கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் 78 வயது மாதையன் மே 25 அன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
சந்தனக் கடத்தல் வீரப் பனின் அண்ணன் மாதையன், ஈரோடு மாவட்டம் பங்களா புதூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வனச்சரகர் சிதம்பரம் என்கிற சிதம்பரநாதன் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த 1996-ஆம் ஆண்டு அவருக்கு ஈரோடு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கோவை சிறையிலிருந்து, 7 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/veerappan=bro.jpg)
மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாதையன், மே 1-ஆம் தேதி, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐ.சி.யூ. பிரிவில் சிகிச்சை பலனின்றி, புதன்கிழமை அதிகாலை 5:45 மணிக்கு கடும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு, மாரடைப்பால் இறந்ததாகச் சொல்கிறது மருத்துவர்களின் அறிக்கை.
சிறைக்கைதி மரணம் என்பதால், நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, சேலம் ஜே.எம். & 3 மாஜிஸ்ட்ரேட் தங்க கார்த்திகா, நேரில் சடலத்தைப் பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்.
போலீசிடம் மாதையன் சிக்கியது தனிக் கதை. உறவினர் ஒருவருடைய மகள் பெரிய மனுஷியாகி இருக்க, அந்த விழாவில் கலந்துகொள்ள வீரப்பன் வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதன்பேரில் விழா நடந்த வீட்டை முற்றுகையிட்ட காவல்துறையினர், மாதையன் உள்ளிட்ட 5 பேரை மடக்கிப் பிடித்தனர். தலைமலை வனச்சரகராக இருந்த சிதம்பரநாதனிடம் ஒப்படைத்தனர். அவர் மாதையன் உள்ளிட்டோரை அடித்துச் சித்ரவதை செய்துள்ளார்.
அண்ணனைக் கொடுமைப்படுத்தியதற்கு வஞ்சம் தீர்க்கும் விதமாக வீரப்பன், சிதம்பரநாதனை சுட்டுக் கொலை செய்தார். இந்த வழக்கில்தான் மாதையனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, 34 ஆண்டுகள் சிறையில் இருந்தவர், உடல்நலமின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் பொறுப்பாளரும், வீரப்பனுடன் பயணித்தவர்களுள் ஒருவருமான அன்புராஜ் நம்மிடம் பேசினார். ''வீரப்பன் வழக்கில் தொடர்ச்சியாக தமிழ்நாடு, கர்நாடகா சிறைகளில் 6 சிறைவாசிகள் 33 வருஷங்களாக சிறையில் இருக்கின்றனர். வயதான நிலையில் மாதையன், உடல்நலமின்றி போராடி சிறையில் அவதிப்பட்டதால், அவரை விடுவிக்கக் கோரி முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். இதேபோல் ஆண்டியப்பன், பெருமாள் என்ற இருவர் 34 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். மாதையன் மரணத்திற்குப் பிறகு, அவர்களின் விடுதலை எல்லாம் சாத்தியப்படுமா என்ற கேள்வி எழுகிறது. மாதையனுக்கும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் குற்றவாளியாகவே இருந்தாலும்கூட, அவருக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான சட்ட உதவிகள் கிடைத்திருக்க வேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/veerappan=bro1.jpg)
இரண்டு மடங்கு ஆயுள் தண்டனையை விட அதிக காலம் 34 ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளார். வீரப்பன் வழக்கில் சிறையில் உள்ள மற்ற இருவரையும் விரைவில் விடுதலை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, 10 ஆண்டுக்கும் மேலாக உள்ள கைதிகளை, நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்,'' என்கிறார் அன்புராஜ்.
மாதையனின் உடலை, மருத்துவர் கோகுல் தலைமையிலான குழுவினர், மாஜிஸ்ட்ரேட் தங்க கார்த்திகா முன்னிலையில் கூராய்வு செய்தனர். இப்பணிகள் அனைத்தும் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டது. உடற்கூராய்வு முடிந்த பிறகு, மாலை 06:20 மணிக்கு மாதையனின் சடலம் அவருடைய மனைவி மாரியம்மாள், மகள் ஜெயம்மாள், மருமகன் முனுசாமி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாதையனின் சடலத்தைப் பார்த்து அவருடைய குடும்பத்தினர் மற்றும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, அவருடைய மகள்கள் வித்யா, விஜயலட்சுமி ஆகியோர் கண்ணீர் சிந்தினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/veerappan=bro2.jpg)
மருத்துவமனை வளாகத்தில், தமிழ்த்தேசிய அமைப்பினர், வீரப்பனின் ஆதரவாளர்கள், ''வீர வணக்கம்... வீர வணக்கம்... வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட மாதையனுக்கு வீர வணக்கம்...,'' என்று முழக்கமிட்டனர். கியூ பிராஞ்ச் உள்ளிட்ட உளவுப்பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டி ருந்தனர். இரவு 11:00 மணியளவில், வீரப்பனின் சமாதி அருகே, மாதையனின் உடலும் அடக்கம் செய்யப் பட்டது.
தமிழ்த்தேசிய அமைப்பு களைச் சேர்ந்த தர்மபுரி சிவக்குமார், திருவண்ணா மலை கண்ணதாசன் ஆகி யோர் கூறுகையில், ''மாதை யன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தக் கூட உள்ளூர் தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள், வீரப்பன் பெயரைச் சொல்லி கட்சி நடத்தி வருபவர்கள் யாரும் வரவில்லை. நோய் வாய்ப்பட்ட கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/veerappanbro-t.jpg)