தமிழகத்திற்கு ராகுலையும் ராகுலுக்கு தமிழகத்தையும் ரொம்பவே பிடித்துவிட்டது. அவரது பயணத்தில் ஜனவரி 25-ஆம் தேதி, ராகுல் எங்கே இருக்கிறார் எனத் தெரியாமல் சில மணிநேரம் மண்டை காய்ந்தது தமிழக போலீசும் உளவுத்துறையும். கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மீது கடுகடுப்புக் காட்டியது போலீஸ்.
ராகுலோ கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள தளவாய்புரம் மெயின் ரோட்டில் பெத்தான்கோட்டை முருங்கை மரத் தோட்டத்தில் ஜாலியாக வாக்கிங் போய், அங்கிருந்த யூடியூப் சமையல் கலைஞர்களின் கைவண்ணத்தில் தயாராகிக் கொண்டிருந்த காளான் பிரியாணிக்கு சைடிஷ்ஷாக வெங்காய பச்சடி கிண்டிக் கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள மிகச் சிறிய கிராமமான வீரமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் தான் அந்த யூடியூப் சேனல் சமையல் கலைஞர்கள். அவர் களில் ஒருவரான சுப்பிரமணியன்,’’""எம்.காம்., எம்.ஃபில்., முடிச்சிட்டு ஆன்லைன் பிஸினஸ் பண்ணினேன். என் தம்பிகள் முருகேசனும் அய்யனாரும் வெளிநாட்டிலிருந்து ஊருக்குத் திரும்பியிருந்தார்கள். மறுபடியும் வெளிநாடு போவது பற்றி குடும்பத்தில் யோசித்தார்கள். கல்யாண வீடுகள்ல சமைக்கும் எங்க தாத்தா பெரியதம்பிகிட்ட போய் யூடியூப் சேனலில் சமைக்கலாம்னு சொன்னோம். அதெல்லாம் சரிப்படுமான்னு யோசிச்சாரு. வாரத்துல ஒருநாள் யூடியூப்பில் சமைக்கலாம்னு முடிவு செஞ்சோம். கிராமத்து எதார்த்த சமையல்ல இறங்கினோம். கஜா புயலப்ப ஈசல் குமிஞ்சது. அதை அரிசியுடன் வறுத்து சமைத்து சாப்பிட்டதை அப்லோட் பண்ணுனதற்கு கொஞ்சம் வரவேற்பு கிடைச்சது.
அப்புறம் கண்மாய்ல மீன் பிடிச்சு அங்கேயே சமைச்சு சாப்பிடுறது தாத்தா, பாட்டி சமையல் டெக்னிக்கை இதையெல்லாம் அப்லோட் பண்ணியது வரவேற்பு கிடைச்சது. கிடைக்குற பணத்துல ஏழைகளுக்கு சோறு போட்டோம். இதையெல்லாம் பார்த்த காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அக்காவோட தம்பி தினேஷ் வந்தார், அப்புறம் ஜோதிமணி அக்காவே வந்தாங்க. வாய்ப்பு கிடைக்கிறப்ப ராகுல் காந்திகிட்ட உங்கள அறிமுகப்படுத்துறேன்னு சொன்னாங்க. சொன்ன மாதிரியே பெத்தான்கோட்டை முருங்கை தோப்புக்குள்ள சமைக்க வச்சு, திடீர்னு ராகுலை கூட்டிட்டு வந்து திக்குமுக்காட வச்சுட்டாங்க.
மனுஷன் என்னமா சிம்பிளா இருக்காரு. ஹாய் சொல்லிக்கிட்டே வந்து, வெங்காய பச்சடி கிண்டினாரு, எங்களோட உட்கார்ந்து சாப்பிட்டாரு. எங்களின் வெளிநாடு போகும் ஆசையை சொன்னதும், அமெரிக்காவுக்கு அனுப்புறேன்னு சொல்லிட்டு, அவரோட சிகாகோ ஃப்ரண்ட் கிட்டயும் விசா எடுக்கச் சொல்லிட்டார்'' என்றார் பூரிப்புடன். ""சொந்த ஊர்லயே சாதிக்க முடியும்கிறதுக்கு நாங்களே சாட்சி'' என்றார் அய்யனார்.