Skip to main content

மத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு? 

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

bjp


இந்தியாவில் இனி மாநிலங்களே தேவையில்லை என்கிற ரீதியில் மாநில அரசுகளின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து வரும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அடுத்த ஆயுதம், வரைவு மின்சார சட்டத் திருத்தம். மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேறுவதன் மூலம் ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் கிடைக்கும் இலவச மின்சாரம் ரத்தாகும் என்பதுடன் மின் கட்டணம் தாறுமாறாக உயரும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் தமிழக எரிசக்தித் துறையினர்.


மோடி அரசின் இந்த அபாயகரமான சட்டத்திருத்த மசோதாவை தி.மு.க., காங்கிரஸ், பாமக, சி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். பாஜக ஆளாத மாநில அரசுகளும் இந்தச் சட்டத் திருத்தத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கின்றன.
 

 

vel


இந்தச் சூழலில், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘’மத்திய அரசின் மின்சார திருத்தச் சட்டம், கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராகவும் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதாகவும் இருக்கிறது. கரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு இருப்பதால் மசோதா மீது ஆலோசிக்க அவகாசம் தேவை. அதனால் மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசுக்கும் ஏழைகளுக்கும் பல கோணங்களில் ஆபத்தை உருவாக்கும் இந்தச் சட்டத்திருத்தத்தைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டிய நிலையில், பிரதமர் மோடிக்கு வலிக்காத வகையில் மென்மையாகக் கடிதம் எழுதியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், "நமது அரசியலமைப்பில் மத்திய பட்டியல், மாநில பட்டியல், பொதுப்பட்டியல் என 3 வகையான அதிகாரங்கள் இருக்கின்றன. பொதுப்பட்டியலில் மத்திய-மாநில அரசுகளுக்கான பொது அதிகாரம் உள்ளது. ஆனால், மத்தியில் மோடி பிரதமரானதிலிருந்தே பொதுப்பட்டியலில் உள்ள மாநில அரசுகளுக்கான உரிமைகள் பறிபோகின்றன. கல்வி, சுகாதாரம், நீர் வளம், வரிவசூல் உள்ளிட்டவைகளைக் கடந்த காலங்களில் பறித்துக் கொண்ட மோடி, தற்போது மின்சாரத்தில் கை வைத்திருக்கிறார்.
 

bjp


இந்தச் சட்டத் திருத்தத்தால் கலைஞர் ஆட்சியில் கொடுக்கப்பட்ட விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழை குடிசைகளுக்கான இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம், 100 யூனிட் இலவச மின்சாரம் என அனைத்தும் ரத்தாகும் ஆபத்து இருக்கிறது. இதைத் தவிர, மின்சார வாரியத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் சூழலும் இருப்பதால் மின் கட்டணம் உயரும்.


இலவச மின்சாரத்திற்குப் பதிலாக அதற்கான பணத்தைப் பயனாளிகளின் வங்கியில் மாநில அரசுகள் போட வேண்டும்; இதனால், இலவச மின்சாரத்தைப் பெற்ற ஏழைகளும் விவசாயிகளும் மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டியது வரும் என்பது உள்பட ஏகப்பட்ட ஆபத்துகள் இருக்கின்றன. இதனை எதிர்க்கும் துணிச்சல் எடப்பாடி அரசுக்கு இல்லை’’ என்கிறார்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் நாகல்சாமியிடம் நாம் பேசியபோது, ‘’மின்சார வாரியத்தைத் தனியார் மயமாக்கும் முயற்சியின் முதல் கட்டம்தான் இந்தச் சட்டத்திருத்தம். மின் நிலையங்களை அமைப்பது, மின்சாரத்தை உற்பத்தி செய்வது, அதனை வாங்குவது, விற்பது என அனைத்துமே ஒப்பந்தத்தின் (காண்ட் ராக்ட்) மூலமாகவே செய்கிறது தமிழக மின்சார வாரியம்.

ஒப்பந்தங்களுக்கும் மின்சார வாரியத்துக்கும் இடையிலான பிரச்சனைகளை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் மின்சார ஒழுங்கு முறை ஆணையம். ஆனால், அந்த ஒப்பந்தங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்வதற்கான வழிவகைகள் மத்திய அரசு கொண்டுவரும் திருத்தச் சட்டத்தில் இருக்கிறது. இதற்காக, ’மின்சார ஒப்பந்தம் அமலாக்க ஆணையம்’ (Electricity Contract Enforcement Authority) என்கிற புதிய அமைப்பை உருவாக்குகிறார் பிரதமர் மோடி.

 


அதாவது, தற்போதுள்ள நடைமுறைப்படி மின்வாரியத்தை லைசன்ஸ்தாரராக வைத்திருக்கிறது ஒழுங்குமுறை ஆணையம். அதன்மூலம், தமிழகம் முழுவதும் வாரியம்தான் மின்சாரத்தை விநியோகிக்கிறது. ஆனால், திருத்தச் சட்டத்தின் மூலம் இந்த முறையை உடைத்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சப்-லைசன்ஸ் தரவிருக்கிறார்கள்.

 

 

samy


இது, அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு வழி வகுப்பதுடன் சீர்கேடுகளையும் உருவாக்கும். மேலும், மின் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்திடம் மின் விநியோக உரிமை செல்வதுடன், மின்கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரமும் அவர்களிடமே செல்லும்.

காற்றாலை மற்றும் சூரிய மின்சார உற்பத்திக்கு முக்கியத்துவம் தருவதற்காக, புதுப்பிக்கத்தக்க மின்சாரம் எனும் புதிய கொள்கையையும் கொண்டு வருகிறது மத்திய அரசு. ஒவ்வொரு மாநிலமும் மொத்த மின் விநியோகத்தில் காற்றாலை மற்றும் சூரியமின் சக்தியையும் விநியோகிக்க வேண்டும் என விதிகள் ஏற்கனவே இருக்கிறது. ஆனால், எத்தனை சதவீதம் விநியோகம் செய்வது என்பதை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம். தற்போதைய திருத்தச் சட்டத்தில், 20 சதவீதம் கட்டாயம் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுவதன் மூலம், தனியார் உற்பத்தி செய்யும் காற்றாலை மின்சாரத்தையும் சூரியஒளி மின்சாரத்தையும் கொள்முதல் செய்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அதேபோல, என்.டி.பி.சி., என்.எல். சி.யிடமிருந்து வாங்கும் மின்சாரத்திற்கு பேங்க் கேரண்டியை வாரியம் கொடுக்கும். ஆனா, குறிப்பிட்ட காலத்திற்குள் கேரண்டி தொகையைக் கொடுக்க முடியாத சூழலும் இருக்கிறது. அதற்காக, மின்சாரம் கொடுப்பதை நிறுத்திவிடமாட்டார்கள். தற்போது, உத்தரவாத தொகையையோ, வைப்புத்தொகையையோ வாரியம் தரவில்லை எனில் மின்சாரம் வழங்கக்கூடாது என்கிற திருத்தத்தைச் செய்துள்ளனர். இதனால், வாரியம் பணம் கொடுத்தால்தான் மின்சாரம் கிடைக்கும்.

மிக முக்கியமாக, அரசின் இலவச மின்சாரத் திட்டத்துக்கான மானியத்தை வாரியம் இனி வழங்காது; அதனைச் சம்மந்தப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் மாநில அரசே கொடுத்துவிட வேண்டும் என்கிறது திருத்தச் சட்டம். இது, ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் சுமை. ஒரு கட்டத்தில் இந்த மானியத்தை அரசு தாமதப்படுத்தலாம் அல்லது நிறுத்திவிடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.

கடந்த 2004- இல் ஜெயலலிதா ஆட்சியில், தலைமைச்செயலாளராக இருந்த நாராயணன், விவசாயிகளின் இலவச மின்சாரத்திற்கான மானியத் தொகையை அவர்களுக்கு மணி ஆர்டராக அனுப்பி விடலாம் எனச் சொன்ன யோசனையை ஏற்று, அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், 95 சதவீதம் அந்த மணி ஆர்டர்கள் திரும்பி வந்துவிட்டன. காரணம், விவசாயிகளின் மின் கனெக்சன் அப்பா, தாத்தா பெயர்களில் இருந்துள்ளதால், அதில் பல பேர் இறந்து போய்விட்டனர் என்பதுதான். இதனால் மின் கட்டணம் கட்டாதவர்களின் கனெக்சன் கட் பண்ணப்பட்டதால் விவசாயிகள் கொந்தளித்தனர். ஒரே வாரத்தில் தனது உத்தரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் ஜெயலலிதா.

திருத்தச் சட்டத்தில், எல்லைகளில் உள்ள வெளிநாடுகளுக்கான மின் வணிகம் என்கிற கொள்கையைப் புகுத்தியுள்ளனர். இதன் மூலம், மாநிலங்களின் மின் தேவையை மத்திய அரசு நிறைவேற்றுகிறதோ இல்லையோ பாகிஸ்தான், பூடான், நேபாளம், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு மின்சாரத்தை இந்திய அரசு விற்க முடியும். தற்போது ஒழுங்குமுறை ஆணையம், மேல்முறையீடு தீர்ப்பாயம், புதிதாகக் கொண்டு வரப்படும் மின்சார ஒப்பந்த அமலாக்க ஆணையம் என 3 அமைப்புகளுக்கும் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க உயர்நிலை தேர்வு கமிட்டியை ஏற்படுத்துகிறது மத்திய அரசு. இதிலும் மாநில அரசுகளின் உரிமை பறிக்கப்பட்டு, பிரதமர் யாரை நியமிக்க நினைக்கிறாரோ அவர்கள் நியமிக்கப்படுவார்கள்‘’ எனச் சுட்டிக்காட்டுகிறார்.

மோடி அரசு கொண்டுவரும் மின்சார திருத்தச் சட்டத்தின் விளைவுகள் இப்படி இருக்க, இதுகுறித்து பாஜகவின் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மனிடம் சில கேள்விகளை முன்வைத்தபோது, ‘’இந்தியாவில் 18 மாநிலங்களில் மின்சார வாரியம் நட்டத்தில் இயங்குகிறது. அதில் மிக முக்கியமானது தமிழகம். இன்றைய தேதியில் 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி கடனில் இருக்கிறது மின்சார வாரியம். விவசாயிகளுக்காக இலவச மின்சாரம், வீடுகளுக்கான இலவச மின்சாரம் உள்ளிட்ட பல வகைகளிலும் வருசத்துக்கு 11 ஆயிரம் கோடி நட்டத்தைச் சந்திக்கிறது வாரியம். இதையெல்லாம் சரிசெய்ய மத்திய அரசு சில அதிரடி முடிவுகளை எடுக்கத் துணிகிறது. அதில் ஒன்றுதான் மின்சார சட்டத்திருத்தம். இனி, எந்த மாநிலத்திலும் மின்சாரத்தை இலவசமாகக் கொடுக்கக் கூடாது என்று மத்திய அரசின் முடிவு. கொடுத்துதான் ஆக வேண்டுமெனில் அதற்காக மாநில அரசு, பட்ஜெட்டில் நிதியை ஒதுக்கி அதனை நேரடியாக மக்களுக்கே கொடுத்து கொள்ளட்டும். மானியம் என்கிற பேரில் வாரியத்தின் தலையில் சுமத்தக்கூடாது.
 

http://onelink.to/nknapp


காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரம் வழங்கிய நிறுவனங்களுக்கு 2 வருசமா எடப்பாடி அரசு பணம் கொடுக்கவில்லை. பொதுவாக, தமிழக மின்வாரியத்தின் கடன் சுமைகளாலும் நிர்வாகச் சீர்கேடுகளாலும் வாரியத்துக்குக் கடன் கொடுக்க உலக வங்கியும் ஆசியன் வளர்ச்சி வங்கியும் மறுத்துவிட்டது. தற்போது, காற்றாலை அபரிமிதமாக உற்பத்தியாகுது. அதனை வாங்கிச் சேமித்து வைக்கக்கூடிய தொழில்நுட்ப வசதிகளோ, அதற்கான தொலைநோக்கு திட்டங்களோ எடப்பாடி அரசிடம் இல்லை. இதனால் தமிழகத்தில் உற்பத்தியாகும் கூடுதல் மின்சாரம் வீணாகப் போகிறது. தவிர, அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவதன் மூலம் வாரியத்தைத் திவாலாக்குகிறார்கள். இதையெல்லாம் சரி செய்வதற்காகத்தான சட்டதிருத்தம். யாருடைய உரிமையும் அதிகாரத்தையும் பறிப்பதற்கல்ல.

தமிழகம் உட்பட 8 மாநிலங்கள் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ததில் 80 ஆயிரம் கோடி பாக்கி வைத்திருக்கின்றன. கடன் சுமை இல்லாமல் இருந்தால் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க முடியும். ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மனாக நியமிக்கப்படுபவர் சட்டம் தெரிந்தவராக இருக்க வேண்டும். ஆனால், மின்சார வாரியத்தில் பணி செய்து ஓய்வுபெற்றவர்களை நியமிப்பதால் ஆணையம் எப்படி உருப்படும்? தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் உயர்நிலை தேர்வு கமிட்டியைக் கொண்டு வருகின்றனர்.

மாநில அரசுகளின் தவறான முடிவுகள், ஆணையத்தில் மாநில அரசின் தலையீடுகளால் ஏற்படும் நிர்வாகச் சீர்கேடுகளைத் தடுப்பதற்கான சீர்த்திருத்த முயற்சிதான் சட்டத்திருத்தம். இதனால் வாரியத்தில் ஊழல் செய்ய முடியாதே என்பதால்தான் மாநிலங்கள் இதனை எதிர்க்கின்றன. மற்றபடி மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் கிடைப்பது உள்பட அனைத்து வகையிலும் நன்மைகளைக் கொடுக்கக் கூடியதுதான் இந்தச் சட்டத் திருத்தம்‘’ என்கிறார் ஆவேசமாக.

மாநில அரசு நிர்வாகங்கள் எல்லாம் ஊழல் என்று காரணம்காட்டி, மொத்தமாக அதிகாரத்தைத் தன் வசப்படுத்தும் மத்திய அரசின் போக்கும், அதற்குள் இருக்கும் தனியாருக்கான லாபமும், அது கட்சி நிதியாகப் பெருகுவதும் பலத்த சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் உருவாக்கியுள்ளன.