த்தரப்பிரதேச மாநிலத்துக்கான 2022 சட்டமன்றத் தேர்தலில், முதலமைச்சர் பதவிக்கு யோகி ஆதித்யநாத்தை நிறுத்துவார்களா,… மாட்டார்களா?… என மெல்லிய சந்தேகம் எழுந்துள்ளது. சந்தேகம்தான்,… அடிக்கோடிடவோ… இறுதி முடிவுகளோ இன்னும் எடுக்கப்படவில்லை.

இருந்தாலும் கட்சிக்கு உள்ளும் வெளியிலும் இருக்கும் யோகி ஆதித்யநாத்தின் எதிரிகள் இதில் ரொம்பவே சந்தோஷமடைந்திருக்கிறார்கள். 2017-ல் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை எதிர்கொண்ட பா.ஜ.க., தேர்தலில் 310 தொகுதி களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. தேர்தலுக்கு முன்பு பரிசீலிக்கப் படாத யோகியின் பெயர், முதல்வர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டு, இரண்டு துணை முதல்வர்களுடன் ஆட்சிக்கு வந்தார் யோகி.

y

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக, ஆட்சிக்கு எதிராக பெரிய எதிர்ப்புகளை முளை கொள்ளவிடாமல் நசுக்கு வதில் யோகி வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். மாமிசம் வைத்திருந்ததற்காக கொலை, தேசிய கவனம் பெற்ற ஹாத்ராஸ் கொலை வழக்கு, பெண்களின் மீதான தொடர் பாலியல் அத்துமீறல் விவகாரங்கள், பா.ஜ.க. எம்.எல்.ஏ. செங்கர் மீதே பாலியல் புகார் மற்றும் கொலைப் பழி, தேசிய குடியுரிமைச் சட்டம், வேளாண் சட்டங்களுக்கு எதிரான எதிர்ப்புகளையும், எதிர்க்கட்சிகளையும் நசுக்கி யழித்தது, பத்திரிகையாளர்கள் மீது தொடர்ந்து வழக்குப் போட்டு அரசை விமர்சிக்கவே தயங்கும் நிலைக்கு ஆளாக்கியது என பல்வேறு சிறப்புகளை இந்த ஐந்தாண்டுகளில் யோகி சம்பாதித்து வைத்திருக்கிறார்.

Advertisment

இவையெல்லாம் தேர்தல் என வரும்போது யோகிக்கு ஒரு பின்னடைவாக அமையுமா என்றால் சந்தேகம்தான். உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் நிகழாத ஆட்சிக் காலம் ஏதாவது இருந்ததா என்பதே சந்தேகம். முஸ்லிம்களுக்கான துருவப்படுத்தலை, தேர்தல் வரும்போது பா.ஜ.க. இன்னும் வேகமாகவே செய் யும். அதில்தான் அதன் ஓட்டு வங்கி இருக்கிறது.

yy

ஆனால், இவ்வளவு காலம் பா.ஜ.க.வுக்கு ஓட்டு வங்கியாக இருந்த ராமர் கோவில் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது காசியில் இருக்கும் கியான்வாபி மசூதி விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். தேர்தல் நெருக்கத்தில் அதனைத் தீவிரப்படுத்தலாம். உண்மையில், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ.க.வுக்கு ஏற் பட்ட சரிவுதான் அதனைக் கவலைகொள்ளச் செய் திருக்கிறது. பிரதமரின் தொகுதியான வாரணாசியில் கூட அகிலேஷின் சமாஜ்வாடி கட்சி அதிக இடங்களை வென்றிருக்கிறது. அந்தச் சரிவுக்கான பாரத்தை யோகியின் முதுகில் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் சுமத்தினால் அது கவலைக்குரிய அம்சம்தான்.

Advertisment

இன்னொரு முக்கியப் பிரச்சினை, உத்தரப் பிரதேசத்தின் கொரோனா விவகாரம்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் கொரோனாவால் பெரிய அளவில் பாதிக்கப் பட்டன. இறப்பு மற்றும் தொற்று விவகாரங்கள் அதிக அளவில் இருந்தன. ஆனால் புனித நதி யாகப் போற்றப்படும் கங்கைக் கரையோரம் ஆயிரக்கணக்கான சவங்களைப் புதைக்கும் இடுகாடாக மாற்றப்பட்டதும், நதியெங்கும் பிணங்கள் மிதந்ததும், அதை நாய்களும் நரிகளும் குதறியதும்... கங்கை சர்வதேச பேசுபொருளானதும் பா.ஜ.க. தலைமையைக் கவலையடையச் செய்திருக்கிறது.

ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை, மருத்துவ மனையில் இடம் கிடைக்கவில்லை என்பதை சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்காக வழக்குகள் பாயுமென முதல் வர் அச்சுறுத்தியது, கட்சி யின் தொண்டர்களையே கலகலக்க வைத்திருக்கிறது. இந்தப் பழியையெல்லாம் சுமத்துவதற்கான முதுகை, கட்சி யோகியிடம் கண்டடையலாம் என ஒரு யூகம் ஓடிக்கொண்டிருக்கிறது.

தவிரவும், குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அரவிந்த்குமாரை உ.பி. சட்டமேலவை உறுப்பினராக ஆக்க பா.ஜ.க. ஆர்வம் காட்டியது. குஜராத்தில், மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக பத்தாண்டுகளுக்கும் மேல் இவர் இருந்தார். தனக்கு அரவிந்த்குமார் காட்டிய விசுவாசத் துக்கு பிரதியுபகாரமாக மோடி இந்த பரிசை யளித்தார் என கிசு கிசுக்கப்பட்டது.

தற்சமயம் இந்த அரவிந்த்குமாரை உத்தரபிரதேசத்தின் துணைமுதல்வராக ஆக்கவேண்டுமென மோடி விரும்புவதாகவும், அதில் யோகி ஆர்வம் காட்டவில்லையெனவும் கூறப்படுகிறது. தனது விருப்பத்தைப் புறக்கணிக்கும் யோகியை வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் பட்டியலிலிருந்து அகற்றுவதற்கு மோடி திட்டமிட்டிருக்கிறாராம். இந்தப் பூசலில் ஆர்.எஸ்.எஸ். தலையிட்டு சமாதானம் செய்யும்வரை போயிருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்த மேல்மட்டத் தொண்டர்கள்.

m

இவையெல்லாம் சேர்ந்து உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான களத்திலிருந்து யோகி யை அகற்றுவதற்கு வித்திடலாம் என்கிறார்கள்.

ஐந்து வருட காலத்தில் கட்சியில் எத்தனை பேரை யோகி தனக்கு ஆதரவாகத் திரட்டிவைத் திருக்கிறார் எனத் தெரியவில்லை. ஒருவேளை தேர்தல் சமயத்தில் யோகிக்குப் பின்னால் கட்சிக்காரர்கள் பலர் திரளக்கூடும் எனத் தெரிந்தால், அதை தலைமை விரும்பாது. தவிரவும், உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் வேட்பாளராக நிறுத்துமளவு யோகியளவுக்கு செல்வாக்கு நிறைந்தவர்கள் குறைவே.

தனது வாய்ப்பு பறிபோகாமல் இருப்பதற்கு யோகி சில அழுத்தமான காய் நகர்த்தல்களை வரும் மாதங்களில் மேற்கொள்ளக்கூடும். அதை யெல்லாம் பொறுத்துதான் 2022 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தெரியவரும் என்கிறார்கள்.