தமிழக காவல்துறையின் சார்பு ஆய்வாளர் தேர்வுக்காக ஆண்டுதோறும் தமிழக அரசு காலிப்பணியிடங்களை நிரப்பிவருகின்றது. அந்த வகையில் இளங்கலை பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மொத்த காலியிடங்களில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என 2010-ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிக் காலத்தில் அரசாணை (ஆணை எண்: 145 மற்றும் 40) பிறப்பிக்கப்பட்டது.
இதற்கான அரசாணை வெளியிட்டதிலிருந்து இதுவரையிலும் எஸ்.ஐ. தேர்வு 2015, 2019 ஆண்டுகளில் இரண்டுமுறையும், பி.சி. போலீஸ் தேர்வு 2013-ம் ஆண்டில் இருந்து 2015, 17, 18, 19 ஐந்து முறையும் நடைபெற்றுள்ளது. இவை எதிலுமே தமிழ் வழிக்கல்வியில் பயின்றவர்களுக்கான முன்னுரிமை அளிக்கப்படவே இல்லை,
குரூப் 1 தேர்வில் மூன்றுகட்ட தேர்வுநிலை உள்ளது. முதல் நிலை தேர்வு, முதன்மை எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று படிநிலைகளிலும் தமிழ்வழி பயின்றவர்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் தனித்தனியாக தகுதி மதிப்பெண் வெளியிடப்பட்டு தேர்வாளர்கள் தேர்வுசெய்யப்படுகின்றனர். இதேபோன்று தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வாணையம், மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடைப்பிடித்து வருகிறநிலையில் , (டி.என்.யூ.எஸ்.ஆர்.பி) நடத்தும் சார்பு ஆய்வாளர் தேர்வில் தமிழ்வழிக் கல்விக்கான தகுதி மதிப்பெண்கள் இறுதி நிலையில் மட்டுமே வெளியிடப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு 1078 காலிப் பணியிடங்களுக்கு, தமிழ்வழியில் பயின்ற விண்ணப்பதாரர்கள் மட்டும் 23,085 பேர். இவர்களுக்கான எழுத்துத்தேர்வில் தமிழ் வழியில் பயின்றோர்க்கான தகுதி மதிப்பெண்களும் வெளியிடவில்லை, அதன் பின் நடைபெற்ற உடல் திறன் போட்டி, நேர்முகத் தேர்வு என அடுத்தடுத்து வெளியிடாமல், இறுதிக்கட்டத்தில் மட்டும் தமிழ்வழி தகுதி மதிப்பெண் வெளியிடப்பட்டது.
இதனால் 176 காலிப் பணியிடங்களுக்கு 64 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். 112 பேர் தேர்வு செய்யப்படவில்லை. காவல்துறையில் ஏற்கனவே பணியிலுள்ள காவல்துறைக்கான ஒதுக்கீட்டிலுள்ள 40 காலிப் பணியிடங்களும் முழுவதுமாகவே நிரப்பப்படவில்லை. இதனை நக்கீரன் 2018 செப்டம்பர் 19-21 இதழில் “"தமிழ் வழிக் கல்வி மீது லத்தி சார்ஜ்'’’ என பதிவுசெய்திருந்தது. விக்னேஷ்வரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும், தமிழ்வழிக்கல்விக்கு ஆதரவாக உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டு 2020-ல் ஜனவரியில் தேர்வுநடத்தி, உடல்தகுதி தேர்வுமுடித்து நேர்முகத் தேர்வு நடந்ததை நிறுத்திவைத்து, தற்போது 2021-ல் பிப்ரவரி 23 தொடங்கி மார்ச்-2 வரை நடக்க இருக்கிறது. இதிலும் தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற விதிமுறையை கடைப்பிடிக்காமலே நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி தமிழ்ச் செல்வன் அவர்களிடம் கேட்ட போது, "இனிவரும் தேர்வுகளில்தான் இது தொடர வேண்டும் என்று தெரிவித் துள்ளார்கள். அதனால் இந்த நேர்முகத் தேர்வு 23-ஆம் தேதி தொடங்கும். அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை''’என புதுமையான விளக்கமளித்தார்.
வழக்கறிஞர் எட்வின் பிரபாகரோ, ""மீண்டும் மறுபரி சீலனை செய்து அந்தந்த கால கட்டங்களில் நடந்த தேர்வுகளில் வாய்ப்பிழந்தவர்களுக்கு பணிவழங்கவேண்டும். இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த தவறிய துறை அதிகாரிகள்மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.
இத்தனை குளறுபடிகளுக்கும் அப்போதைய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஜி. வினித்தேவ் வான்கடே, துணைக்காவல் கண்காணிப்பாளர் உமாமகேஸ் வரி (எ) மெகலினா மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை, மீண்டும் தேர்வு நடத்திய அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல் ஏன் அளிக்கப்படவில்லை என்பது எஸ்.ஐ. தேர்வில் பாதிக்கப்பட்டவர்களின் கேள்விகளாக உள்ளது.