Skip to main content

நான் ஏன் ஐ.பி.எஸ். ஆனேன்... டாக்டர் அருண்சக்திகுமார்...

arun sakthi kumar ips

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தன்குளம் சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் போலிசாரை நோக்கி வசைபாட வைத்து விட்டாலும், புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. அருண்சக்திகுமாரை சாமானிய மக்களும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இவர் பதவி ஏற்கும் முன்பு வரை மணல் கொள்ளை, கஞ்சா, போதை ஊசி, சீட்டிங் என்று சட்டத்திற்கு புறம்பான வேலைகள் அத்தனையும் நடந்தது. இதற்கு எதிராக மக்கள் போராடினார்கள். அதற்காக வழக்குகளை சம்பாதித்தார்கள் ஆனால் தீர்வு தான் கிடைக்கவில்லை.

 

அருண்சக்திகுமார் எஸ்.பி. பதவி ஏற்ற பிறகு ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் அனுப்பிய முதல் தகவல், “என்னை பார்த்து வாழ்த்து சொல்லவோ, பரிசு கொடுக்கவோ வர வேண்டாம். பணியை பாருங்கள் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் சந்தோசமாக இருங்கள் அல்லது முடிக்கப்படாத வழக்குகளை முடிக்க பாருங்கள்” என்று அன்பு கட்டளையிட்டார். அனைவரிடமும் அன்பாக பழகியலால், போலீசார் அனைவரும் தங்கள் பணியை செய்தார்கள்.

 

மணல் கொள்ளை, போதை ஊசி கும்பல் கூட்டம், கூட்டமாக பிடிபட்டது. மணல் கொள்ளையர்கள் பக்கத்து மாவட்டமான தஞ்சைக்கு ஓடிப்போனார்கள். இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்திருந்த போதை ஊசி கும்பலும் சிறைக்கு போனது. கடைசியாக கள்ள நோட்டுக் கும்பலும் காணாமல் போனது.

 

சாமானிய மக்களும் புகார் மனு கொடுத்து நடவடிக்கையையும் பார்த்தனர். சில நாட்கள் வாக்கிங் போய் பொது இடங்களை கண்காணித்தார். இப்படி அவரது மக்கள் சேவைப் பணி சிறப்பாக இருந்ததால்தான் இப்போது இடமாறுதல் என்ற செய்தி அறிந்து மாற்றல் வேண்டாம் என்றும், போகுமிடத்திலும் சாதிக்க வேண்டும் என்று பாராட்டி வாழ்த்தியும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

 

மருத்துவரான நிங்கள் ஏன் ஐ.பி.எஸ். ஆனீர்கள்? 

 

இந்த கேள்விக்கு அருண்சக்திகுமார் ஐபிஎஸ் சொன்ன காரணம்... “நான் சென்னையில் மருத்துவம் படித்துவிட்டு பயிற்சி மருத்துவராக இருந்தபோது, எம்.எம்.சி.க்கு போக 8 கி.மீ. போகனும். அதற்காக எங்கள் குடும்ப வசதிக்கு ஏற்ப ஒரு பழைய சைக்கிள் வாங்கித்தரச் சொல்லி அதில்தான் போனேன். ஒருநாள் அந்த சைக்கிள் காணவில்லை. சைக்கிளை காணவில்லை என்று ஒரு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க போனேன். அது எங்க காவல் எல்லை இல்லைனு வேற காவல் நிலையம் போகச் சொன்னாங்க. அங்கே போனால் ஒரு டாக்டர் கார்ல போகாமல் சைக்கிள்ல போகலாமா சார். கார் வாங்க முடியாமல்தான் சார் சைக்கிள்ல போறேனு சொன்ன பிறகு, சரி புகார் எழுதிக் கொடுங்க என்று புகார் வாங்கினாங்க. மனு ரசீது கூட தரல. அவங்க என் சைக்கிளை கண்டுபிடித்தும் தரல.

 

சில மாதங்கள் கழித்து ஒரு போராட்டத்தில் கலந்து கொள்ள ஒரு பகுதிக்கு சென்றபோது ஒரு குப்பத்தில் என் சைக்கிள் கிடப்பதை பார்த்தேன். அதில் சின்ன மாற்றம் செய்திருந்தாலும் என் சைக்கிள் என்பதை கண்டுபிடித்தேன். உடனே நான் புகார் கொடுத்த காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லிட்டு சைக்கிளையும், சைக்கிள் திருடனையும் ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு காவல் நிலையம் போனோம்.

 

டாக்டர் சார், உங்க சைக்கிள் கிடைத்துவிட்டதுனு எழுதிக் கொடுத்துட்டு சைக்கிளை எடுத்துக்கும் போங்க. காணாத சைக்கிள்தான் கிடைத்துவிட்டதே அப்பறம் அவன் மேல எதுக்கு கேசுனு அனுப்பிட்டாங்க. அவன் மேல ஒரு வழக்கு போட்டிருந்தால் அவனை திருடுவதில் இருந்து திருத்தி இருக்கலாம், ஆனால் செய்யல. அதன் பிறகு தான் ஐ.பி.எஸ். ஆனேன்.

 

சாதாரண மக்கள் காவல் எல்லை தெரியாமல் வரும்போது தடுமாறக்கூடாது என்பதற்காக அவர்கள் எந்த காவல் நிலையம் வந்தாலும் வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்ப செய்கிறேன். அதேபோல புகார்களை உடனுக்குடன் பதிவு செய்தால் குற்றங்கள் குறையும். அதனால் வழக்கு பதிவுகள் நடக்கிறது” என்கிறார்.

 

“சாமானிய மக்களுக்கான குரலாக இருந்தவர் மாற்றம் என்பதை யாராலும் ஏற்க மனமில்லை.”