Skip to main content

"ஆஸ்திரேலியாவிற்கு வடக்கே கடலுக்குள் புதைந்து கிடைக்கும் முதல் மதுரை..." செந்தில்குமரன் பகிரும் தமிழ் வரலாறு!

 

Actor Senthilkumaran

 

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் 360 யூடியூப் சேனலில் 'தமிழன் என்றோர் இனமுண்டு' என்ற நிகழ்ச்சி வாயிலாக தமிழ் மொழியின் வரலாறு, தமிழர்களின் வரலாறு, தமிழ் மக்களின் வாழ்வியல் உள்ளிட்ட தமிழ் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிவருகிறார். அந்த வகையில், குமரிக்கண்டம் துண்டு துண்டுகளாகப் பிரிந்தது குறித்தும் ஊர் என்ற சொல்லின் தொன்மை குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

குமரிக்கண்டத்தின் நிலவியல் அமைப்பு குறித்தும் அங்கு வாழ்ந்த மக்களின் உருவத்தோற்றங்கள் குறித்தும் முந்தைய பகுதிகளில் விரிவாகப் பார்த்தோம். குமரி நதி, பஃறுளி நதி, 49 நாடுகள், பன்மலை அடுக்ககங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மாபெரும் நிலப்பகுதியாக குமரிக்கண்டம் இருந்துள்ளது. பூமிக்கடியில் உள்ள தட்டுகள் விலகுவது மற்றும் இணைவது, மேலே கீழே செல்வது ஆகியவற்றின் காரணமாக நிலநடுக்கம் ஏற்படுகிறது என அறிவியல் கூறுகிறது. இன்றைக்கும் கடலுக்கு அடியில் இதுபோன்ற பூமி அதிர்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.நிலத்தில் நடக்கும் அதிர்ச்சிகள் மட்டும்தான் நமக்குத் தெரியவருகின்றன. இது மாதிரியான தட்டுக்கள் பிரிதல், பூகம்பங்கள், ஆழிப்பேரலைகள் காரணமாக குமரிக்கண்டம் எனும் நிலப்பரப்பு பேரழிவிற்கு உள்ளானது. அந்த அழிவின்போது சில பகுதிகள் பூமிக்குள் அமிழ்ந்துபோயின; சில பகுதிகள் தனித்தனியே விலகிச் சென்றன. இன்றைய ஆஸ்திரேலியா குமரிக்கண்டத்திலிருந்து உடைந்து தெற்கு நோக்கிச் சென்ற நிலப்பகுதி என்றும் இன்றைய ஆப்ரிக்கா குமரிக்கண்டத்திலிருந்து உடைந்து மேற்கு நோக்கிச் சென்ற நிலப்பகுதி என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்களின் நெற்றியில் சிறிய புடைப்பு இருந்தது குறித்தும் அதை சிவனின் நெற்றிக்கண்ணோடு தொடர்புபடுத்தி முன்னரே பேசியிருக்கிறேன். தமிழர்களின் ஆன்மீகத்தைப் பொருத்தமட்டில் சிவனை வழிபடும் சைவமும் திருமாலை வழிபடும் மாலியமும் முதன்மையானவையாக இருக்கின்றன. குமரிக்கண்ட அழிவு என்பது ஒரே கட்டத்தில் நிகழ்ந்தது அல்ல. பல்வேறு காலங்களில் பல கட்டங்களாக பல்வேறு காரணங்களால் நிகழ்ந்ததுதான் குமரிக்கண்ட அழிவு. 

 

முதல்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள் என்று பள்ளிக் காலங்களில் படித்திருப்போம். இப்படிச் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இடங்களுக்கு மதுரை என்று பெயர். குமரிக்கண்டத்தில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் நிலவரலாறு தொடர்பான விஷயங்களை வைத்துப் பார்த்தால், முதல் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த முதல் மதுரை ஆஸ்திரேலியாவிற்கு வடக்கே கடலுக்குள் மூழ்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த மதுரை அழிந்தவுடன் இங்கு இரண்டாம் மதுரை உருவாகிறது. காலப்போக்கில் ஏற்பட்ட நிலவியல் மாற்றம் காரணமாக அதுவும் அழிவுக்கு உள்ளானவுடன் மூன்றாவது மதுரை உருவாகிறது. அப்படி என்றால் மதுரை என்ற சொல்லுக்கு எவ்வளவு நீண்ட வரலாறு இருக்கிறது என்று பாருங்கள். 

 

ஹாம்முராபி என்பவர்தான் முதல்முதலாக மக்கள் ஒன்றாக கூடி வாழ்வதற்கான வழியைச் செய்துகொடுத்தார் என இன்றைய மேற்கத்திய வரலாறு கூறுகிறது. அவர் மக்களைக் கூடி வாழவைத்த இடத்திற்கு ஊரி என்று பெயர். ஊரி என்றால் மக்கள் கூடி வாழும் இடம் எனப் பொருள். இந்த ஊரி என்ற சொல் ஊர் என்ற தமிழ் சொல்லில் இருந்துதான் உருவானது என அறிஞர்கள் கூறுகிறார்கள். தமிழிலிருந்து வந்த சில மொழிகளில் ஊர் என்ற வார்த்தை இருக்கலாம். ஆனால், அதற்கான வேர் தமிழ்தான். மனிதன் முதன்முதலில் சேர்ந்து வாழ்ந்தபோது அந்த இடத்திற்க்கு வைத்த பெயர் ஊர். அந்த ஊர் என்ற பெயரே நம்முடைய மொழியில்தான் உள்ளது என்றால் இந்த மொழி எவ்வளவு மூத்த மொழி என்பதை அதன் மூலம் நாம் அறியலாம்.