Skip to main content

அதிமுக - பாஜக கூட்டணியில் சிக்கல்!  ரகசியமாக நடக்கும் பாஜக யுக்திகள்! 

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

ddd

 

திமுக கூட்டணியில் சீட் விவகாரத்தால் அதிருப்தியைச் சந்திக்கும் காங்கிரஸ் கட்சியைப் போல, அதிமுக கூட்டணியில் அதே அதிருப்தியைச் சந்தித்து வருகிறது பாஜக! இதனால், அதிமுக - பாஜக கூட்டணி இப்போது வரை உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையே, நாளுக்கு நாள் தங்களின் யுக்தியை மாற்றிக்கொண்டு வருகிறது பாஜக. அந்த வகையில் தற்போதைய யுக்தி, அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறலாமா? என்பதுதான். 

 

இதுகுறித்து பேச்சுவார்த்தையில் நடக்கும் விசயங்களை நம்மிடம் பகிந்துகொண்ட பாஜக மேலிட தொடர்பாளர்கள், “திமுக கூட்டணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அமித்ஷாவுக்கு கிடைத்துள்ள சர்வேக்களின் ரிப்போர்ட் சொல்கிறது. அதனால், திமுகவின் வெற்றியைத் தடுக்க வேண்டும் என அமித்ஷா விரும்புகிறார். 

 

அதற்காக, அதிமுகவுடன் தினகரனின் கட்சியை இணைக்க வேண்டும் என இபிஎஸ் - ஓபிஎஸ்சிடம் பேசினார் அமித்ஷா. எடப்பாடி பழனிசாமி இதற்கு சம்மதிக்கவில்லை. இந்த நிலையில், அதிக சீட்டுகள் பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என்கிற திட்டத்துடன் எடப்பாடி பழனிசாமியிடமும், அதிமுக பேச்சுவார்த்தை குழுவினரிடமும் விவாதித்தார்கள் தமிழக பாஜக தலைவர்கள். 

 

இதில் பல்வேறு  எண்ணிக்கை விபரங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ஆனால், உடன்பாடு எட்டவில்லை. கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில், தனக்கு 35 சீட்டுகள் வேண்டும் என உறுதியாகச் சொன்னது பாஜக. ஆனால், அதிமுக தரப்பில் 22 வரை கொடுக்க முன் வந்துள்ளது. இதனை பாஜக ஏற்கவில்லை. இதனால் தற்போது வரை இழுபறி நீடிக்கிறது. 
                  

 AIADMK

 

மீண்டும் 7ஆம் தேதி அமித்ஷா சென்னைக்கு வருகிறார். அதற்குள் எண்ணிக்கையும், தொகுதிகளும் முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என எதிர்பார்க்கிறார். ஆனால், அதற்கு இடம் கொடுக்காமல் பிடிவாதமாக இருக்கிறது அதிமுக. 

 

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே, வேறு ஒரு யுக்தியையும் செயல்படுத்த ஆலோசனை ரகசியமாக நடக்கிறது. அதாவது, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி பாஜக - தேமுதிக - தினகரனின் அ.ம.மு.க. மற்றும் சமுதாய அமைப்புகளான சில கட்சிகள் ஆகியவற்றை இணைத்து ஒரு கூட்டணியை உருவாக்கலாமா? என்று ஆலோசிக்கப்படுகிறது.

 

இப்படி பாஜக தலைமையில் கூட்டணி உருவானால், அதிமுக அமைச்சர்கள் பலருக்கும் சட்டரீதியிலான சிக்கல்கள் உருவாகும். சிலர் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதேசமயம், பாஜகவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் சீட் எண்ணிக்கையும் தொகுதிகளும் கொடுக்க அதிமுக சம்மதித்து, அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டால், தினகரன் கட்சியைத் தேர்தலில் போட்டியிட வைக்காமல் இருக்க தினகரனுக்கு அழுத்தம் தரப்படும். 

 

பாஜகவின் அந்த யோசனையை தினகரன் ஏற்று, தேர்தலை அவர் புறக்கணித்தால், அதற்குப் பிரதிபலனாக, தேர்தல் முடிந்ததும் சசிகலா - தினகரன் தலைமையின் கீழ் அதிமுகவைக் கொண்டு வர பாஜக உதவி செய்யும் என்கிற ஆலோசனையையும் பாஜக மேலிடம் விவாதித்துள்ளது. 

 

அதனால், அதிமுக தலைமையின் முடிவுகளைப் பொறுத்தே இந்த ஆலோசனையில் எதை நடைமுறைப்படுத்துவது என்று ஓரிரு நாளில் பாஜக தலைமை முடிவு செய்யும்” என ரகசியமாக நடந்து வரும் யுக்திகளை விவரிக்கிறார்கள் பாஜக மேலிட தொடர்பாளர்கள்.