Skip to main content

காலில் விழுவதும் கண்ணீர் சிந்துவதும் தொடங்கிய இடம்!

 

The place where falling on feet and shedding tears started

 

தமிழக அரசியலில் பெரிதும் விமர்சனத்துக்குள்ளான, எதிர்க்கட்சியினரால் கடுமையாகக் கேலி செய்யப்பட்ட ஒரு விஷயம் என்றால், அது அதிமுக முக்கிய தலைவர்கள் அக்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் கால்களில் விழுந்து வணங்கியது. தமிழக முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் என முக்கிய மற்றும் தலைவர்கள் உட்பட அனைவரும் விழா மேடை, சாலை என வேறுபாடு பாராமல் பல இடங்களில் ஜெயலலிதாவின் கால்களில் விழுந்ததையும், விழா மேடைகளில் கண்ணீர் சிந்தியதையும் இத்தமிழகம் கண்டுள்ளது. ஆனால், இந்த பழக்கம் எப்படி, யாரால் தொடங்கப்பட்டது என்பது குறித்து  6.7.1991 நக்கீரன் இதழில் வெளிவந்த கட்டுரை. 

 

காலில் விழுந்து ஆசி வாங்கிய அமைச்சர்கள்..!

 

1991, ஜூன் இருபத்தி நான்காம் தேதி திங்கள்கிழமை. காலை பத்துமணி முதற்கொண்டே எம்.எல்.ஏ., எம்.பி.கள், முக்கியப் பிரமுகர்கள் வரத் தொடங்கினார்கள். ‘’ஸ்பெஷல் பாஸ்’’ இல்லாத எவரும் (முன்னாள் உயர் போலீஸ் அதிகாரி, கட்சியின் முக்கியத் தலைவர்கள் உட்பட) உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அனைவருக்கும் முதல்நாள் ஸ்பெஷல் பாஸ் கொடுக்கும் போதே  ‘’யாரும் தோல் பைகளோ சூட்கேஸோ கொண்டு வரக் கூடாது’’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.  

 

ஒவ்வொருவரும் குறிப்பாக நிருபர்கள், புகைப்படக் காரர்கள், சுமார் ஐந்து முறை சோதனை செய்யப்பட்டனர். ஒருவேளை யார் மீதாவது சந்தேகம் எழுந்தால் மீண்டும் அவர்கள் சோதனை செய்யப்பட்டார்கள். அப்படி ஒரு பெண் பத்திரிகை ஆசிரியரை சந்தேகப்பட்டு பல கோணங்களில் போட்டோ எடுக்க அவர் கடுப்பாகி விட்டார். 

 

உள்ளே போனவர்களுக்கு வெளியே வர அனுமதியில்லை. ஏ.சி.யில் சில வயதான எம்.எல்.ஏக்களுக்கு குளிரால் உடல் நடுங்க ஆரம்பித்து அவர்கள் வெளியே ஓடிவர, அவர்களைப் போலீஸார் திரும்ப உள்ளே அனுப்ப அந்தக் ‘’காட்சி ’’கண் கொள்ளாமல் இருந்தது. 

 

மணி சரியாக 12.15.  அரங்கம் முழுவதும் ஒரே சலசலப்பு...பரபரப்பு. கறுப்புப் பூனைகள் படை சூழ ஜெயலலிதா அரங்கத்தின் தனி வாசல் வழியாக அழைத்து வரப்பட்டார். அவர் வந்த இரண்டு நிமிடத்தில் கவர்னர் பி.என்.சிங். ‘’ட்ரம்ஸ்’’ முழங்க உள்ளே நுழைந்தார். மேடையில் நின்று கொண்டிருந்த ஜெயலலிதா படிக்கட்டு வரை வந்து கவர்னரை வரவேற்றுச் சென்று தனது அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தார். 

 

தலைமைச் செயலர்  டி.வி.அந்தோணி தமிழகத்தில் ஆளுநர் ஆட்சிக்கு  சாவுமணி அடிக்க, அடுத்த நிமிடம் சந்தோசமாக ஜெயலலிதா பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 

 

கவர்னர் பீஷ்ம நாராயண் சிங் ஜெயலலிதாவுக்கு தமிழில் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். ஆனால், அதில் வேதனை....அவர் பேசிய தமிழ் காதில் தேளாய்க் கொட்டியது. 

 

ஜெயலலிதாவை தொடர்ந்து நெடுஞ்செழியன், கே.ஏ,கே., எஸ்.டி.எஸ்., ஆர்.எம்.வீரப்பன், ராஜாராம், அரங்கநாயகம், முத்துசாமி போன்ற மூத்த தலைவர்கள் பதவிப்பிரமாணம் எடுத்தனர். 

 

அதைத் தொடர்ந்து புதியவர்களின் பெயர்ப்பட்டில் வாசிக்கப்பட்டதும், செங்கோட்டையன்  பெருமிதத்தோடு வந்து பதவிப்பிரமாணம் எடுத்துவிட்டு ‘’திடீர்’’ என்று சாஷ்டாங்கமாக ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.  அவரைத் தொடர்ந்து மற்ற ஒன்பது அமைச்சர்களும், தலைவிக்கு தலைவணங்கி அருளும் ஆசியும் பெற்றனர்.   

 

இதில் கைத்தறி அமைச்சர் மதுசூதனன் கொஞ்ச நேரத்துக்கு எழுந்திருக்கவே இல்லை. அந்த நேரத்தில் அருகில் நின்ற கறுப்புப் பூனைகளை நாம் கவனித்தோம். ஒரு பூனையின் ஏ.கே.47 முனை சரியாக மதுவின் தலையைக் குறி வைத்திருந்தது. ஏறக்குறைய ‘ஜெ’யின் அருகில் யார் நெருங்கினாலும் அவர்களை நோக்கி ஒரு துப்பாக்கி முனை இருந்தது.  (இதில் கவர்னர் விதிவிலக்கு) 

 

எல்லாம் சரிதான்.ஆனால்,ஐம்பத்தெட்டு வயதான கிராமத் தொழில் அமைச்சர் முகம்மது ஆசிப் ஒரு தடுமாற்றத்தோடு காலில் விழுந்து வணங்கிய போது அட்லீஸ்ட் அந்தம்மா ‘’பரவாயில்லைனு’’ ஒரு 
வார்த்தையாவது சொல்லியிருக்கலாம் என்று வயது முதிர்ந்த ஒரு தேசிய பத்திரிகையின் நிருபர் நம்மிடம் குறைபட்டுக் கொண்டார். 

 

புலவர் இந்திரகுமாரி பதவிப்பிரமாணம் எடுக்கும்போதே தழுதழுக்க ஆரம்பித்தார். கடைசியில் மெல்லமாக ‘ஓ’ வென அழ ஆரம்பித்து விட்டார். அருகில் நின்றவர்கள் ‘இது ஆனந்தக்கண்ணீர்’ என்பதாக சைகை காட்டினர். 

 

ஏறக்குறைய எல்லாம் முடிந்து ஜெயலலிதா விடைபெற்று வெளியே வந்தார். அந்த கட்டடத்தைச் சுற்றி எண்ணற்ற தொண்டர்களின் கரகோஷம் விண்ணை முட்டியது. ஜெயலலிதா கையசைத்து காட்டிவிட்டு 
பறந்து விட்டார். 

 

‘’அம்மா! சரித்திரம் படைக்கிறாங்க’’ என்று தன்னை மறந்து ஒரு உயர் போலீஸ் அதிகாரியிடம் ஒரு மூத்த அமைச்சர் வார்த்தைகளை உதிர்த்தார். 

 

‘’ஆமாம்....ஆமாம்! தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரை யாருக்கும் கொடுக்காத பாதுகாப்பு ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது சரித்திரம் தானே’’ என்றார் அந்த அதிகாரி. 

 

அந்த மூத்த அமைச்சர் யார் தெரியுமா? கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சி அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தான்.