பகுதியை அகழாய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

திருவில்லிபுத்தூர் அருகே விழுப்பனூர் ஊராட்சியில் உள்ள புதிய வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையத்தின் எதிரில், கொல்லம், மதுரை தேசிய நெடுஞ்சாலையின் கிழக்குப் பகுதியில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சு.சிவகுமார், ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை கல்லூரி முதுகலை தமிழ்த்துறை மாணவி வே.சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் து.மனோஜ் ஆகியோர் கள மேற்பரப்பாய்வு செய்தனர். அப்போது நுண்கற்காலத்தைச் சேர்ந்த ஒரு சுரண்டி, புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கற்கோடரி, முதுமக்கள் தாழியின் உடைந்த ஓடுகள், இரும்புத்தாதுக்கள், இரும்புக்கழிவுகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. 

 

Discovery of fine stone tools with a series of 12,000 years of historical significance!

 

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது; “இங்கு கண்டெடுக்கப்பட்ட நுண்கற்காலக் கருவியின் நீளம் 4 செ.மீ. அகலம் 4.5 செ.மீ. ஆகும். இது செர்ட் வகை கல்லால் செய்யப்பட்ட சுரண்டி ஆகும். நுண்கற்காலம் கி.மு.10,000 முதல் கி.மு.3,000 வரையிலானது. நுண்கற்காலக் கருவிகள் அளவில் மிகச்சிறியவை. பழைய கற்காலத்தில் கருவிகள் செய்யும்போது உடைந்த சிறிய துண்டுகளை நுண்கற்காலத்தில் அம்புமுனைகள், சிறுகத்திகள், சுரண்டிகளாகப் பயன்படுத்தியுள்ளனர்.

 

இங்கு கண்டெடுக்கப்பட்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்த சிறிய கற்கோடரியின் நீளம் 5 செ.மீ., அகலம் கீழ்ப்பகுதியில் 5.5 செ.மீ., மேல்பகுதியில் 3 செ.மீ., தடிமன் 1.5 செ.மீ. அளவில் உள்ளது. கருங்கல்லால் ஆன இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனர். மரத்தாலான தடியில் கட்டி இதை ஆயுதமாகவும், பிறவற்றுக்கும் பயன்படுத்துவார்கள். புதிய கற்காலம் கி.மு.3000 முதல் கி.மு.1000 வரையிலானது. மனிதன் நாடோடி வாழ்க்கையில் இருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறிய இக்காலத்தில், வழுவழுப்பான கற்கருவிகள், கையாலும், சக்கரத்தாலும் செய்யப்பட்ட மட்பாண்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளான். 

 

இங்கு இரும்பு சார்ந்த பொருட்கள் உள்ளதால் இரும்பை உருக்கி பயன்படுத்த அறிந்திருந்தனர் எனலாம். நுண்கற்காலம், புதிய கற்காலக் கருவிகளோடு, பெருங்கற்கால முதுமக்கள் தாழிகளும் இங்கு உள்ளதால் நுண்கற்காலம் முதல் பெருங்கற்காலம் வரையிலான சுமார் 12,000 ஆண்டுகள் தொடர் வரலாற்றுச் சிறப்புடன் இவ்வூர் விளங்கி இருக்கிறது. இங்கு அகழாய்வு செய்து வரலாற்றை வெளிக்கொணர வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

 

சமீபத்தில் இதன் மேற்குப் பகுதியில் முதுமக்கள் தாழிகள், கல்திட்டைகளைத் தமிழ்நாடு தொல்லியல் துறை அடையாளம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.