பெங்களூருவில் இருந்து சசிகலா புறப்பட்டு வருவதற்கு முன்பாக ஏகப்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் அவர் தங்கியிருந்த தேவனஹள்ளி பகுதியில் உள்ள ப்ரஸ்டீஜ் கெஸ்ட் ஹவுசிலும், எடப்பாடி வீடு அமைந்துள்ள கிரீன்வேஸ் சாலை பகுதியிலும், அ.தி.மு.க.வின் தலைமைக் கழகத்திலும், நடந்துமுடிந்தது.
அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் அடங்கிய கூட்டத்தைக் கூட்டினார் எடப்பாடி. அந்தக் கூட்டத்தில் உணர்ச்சிப் பிழம்பாகப் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "எந்த விலைக் கொடுத்தேனும் எடப்பாடி ஆட்சியைக் காப்பாற்றுவோம்" என்றார். அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் "சசிகலாவின் ஆதிக்கத்திற்குள் மறுபடியும் அ.தி.மு.க.ச் சென்றுவிடக்கூடாது' என முழங்கினார்கள். கூட்டத்திற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வரவில்லை.
கூட்டம் முடிந்து அமைச்சர் விஜயபாஸ்கரின் மகளின் நாட்டிய அரங்கேற்றத்திற்கு புறப்பட இருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரு போன் வந்தது. அதில், "சசிகலாவை 15 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்று சந்தித்திருக்கிறார்கள். அவர்களில் பலர் பெங்களூருவிலேயே தங்கியிருக்கிறார்கள்' என்கிற போனில் வந்த தகவலைக் கேட்டு, ஓ.பி.எஸ். அதிர்ச்சி அடைந் தார். உடனே, அந்த தகவல் உளவுத் துறைக்கு அனுப்பப்பட்டு எம்.எல்.ஏ.க் களின் செல்போன்கள் எங்கிருக்கிறது என லொகேஷன் ஆராயப்பட்டது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு சென்று வந்ததாக, அவரது செல்போன் காட்டியது. கள்ளக்குறிச்சி பிரபு, கடலூர் மாவட்டச் சார்ந்த ஒரு எம்.எல்.ஏ., திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த ஒரு எம்.எல்.ஏ. ஆகியோரது செல்போன்கள் அணைத்துவைக்கப்பட்டிருந்தன. அதேபோல், ஈரோட்டைச் சார்ந்த முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ஒருவரின் செல்போனும் பெங்களூருவுக்கு பக்கத்தில் லொகேஷன் காட்டியது. அதேபோல் அமைச்சர்களின் செல்போன்களும் ஆராயப்பட்டன. அதில் திருப்பூரைச் சேர்ந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கல்வி அமைச்சர் செங்கோட்டையன், செல்லூர் ராஜு ஆகியோரது செல்போன்களுக்கு சசிகலா நேரடியாகப் பேசியதாக உளவுத் துறை ரிப்போர்ட் கொடுத்தது.
"எடப்பாடி பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்திக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சட்டமன்றத்தில் ஒன்பது எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன்தான் அவரது ஆட்சி நீடிக்கிறது. இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் சசிகலா பக்கம் செல்வார்களேயானால் அவரால் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை பாஸ்செய்ய முடியாது' என்கிற நெருக்கடியான சூழ்நிலையால் அ.தி.மு.க. வட்டாரம் டென்ஷன் ஆனது. இப்படி ஒரு சூழ்நிலை உருவாகக்கூடாது என்பதற்காகத்தான் எடப்பாடி சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியவர்களைக் கட்சியில் இருந்து நீக்கினார்.
ஆனால், எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவோடு தொடர்புவைத்திருக்கிறார்கள் என்கிற தகவல் எடப்பாடியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "சசிகலாவோடு தொடர்பு வைத்துக்கொண்டால் அல்லது அவரை நேரில் சென்று சந்தித்தால் கட்சித் தாவல் தடுப்பு சட்டப்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற எச்சரிக்கை அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தின் சார்பில் மறைமுக எச்சரிக்கையாகச் சொல்லப்பட்டது' என்கிறார்கள் அ.தி.மு.க. தலைமைக் கழகம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், 5-ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையான இளவரசி மதியம் 02:00 மணிக்கு சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதிக்கு வந்து சேர்ந்தார். அவருடன் சிறிதுநேரம் பேசியிருந்துவிட்டு, 8-ஆம் தேதி புறப்படுவதற்கான தயாரிப்பு வேலைகளில் மூழ்கினார் சசிகலா. மொத்தம் 3,000 க்கும் அதிகமான கார்களில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என சசிகலாவின் சொந்த பந்தங்கள் சசிகலாவிடம் விவாதித்துக் கொண்டு இருந்தார்கள்.
சசிகலா வட்டாரத்தில் பேசும்பொழுது மொத்தம் 28 எம்.எல்.ஏ.க்கள் சசிகலா பக்கம் வருவதாக சசிகலாவிடம் உறுதியளித்துள்ளார்கள். மேலும், 22 எம்.எல்.ஏ.க்கள் வருவதாக சசிகலாவின் சொந்த பந்தங்களிடம் உறுதியளித்துள்ளார்கள். இவர்களைத் தவிர 10 அமைச்சர்கள் சசிகலாவிடம் பேசியிருக்கிறார்கள். "அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்கு தயாராக எல்லா ஏற்பாடுகளையும் சசிகலா செய்து வருகிறார். எடப்பாடி சசிகலாவை ஏற்க வேண்டும். இல்லையேல் கட்சி உடையும், ஆட்சிக்கும் ஆபத்து அனைத்திற்கும் தயாராக சசிகலா தானாகவே எல்லாம் ஏற்பாடுகளையும் செய்துவருகிறார். இது பற்றி தனது சொந்த பந்தகளிடம் கூட சசிகலா விவாதிப்பதில்லை'' என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்.
இந்நிலையில் சசிகலாவுக்கு நெருக்கமான அமைச்சர்களைக் கூப்பிட்டு எடப்பாடி திட்டியிருக்கிறார். அவர்களில் உடுமலை ராதாகிருஷ்ணனிடம், "நீங்கள் டிடிவி தினகரனுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள் என இரண்டு வருடங்களுக்கு முன்பே தெரியும். நான் உங்களை அமைச்சரவையிலிருந்து நீக்கிவிடுவேன். நான்கு வருட காலம் பதவியை அனுபவித்துவிட்டு, இப்பொழுது சசிகலாவுக்கு விஸ்வாசம் காட்டுகிறீர்கள்'' என எச்சரித்ததோடு, அமைச்சர்கள் சிலரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் உத்தர விட்டுள்ளார். அதில் ஓ.எஸ்.மணியன், காமராஜ், கே.சி.கருப்பணன் ஆகியோரும் அடக்கம்.
அத்துடன். சசிகலாவுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் சொத்துக் குவிப்பு வழக்கில் கையகப்படுத்திய சொத்துகள் குறித்து இதுவரை அக்கறை காட்டாத அ.தி.மு.க அரசு, திடீரென பெங்களூரு நீதிமன்றத்தில் அது குறித்து மனு செய்தது. அதனடிப்படையில், இளவரசி, சுதாகரன் ஆகியோரது சொத்துகள் அரசு சொத்தாக அறிவிக்கப்பட்டது. "இந்த வழக்கில், ஏ1 ஜெ.தான். ஏ3, ஏ4 சொத்துகள் முடக்கப்பட்டால் ஏ1 ஜெ.வின் குற்றத்தை எடப்பாடி அரசே ஏற்றுக்கொள்வதாகத்தான் அர்த்தம் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா'' என்ற அமைச்சர் சி.வி.சண்முகத்திடம், "ஜெ.வும் அப்படித்தானே'' என மீடியாக்கள் கேட்டபோது, பதில் சொல்லாமல் சென்றதும் அதே அர்த்தத்தைக் கொடுப்பதாகத் தெரிவிக்கின்றனர். சசிகலாவின் வருகையை நேரடி ஒளிபரப்பாக சில தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளனர். அதனைத் தவிர்க்கச் சொன்னதுடன், இல்லையென்றால் அரசுப் பணத்தைக் கொட்டித் தரப்படும், 'வெற்றி நடைபோடும் தமிழகம்' விளம்பரங்கள் இனி வழங்கப்படாது என முதல்வர் அலுவலகம் தொலைக்காட்சி நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை செய்தது.
சசிகலாவின் வருகை நாளில் எடப்பாடி ஏற்கனவே திட்டமிட்டிருந்த பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டது. இ.பி.எஸ் சசிகலா நேரடி மோதலை மறைமுகமாகக் குறிப்பிட்டு, ஓ.பி.எஸ். 7 ஆம் தேதி வெளிவந்த நாளிதழ் ஒன்றில் விளம்பரம் கொடுத் திருந்தார். "அதிகாரம் ஒருவரது கைக்குச் சென்றால் அதை அவருக்கு கொடுத்தவர் திரும்பிக்கேட்டால் யாரும் தர மாட்டார்கள். அப்படி தன்னிடம் வந்த அதிகாரத்தைக் கொடுத்தவர் திருப்பிக் கேட்டவுடன், தந்தவர் ராமனின் தம்பி பரதன். விசுவாசம் என்பதற்கு பரதனே எடுத்துக்காட்டு. அந்த பரதன் வழியில் மூன்று முறை முதல்வர் பதவியை அதைக் கொடுத்தவர்களுக்கே, விசுவாசத்துடன் திருப்பிக் கொடுத்தவர் ஓ.பி.எஸ்.' என பரதனுடன் ஓ.பி.எஸ்.ஸை ஒப்பிட்டு ஜெயலலிதா பேசிய பேச்சைக் கொடுத்திருக்கிறார் ஓ.பி.எஸ்.
"எடப்பாடி எத்தனை சொத்துகளை வேண்டுமானாலும் முடக்கட்டும். அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை'' என்கிற சசி உறவினர்கள், "நான்கு வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா முதல் குற்றவாளியாக வருமானத்திற்கு அதிகமான சொத்துச் சேர்ப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டார். அந்த வழக்கில் போயஸ் கார்டன், ஐதராபாத் திராட்சைதோட்டம், சிறுதாவூர் பங்களா, கொடநாடு டீ எஸ்டேட் ஆகியவை இருக்கின்றன. இந்த சொத்துகள் ஜெ. வாங்கியவை. அவற்றை எடப்பாடியால் முடக்க முடியுமா? எத்தனை எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் யாரை வேண்டுமென்றாலும் கண்காணிக்கட்டும். அவர்கள் சசிகலா சென்னை வந்தபிறகு நிச்சயம், சந்திப்பார்கள்'' என சவால் விடுகிறார்கள்.
இதற்கிடையே, "சசிகலா தரப்பு தங்களது பலத்தை நிரூபிக்க கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்கிறது. இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது என மத்திய அரசின் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால், எங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள். சென்னைக்கு மோடி வரும்போது, சசிகலா வருகைக்குப் பிறகும், அ.தி.மு.க. ஒற்றுமையாகச் செயல்படுகிறது எனக் காட்டவிரும்புகிறார் எடப்பாடி. அதற்குள் அ.தி.மு.க.வில் தனக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என சசிகலா நிரூபிக்க முயற்சிக்கிறார்.
ஒருவேளை சசிகலாவால் இப்பொழுது அ.தி.மு.க.வை உடைக்க முடியாமல் போகலாம். ஆனால், இறுதிவெற்றி எங்களுக்கே என்கிறார்கள்'' சசிகலாவின் உறவினர்கள்.