டந்த தேர்தல் வரை 13 சட்டமன்ற தொகுதி களோடு பெரிய மாவட்டமாக இருந்த வேலூர், இப்போது அணைக்கட்டு, காட்பாடி, கே.வி. குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வேலூர் என 5 தொகுதிகளைக் கொண்ட மாவட்டமாக மாறியிருக்கிறது. இவற்றில் 4 தொகுதிகள் தி.மு.க.வசம் என்பதால், விட்டேனா பார்’ என்று வரிந்து கட்டுகிறது ஆளுங்கட்சி. அதனால், இரு கழகங்களிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை.

vellore

காட்பாடி

தி.மு.க. பொதுச் செயலாளரான சீனியர் துரை முருகன் 7 முறை வெற்றிபெற்ற தொகுதி இது. இங்கு அவரைத் தவிர வேறு யாருக்கும் சீட் இல்லை என்பதால் தி.மு.க.வில் இங்கு வேறு யாரும் போட்டிக்கு யோசிக்கவில்லை. இதனால் தி.மு.க கூட்டணிக் கட்சிகளும் "சைலண்ட் மோடில்' இருக்கின்றன.

Advertisment

அ.தி.மு.க.விலோ கடந்த 2011, 2016 தேர்தல்களில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட, சிட்டிங் மாநகர மா.செ அப்பு (எ) ராதாகிருஷ்ணனையே மீண்டும் களமிறக்க நினைக்கிறாராம் எடப்பாடி. அதேசமயம் மாவட்ட கூட்டுறவு வங்கி சேர்மனான ராமுவை முன்னிறுத்தி வருகிறார் அமைச்சர் வீரமணி. இதற்கிடையே அந்தக் கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க,வும் தொகுதியை எதிர்பார்க்கிறது. அக் கட்சியின் மாநகர மா.செ கோபிநாத் களமிறங்கத் துடிக்கிறார்.

வேலூர்

தி.மு.க,வைச் சேர்ந்த மாநகர செயலாளர் கார்த்தி தான் சிட்டிங் எம்.எல்.ஏவாக உள்ளார். இவர் கட்சியின் சீனியரான துரைமுருகனுடன் உரசல் போக்கைக் கடை பிடித்ததோடு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவாளராக மாறியிருந்தார். அவர் இப்போது துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்திடம் ராசியாகி சீட்டுக்கு ரூட் போட்டு வருகிறார். அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏவாக உள்ள தி.மு.க மா.செ நந்தகுமார், வரும் தேர்தலில் வேலூர் தொகுதியை தனக்குத் தரவேண்டும் என்று தலைமையை வலியுறுத்துகிறாராம். அதேபோல் அ.தி.மு.க.வில் இருந்து தி,மு.க.வுக்கு வந்துள்ள முன்னாள் அமைச்சர் விஜய்யும், முன்னாள் எம்.எல்.ஏ நீலகண்டனும் கூட சீட் கேட்போர் வரிசையில் இருக்கிறார்கள்.

Advertisment

அ.தி.மு.க.வில் மாநகர மா.செ அப்பு, இந்தத் தொகுதி தான் வேண்டும் எனத் தலைமையிடம் கேட்கிறார். கட்சியின் தகவல் தொழில் நுட்ப அணியின் மண்டல செயலாளர் ஜனனி சதிஷ், மாவட்ட பொருளாளர் மூர்த்தி ஆகியோரும் சீட் ரேசில் இருக்கிறார்கள். பா.ஜ.க.வில் ராஜேந்திரன், கலை மகள் இளங்கோ ஆகியோர் முட்டி மோதுகின்றனர். தே.மு.தி.க.வில் வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் கோபிநாத், வி.ஆர்.சண்முகம் ஆகியோர் தொகுதியைக் குறிவைத்திருக்கிறார்கள்.

அணைக்கட்டு

இந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக தி.மு.க. மா.செ நந்தகுமார் உள்ளார். தொகுதியின் எல்லா கிராமங்களிலும் ஏதாவது நலத்திட்டம் ஒன்றைச் செய்திருக்கும் தெம்பில் இவர் இருந்தா லும், இரண்டா வது முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற வர்கள், அரசியலில் சோபித்த தில்லை என்பதால் யோசிக்கிறார். அதனால் இவர் வேலூர் தொகுதி மீது கண் வைத்திருக்கிறார். கடந்த முறை தனக்கு சீட் தரவில்லையென மாவட்ட கட்சி அலுவலகத்தைத் தனது ஆதரவாளர் களோடு சேர்ந்து அடித்து நொறுக்கிய துரைமுருகன் ஆதரவாளரான ஒ.செ பாபு, இந்த முறை தொகுதி யைத் தனக்குத் தர வேண்டும் என அழுத்தம் கொடுத்துக் கேட்கிறார். அவர் மீது செம்மரக் கடத்தல் தொடர்பான வழக்குகள் இருப்பதால்... தங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மாவட்ட துணை செயலாளர் மலர்விழி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், ஒ.செ.கள் குமாரபாண்டியன், வெங்கடேசன் உள்ளிட்டோரும் வரிசையில் இருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வில் வேலூர் புறநகர் மா.செ.வும், சிட்டிங் பால் கூட்டுறவு சங்கத் தலைவருமான மதியழகன்தான் வேட்பாளர் என்று அமைச்சர் வீரமணி உறுதி செய்து விட்டாராம். அதே நேரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ கிருஷ்ண சாமியின் மகன் வழக்கறிஞர் பாலச்சந்தர் வாய்ப்பு கேட்கிறார். தொகுதியில் 60 சதவீத வாக்காளர்கள் வன்னியர்கள். எனவே, கூட்டணி எப்படியிருந்தாலும் இந்த தொகுதியில் போட்டியிட்டே ஆகவேண்டுமென பா.ம.க இந்தத் தொகுதியைக் குறிவைத்துக் களப்பணியைத் தொடங்கி யுள்ளது. ஏற்கனவே நின்று தோல்வியடைந்த வரலட்சுமி, முன்னாள் எம்.பி, என்.டி.சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், எக்ஸ் மா.செ. வெங்கடேசன் என பலரும் சீட் வாங்க, முட்டி மோதுகின்றனர். இந்தத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான பா.ம.க. கலையரசன், இப்போது அ.ம.மு.க.வில் உள்ளார். இந்தத் தொகுதியை, எனக்கு தருவதாக இருந்தால் நான் தி.மு.கவுக்கு வருகிறேன் என அங்கே தூதுவிட்டுப் பார்த்துவிட்டுச் சோர்ந்திருக்கிறார். இவரை அ.ம.மு.க வேட்பாளராக நிற்குமாறு டி.டி.வி.தினகரனே சொல்லியும், ’"கரையேற முடியாதுன்னு தெரிஞ்சி எதுக்கு கடல்ல இறங்கணும்'’ என்று மறுத்து வருகிறார். தே.மு.தி.க.விலோ, மாநில பொறியாளர் அணி ஸ்ரீதர், மாவட்ட துணைச் செயலாளர் பாலமுருகன் ஆகியோர் சீட் ரேஸில் இருக்கின்றனர்.

கே.வி.குப்பம் (தனி)

velloreஇங்கு சிட்டிங் எம்.எல்.ஏ.வாக அ.தி.மு.க. லோகநாதன் உள்ளார். அவருக்கு பதில் வேறு யாருக்கு வேண்டுமானா லும் சீட்டைக் கொடுங்கள் என்று அவருக்கு எதிராகக் கொடி பிடிக்கிறார்கள் ஆளும் கட்சியினர். 2016-ல் பட்டியலில் இருந்த மாவட்ட மாணவரணி செயலாளர் ரமேஷ்குமார், காட்பாடி ஒ.செ. சுபாஷ், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயபிரகாஷ் என பலரும் கட்சியின் தலைமைக் கழகத்தைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர்.

தி.மு.க.வில் 2011ல் நின்று தோல்வியைச் சந்தித்த சீத்தாராமன், 2016 ல் நின்று தோல்வியை சந்தித்த அமுலு, மத்திய மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், கலைஞருக்கு கோயில் கட்டிய மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் கோபி உட்பட பலரும் சீட்டுக்காக சீனியர் துரைமுருகனையும் அறிவாலயத்தையும் "கிரி வலம்'’ வருகின்றனர்.

வேலூர் முன்னாள் மேயரான அ.தி.மு.க.வைச் சேர்ந்த கார்த்தியாயினி, 2016 தேர்தலில் எம்.எல்.ஏ சீட் தரவில்லையென பா.ஜ.க.வுக்குச் சென்றவர், அங்கே மாநில செயலாள ராக உள்ளார். மாநில தலைவர் முருகன் மூலம் இவரும் சீட்டைக் கேட்டு வருகிறார். தே.மு.தி.க.வில் புறநகர் மா.செ.வான கே.பி.பிரதாப் தொகுதியைக் கேட்டு காய் நகர்த்திவருகிறார்.

குடியாத்தம் (தனி)

இங்கு 2016-ல் அ.தி.மு.க சார்பில் நின்று வெற்றி பெற்றவர் ஜெயந்தி பத்மநாபன். இவர் அ.ம.மு.க. பக்கம் தாவியதால், எம்.எல்.ஏ பதவியை இழந்தார். அவருக்குப் பின் 2018-ல் நடைபெற்ற இடைத் தேர்தலில் தி.மு.க. காத்தவராயன் இங்கே வெற்றிபெற்றார். எனினும், அவர் இதய நோயால் இறப்பைத் தழுவிவிட்டார். இந்தத் தொகுதியில் இரண்டு முறை சீட் பெற்று தோல்வியைச் சந்தித்த தி.மு.க மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமார்த்தாண்டம், ஒ.செ கல்லூர் ரவியின் தம்பி மனைவி அமுலு, வழக்கறிஞர் சுந்தர், மாவட்டத் துணைச் செயலாளர் அகரம் பாண்டியன், தொடக்கக் கல்வி ஆசிரியர் மன்ற மாவட்டத் தலைவரான கௌதம பாண்டியன் உட்பட பலரும் சீட்டுக் கேட்டு வருகின்றனர்.

அ.தி.மு.க.விலோ, 2018 இடைத்தேர்தலில் வேட்பாளராக நின்று தோல்வியடைந்த கஸ்பா மூர்த்தி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கோவிந்தசாமி, மாணவரணி மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார், அமைச்சர் வீரமணிக்கு நெருக்கமான பேரணாம்பட்டு கல்வியாளர் கேப்டன் பிரசாத்குமார் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள்.

அ.ம.மு.க.வில் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயந்தி பத்ம நாபன்தான் தனது வேட்பாளர் என உறுதி செய்திருக்கிறாராம் தினகரன். குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசனும் களமிறங்க நினைக்கிறார். தி.மு.க. கூட்டணியில் உள்ள வி.சி.க.வில் வேலூர் பாராளுமன்றத் தொகுதிச் செயலாளர் செல்லப்பாண்டியன் தொகுதியைக் கேட்கிறார். 1962 ல் இந்தத் தொகுதியில் காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்ப தால், அதைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சியின் பேரணாம் பட்டு நகரத் தலைவர் சுரேஷ்குமார் சீட்டுக் கேட்கிறார். தே.மு. தி.க.வில் ந.செ ரமணியும், நாம் தமிழர் கட்சியில் வழக்கறிஞர் தமயந்தியும் களமிறங்கும் தருணத்துக்காகக் காத்திருக்க, பா.ஜ.க.விலோ, மாவட்டச் செயலாளர் தோன்றல் நாயகன் கேட்கிறார். தி.மு.க கூட்டணியில் இருக்கும் சி.பி.எம்.மும். சி.பி.ஐ.யும் கூட இந்தத் தொகுதியைக் குறிவைத்திருப்பதால், அனல் பறக்கிறது.

-து.ராஜா