குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பெயரை சொன்னாலே முகத்தில் ஒரு சிரிப்பு வரும். அதுவும் பெண்களுக்கு சிரிப்புடன் சேர்ந்து அவர்களின் குழந்தைப் பருவமும் நியாபகம் வரும். அவ்வளவு நெருக்கமான பெண் தோழிதான் அவள். அவள் பெயர் பார்பி. இன்று அந்த ராணி அறிமுகமாகி அறுபது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இருந்தாலும் அவள் என்றும் இளமையான ராணிதான்.
பெண் குழந்தைகளுக்கு மூன்று வயது முதல் ஏழு வயதுவரை இடையில் பிறந்தநாள் வந்தால் பரிசு கொடுப்பவர்களின் முதல் தேர்வு பார்பி பொம்மையாகத்தான் இருக்கும். அதிலும் அந்த "I am the Barbie girl, in the barbie world" பாடல் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அவர்களை நடனமாட செய்துவிடும். அவ்வளவு பிரபலம் அந்த பொம்மையும், பாடலும். குழந்தைகளை பார்பி உலகத்துக்கே அழைத்து செல்லும் அந்த பொம்மைதான் அங்கு ராணி. அதற்கு தலை சீவுவது, உடை மாற்றுவது, செருப்பு அணிவிப்பது ஆகியவற்றிலிருந்து சமைப்பது வரை அனைத்து வேலைகளையும் நாம்தான் செய்யவேண்டும். அவரவர் வேலைகளையே செய்யாத குழந்தைகள்கூட அந்த பொம்மைக்கு அனைத்து வேலைகளையும் செய்யும். இப்போது புரிகிறதா நான் ஏன் பார்பியை ராணி என்று சொன்னேன் என்று. இது ஒருவகை என்றால் அந்த பொம்மையை தான்தான் என நினைத்து அதற்கு அலங்காரம் செய்து மகிழும் குழந்தைகள் இன்னொருவகை
பார்பி பொம்மை 1959ம் ஆண்டு மார்ச் 9 நியூயார்க் நகரில் நடந்த அமெரிக்க அனைத்துலக விளையாட்டு பொருட்கள் கண்காட்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதன்பிறகு பார்பி ஒரு அடையாளமாகவே ஆகிப்போனது. "பார்பி" என்ற பெயர் இந்த பொம்மையின் வடிவமைப்பாளரான ருத் ஹேண்ட்லரின் மகள் பார்பராவின் பெயரிலிருந்து வந்தது. அவர் இந்த பொம்மை வயதுக்கு வந்த பெண்ணாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதுவே பின்னாளில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதனால் பார்பி பொம்மை இந்த பொம்மை காலப்போக்கில் கதைகள், படங்கள், விளம்பரங்கள் என அனைத்திலும் வந்தது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு 1997ம் ஆண்டு வந்த டாய் ஸ்டோரி (Toy story 2) படத்தில் சிறு கதாபாத்திரத்தில் பார்பி நடித்திருக்கும். பல சர்ச்சைகள் இருந்தாலும் குழந்தைகள் மத்தியில் பார்பி என்றும் ராணிதான்.