Skip to main content

பா.ஜ.க.விடம் சரணாகதி! ஜெ.வுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

dddd

 

தமிழகத்தில் இதுவரை கல்வி, வேலைவாய்ப்பில் கடைபிடித்துவந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டை அ.தி.மு.க. அரசு ஒழித்துக்கட்ட ஆரம்பித்திருப்பது மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருப்பது தமிழகத்தையே அதிரவைத்திருக்கிறது. மத்திய மோடி அரசின் இந்த 10% இடஒதுக்கீடு குறித்து, மாநிலத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில், இந்த நிலைப்பாடு என்பது அனைத்துத் தரப்பையும் அதிர வைத்துள்ளது.

 

தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய நான்கு பல்கலைக்கழகங்களில் பயோ டெக்னாலஜி எனப்படும் உயிரி தொழில்நுட்பம் முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. அனைத்துப் பட்டப்படிப்புகளுக்குமே 69% இடஓதுக்கீடு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்த வருடம் 49.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தியிருப்பதுதான் பேரதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. இந்தப் படிப்புகளுக்கு மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை (Department of Bio technology) நிதியுதவி செய்வதால்தான் மத்திய அரசின் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது என்று காரணம் கூறப்படுகிறது. ஆனால், ‘நிதி ஒதுக்கும் எந்த அமைப்பிற்கும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உத்தரவு போடும் அதிகாரம் இல்லை’ என்கிறார்கள் கல்வியாளர்கள். இதுகுறித்து, நாம் மேலும் விசாரிக்க ஆரம்பித்தபோதுதான், இதன் பின்னணியில் மத்திய பா.ஜ.க அரசின் புதியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த அ.தி.மு.க. அரசு செய்த துரோகங்கள் தெரிய ஆரம்பித்தன.

 

dddd

 

உயிரி தொழில்நுட்பம் தொடர்பான பயோ டெக்னாலஜி, மெடிக்கல் பயோ டெக்னாலஜி, அக்ரிகல்சுரல் பயோ டெக்னாலஜி, கம்யூட்டேஷனல் பயாலஜி, கால்நடை அறிவியல் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளில் இந்தியா முழுக்கவுள்ள கல்லூரிகளில் மாத உதவித்தொகையுடன் சேர, ஜி.ஏ.டி.- பி (Graduate Aptitude Test # Biotechnology) எனப்படும் அகில இந்திய நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். எம்.டெக் படிப்புகளுக்கு 12,000 ரூபாயும் எம்.எஸ்.சி. படிப்புகளுக்கு 5,000 ரூபாய் முதல் 7,500 ரூபாயும் மாத உதவித்தொகையாக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. கூடுதலாக, இப்படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் ஆராய்ச்சி நிதியை உயிரி தொழில்நுட்பத்துறை யுனஸ்கோவிடம் பெற்று வழங்கி வருகிறது.

 

ஜி.ஏ.டி- பயோடெக்னாலஜி தேர்வை நடத்துவது உயிரிதொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் ஆர்.சி.பி எனப்படும் (Regional Centre for Biotechnology) மையம். 2020 - 21 கல்வி ஆண்டில் ஜி.ஏ.டி- பயோடெக்னாலஜி தேர்வு குறித்த ஆர்.சி.பி.யின் அறிவிப்பில், ‘அந்தந்த கல்வி நிறுவனங்கள் தங்கள் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு ஏற்ப நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசு பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்பதை யு.ஜி.சி (University Grants Commission) எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவும் மிகத் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. அப்படியென்றால், தமிழக அரசின் பல்கலைக்கழகங்கள் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பின்பற்றி பயோடெக்னாலஜி படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், 49.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை நடத்தியுள்ளன தமிழகத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள்.

 

dddd

 

இதைவிடக்கொடுமை, மத்திய அரசின் 49.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகம் ஏற்றுக்கொள்ளாததால் இந்த ஆண்டு எம்.டெக் பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக் கம்ப்யூட்டேஷனல் பயாலஜி படிப்புகளில் இருந்த 45 இடங்களுக்கு மாணவர் சேர்க்கையையே ரத்து செய்துவிட்டது அண்ணா பல்கலைக்கழகம். மாநில பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை (69%) கடைபிடிக்க வேண்டும் என்று யு.ஜி.சியின் விதிமுறை இருக்கும்போது, மாநில பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய நான்கு பல்கலைக்கழகங்களில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டை (49.5%) நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது யார்? தமிழக அரசு எப்படி இதற்கு அனுமதி கொடுத்தது? என்று கேள்வி எழுப்புகிறார்கள் கல்வியாளர்கள்.

 

இத்தேர்வின் மூலம் 50 சதவீத இடங்கள் முன்னேறிய சாதியினருக்கு மட்டுமே  ஒதுக்கப்பட்ட மோசடியும் நடந்திருக்கிறது என்றும் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

 

இந்தப் படிப்புகளுக்கு மத்திய அரசின் டி.பி.டி எனப்படும் உயிரி தொழில் நுட்பத்துறை (Department of Biotechnology) நிதியுதவி அளிப்பதால்தான் மத்திய அரசின் இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவதாகப் பொய்யைக் கூறிவருகிறது அ.தி.மு.க. அரசு. ஏனென்றால், நிதி ஒதுக்கும் எந்த அமைப்பும் யு.ஜிசியின் விதிகளுக்கு புறம்பாகவோ இடஒதுக்கீட்டுக்கு எதிராகவோ உத்தரவிடமுடியாது.

 

அதேபோல், தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்காததால் 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியவில்லை என்கிறது அ.தி.மு.க. - பாஜக கூட்டணி. மொத்தம், 10 சீட்டுகள் இருக்கிறது என்றால் 69 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் 7 இடங்கள் போக 3 இடங்களுக்கு 31 சதவீத அடிப்படையில் மட்டும்தான் வெளி மாநில மாணவர்கள் விண்ணப்பித்திருக்க வேண்டுமே தவிர, அனைத்தையும் நிரப்ப அதிகாரம் இல்லை என மேற்கண்ட தகவல்களைச் சுட்டிக்காட்டி பேசும் பிரபல கல்வியாளர் கஜேந்திரபாபு, நம்மிடம் மேலும் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

 

“உயர் சிறப்பு அந்தஸ்துங்குற பேர்ல அண்ணா பல்கலைக்கழகத்தை ஐ.ஓ.இ (Institutesof Eminence) ன்னு பெயர் மாற்றம் செய்யும்போது ஏன் எதிர்ப்பு தெரிவித்தோம்னு இப்போ புரிஞ்சுக்கலாம். ஐ.ஓ.இ அந்தஸ்து கிடைத்தாலும் தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டில் எந்த பாதிப்பும் வராதுன்னு உறுதிகொடுத்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவால் 45 சீட்கள் உள்ள ஒரே ஒரு பயோடெக்னாலஜி துறையில் 69 சதவீத இடஒதுக்கீடு பறிபோனதையே தடுக்க முடியல. அதுக்குப் பதிலா, அந்தத் துறையின் மாணவர் சேர்க்கையையே ரத்து பண்ணிட்டாரு. மொத்த பல்கலைக்கழகத்துக்கும் இதேநிலை வராதுன்னு எப்படி அவரால உறுதிமொழி கொடுக்க முடியும்?

 

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையின்படி பல்கலைக்கழகங்களுக்கு முழு தன்னாட்சி அதிகாரம் கொடுத்தா இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி கொள்கைகள் எப்படியெல்லாம் தூக்கி எறியப்படும்ங்கிறதுக்கு, நான்கு தமிழக பல்கலைக்கழகங்களில் 69 சதவீத இ ஒதுக்கீட்டுக்குப் பதிலாக 49.5 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டதே உதாரணம். யு.ஜி.சியைக் கலைப்பதற்குக் காரணமே இதுபோன்ற இடஒதுக்கீட்டு மோசடிகளை செய்யத்தான்’’ என்று குற்றஞ்சாட்டுகிறார்.

 

இடஒதுக்கீடு, சமூகநீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் இளைஞர் இயக்கத்தின் தலைவர் டாக்டர் எழிலன் நம்மிடம், “69 சதவீத இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடத்தாத பல்கலைக்கழகங்கள் எதுவுமே மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள் அல்ல. தமிழக மக்களின் வரிப்பணத்தில் தமிழகத்திலுள்ள கட்டமைப்பில் இருக்கும் பல்கலைக்கழகங்கள், தமிழகத்திலுள்ள கோர்ஸ், தமிழக ஆசிரியர்கள்தான் சொல்லிக்கொடுக்கிறாங்க. தமிழக அரசு மூலம்தான் சம்பளம் கொடுக்கிறோம். துணைவேந்தர், உயர்கல்வித்துறைச் செயலாளர், உயர்கல்வித்துறை அமைச்சர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி எல்லோரையும் பார்த்துக் கேட்கிறேன். அனைத்துக் கட்சிக் கூட்டத்துல ‘69 சதவீத இடஒதுக்கீட்டில் எந்தப் பிரச்சனையும் வராது. 10 சதவீத உயர் சாதியினருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மாட்டோம்’னு சொல்லிட்டு, இப்போ இந்தக் கோர்ஸுகள் மூலம் நடைமுறைப்படுத்தினது தமிழக மக்களுக்கு, பெரியாருக்கு, அண்ணாவுக்கு, கலைஞருக்கு, ஏன் ஜெயலலிதாவுக்கு செய்த துரோகம். பா.ஜ.கவின் புதிய கல்விக்கொள்கைக்கு ஒத்து ஊதவே இப்படி செய்கிறது அ.தி.மு.க.’’ என்கிறார் கொந்தளிப்பாக.

 

அண்ணா பல்கலைக்கழகம் எம்.டெக் பயோ டெக்னாலஜி மற்றும் எம்.டெக் கம்ம்யூடேஷனல் பயாலஜி மாணவர் சேர்க்கையைக் கைவிடாமல் 69 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். மற்ற நான்கு பல்கலைக்கழகங்களும் 49.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை நடத்தியதை ரத்து செய்துவிட்டு, 69 சதவீத அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை நடத்துவதோடு யு.ஜி.யின் விதிமுறையை மீறி மாணவர் சேர்க்கையை நடத்திய துணைவேந்தர்கள், துணையாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கை.