Skip to main content

ஆர்யாவுக்கு பெண் பார்க்கும் டிவி நிகழ்ச்சி -இன்னொரு பிக்பாஸா?

Published on 21/02/2018 | Edited on 21/02/2018

தமிழில் புதியதாக அறிமுகமாகியுள்ள கலர்ஸ் தொலைக்காட்சி பல்வேறு தொலைக்காட்சி தொடர்களையும், ரியாலிட்டி ஷோக்களையும் தற்போது தமிழில் ஒளிபரப்பவுள்ளது.
 

arya


தமிழகத்தில் மிகவும் வரவேற்பைப்பெற்ற ''நாகினி'' தொடர் இவர்களுடைய தயாரிப்பே, தற்போது பல்வேறு தமிழ் தொடர்களையும் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள கலர்ஸ், தேனி மற்றும் பொள்ளாச்சியில் மாவட்டங்களை முகாமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த சேனலில் ஒளிபரப்ப ஆயத்தமாக உள்ள ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சிதான் ''எங்கள் வீட்டு மாப்பிள்ளை". ஆர்யா தன் வாழ்க்கை துணையை தேடும்  இடமாக அந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த தொலைக்காட்சியின் தமிழ் விளம்பர தூதராகவும்  ஆர்யா தேர்வுசெய்யப்பட்டுள்ளார். நிகழ்ச்சியின் இறுதியில் நடிகர் ஆர்யா தன்  வாழ்க்கை துணையை தேர்தெடுப்பார் என அறிவித்துள்ளது. இதற்காக அந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள கிட்டத்தட்ட 7000 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் அதிலிருந்து 16 பெண்களை தேர்வுசெய்து நிகழ்ச்சியை தொடங்கவிருக்கிறது கலர்ஸ் தமிழ்.
 

arya


தற்போது நிறைய டிவி ரியாலிட்டி ஷோக்கள் டி.ஆர்.பி.(TRP) எனப்படும் தரம் முந்துதலுக்காக இப்படி ஏகப்பட்ட பரபரப்புகளை உருவாக்கும்  நிகழ்ச்சிகளை அதிலும் சினிமா பிரபலங்களின் சொந்த விருப்பு, வெறுப்புகளை சுவாரஸ்யப்படுத்தி நிகழ்ச்சிகளை தயாரித்து  ஒளிபரப்புகிறது. அண்மையில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ''பிக்பாஸ்'' என்ற ஷோ பெரும் எதிர்பார்ப்பையும் அதேபோல் எதிர்ப்பையும் சந்தித்தது. அதையும் தாண்டி எகிறும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது ''எங்கள் வீட்டு மாப்பிளை''.

ஏற்கனவே அமெரிக்காவில் ABC-யில் ஒளிபரப்பப்பட்ட ''THE BACHELORS'' என்ற ஷோவின் அச்சு அசல் காப்பிதான் இந்த எங்கள் வீட்டு மாப்பிளை . இந்த நிகழ்ச்சியை வடிவமைத்தவர் மைக் ப்ளெய்ஸ். கிரிஷ் அரிசொன் வழங்கிய இந்த நிகழ்ச்சி அமரிக்காவின் ஒரு அடல்ட் ஷோ ஆகும். அந்த ஷோவில் வரும் பிரபலம் சில பிரபல நடிகைகளுடன் சேர்ந்து பல்வேறு டாஸ்க்குகளை (TASK) எதிர்கொள்வார். இடையிடையே எலிமினேஷன்கள் என பரபரப்பை ஏற்படுத்தி கடைசியில் தன் மனதிற்கும், குணத்திற்கும் ஒத்த பெண் பிரபலத்தை தேர்ந்தெடுத்து  திருமணம் செய்துகொள்வார். இதேபோன்ற ஒரு ஷோ தமிழில் வரப்போகிறதென்றால் கண்டிப்பாக சர்ச்சைக்கு பஞ்சமிருக்காது ஏனெனில் அமெரிக்க போன்ற நாடுகளின் கலாச்சாரம் என்பது வேறு, நம் கலாச்சாரம் வேறு. எனவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமிழில் தேவையா? என ஒரு  கேள்வியும் எழுகிறது. ஏற்கனவே பிக் பாஸ், சொல்வதெல்லாம் உண்மை போன்ற தனி மனிதனின் பிரச்சனைகளையும் கருத்துக்களையும் கொண்டு சுவாரசிய தீனிபோடும் டி.வி. நிகழ்ச்சிகள் பல விமர்சனங்களை பெற்றிருக்க இதுபோன்ற நிகழ்ச்சி தேவையா, இது கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்குமா? என்ற ஒரு கேள்வியே எழுகிறது.பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story

நடிகர் ஆர்யா போல் நடித்து பணம் பறிப்பு... சென்னையில் இருவர் கைது!

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

Two arrested in Chennai for extorting money by acting like actor Arya

 

இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண், நடிகர் ஆர்யா தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னிடம் 70 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, தன்னை ஏமாற்றி விட்டார் என்று நடிகர் ஆர்யா மீது புகார் தெரிவித்திருந்தார். ஜெர்மன் நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வசித்து வரும் விட்ஜா, ஆர்யா மீது பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் அளித்துள்ள புகாரில், பணத்திற்கு கஷ்டப்படுவதாகக் கூறிய ஆர்யா, தன்னை விரும்புகிறேன் என்றும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்றும் கூறியதாகத் தெரிவித்திருந்தார். பிரபல நடிகரான ஆர்யா மீது, பெண் ஒருவர் ஏமாற்றிவிட்டதாகப் புகார் அளித்தது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகர் ஆர்யாவும் அண்மையில் போலீசார் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.

 

இந்நிலையில் நடிகர் ஆர்யா போல் நடித்து இலங்கை பெண்ணிடம் பணம் பறித்த சென்னைச் சேர்ந்த இருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் உடந்தையாக இருந்த ஹூசைனி பையாக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

 

Next Story

திருக்கோவில் தொலைக்காட்சி தொடங்குவதற்குத் தடை கோரிய வழக்கு!- தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு!

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

temples tv chennai high court judgement postponed

திருக்கோவில் தொலைக்காட்சித் தொடங்குவதற்கு, இந்து சமய அறநிலையத்துறை, பொது நல நிதியைப் பயன்படுத்த தடை கோரிய வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

 

தமிழக அறநிலையத்துறை சார்பில், திருக்கோவில்களின் விழாக்களை ஒளிபரப்புவதற்காக, 8.77 கோடி ரூபாய் செலவில் ‘திருக்கோவில்’ என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடங்குவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அறநிலையத்துறை தொலைக்காட்சி துவங்க, பொது நல நிதியைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும், இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘எந்த விதிகளையும் பின்பற்றாமல் அறநிலையத்துறை நிதியைப் பயன்படுத்தி, தொலைக்காட்சி தொடங்கப்படுகிறது. அறநிலையத்துறையின் பொது நல நிதியில் இருந்து கோவில்கள் சீரமைப்புக்கு மட்டுமே நிதியைப் பெற முடியும். மேலும், பொது நல நிதியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும், ஆட்சேபங்கள் கோர வேண்டும். இந்த விதிகள் பின்பற்றப்படவில்லை’ என வாதிட்டார். 

 

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், ‘திருக்கோவில் தொலைக்காட்சித் தொடங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. எந்த விதிகளும் மீறப்படவில்லை. கோவில்களுக்கு நிதியுதவி வழங்குவதாக இருந்தால்தான் ஆட்சேபங்கள் பெற வேண்டுமே தவிர, தொலைக்காட்சி துவங்குவது தொடர்பாக ஆட்சேபங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே, தொலைக்காட்சி தொடங்குவதை எதிர்த்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது’ என வாதிட்டார். 

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.