மக்களுக்காக அரசு ஒதுக்கும் பத்து ரூபாய் திட்ட நிதியில், நான்கு ரூபாய் மட்டுமே அவர்களுக்கு போய் சேருகிறது. ஆறு ரூபாய் அரசு அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் லஞ்சமாகச் செல்கிறது. இதை மாற்றினால் தான் இந்தியா தலை நிமிரும்” என்று சொன்னவர் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி. இப்படிப் பட்ட லஞ்சத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வருவாய்த்துறையில், இருபத்திமூன்றுவிதமான சான்றிதழ்களைப்பெற இணைய வழி மூலம் விண்ணப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அப்படி விண்ணப்பித்தால், சான்றிதழ்களை அனுப்பாமல் காலங்கடத்தும் அதிகாரிகள், அதுகுறித்து விசாரிக்கவரும் மனுதாரரிடம், சான்றிதழ் தருவதற்கு லஞ்சம் கேட்கிறார்கள். தர மறுத்தால், விண்ணப்பத்தில் குறை இருப்பதாகக்கூறி சான்றிதழை மறுக்கிறார்கள். இப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார், விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி. எஸ்.பி.யாக உள்ள தேவநாதன்.
2019-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.யாக தேவ நாதன் இருந்தபோது, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட் டங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் திட்ட இயக்குநராக இருந்த மகேந்திரனின் அலுவலகம், வீடு, இவரது நண்பரான புதுக்கோட்டை மாவட்ட திட்ட இயக்குனர் மாலதி வீடு ஆகியவற்றில் ரெய்டு நடத்தி, பல்வேறு ஆதாரங்களைச் சேகரித்து வழக்கு தொடர்ந்தார். கடுப்பான மகேந்திரனோ, அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க. மேலிடத்தைத் தொடர்புகொண்டு, தேவநாதனை திருவண்ணாமலைக்கு மாற்றும்படி செய்தார். கள்ளக்குறிச்சி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளரான பாபு, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது தேவநாதன் டீம் கைது செய்தது. அவருடைய புரோக்கர் ஜோதிடர் செந்தில்குமார் என்பவரையும் கைதுசெய்தனர்.
தற்போது ஏ.டி.எஸ்.பி.யாக பிரமோஷனில் விழுப்புரம் மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டு வந்துள்ளார் தேவநாதன். தனது அதிரடி லஞ்ச வேட்டையைத் தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அறியகோஷ்டி கிராமத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 288 வீடுகள் கட்டப்பட்டதில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதை ஆதாரங்களுடன் கண்டுபிடித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பியதின் அடிப்படையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் எட்வின் சாம், செயற்பொறியாளர் தவமணி, உதவி பொறியாளர் ஜெயக்குமார் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் புதுக்கோட்டை மாவட்ட வனத்தோட்ட கழக மண்டல மேலாளர் நேசமணி என்பவரின் வாகனத்தை சோதனையிட்டு 35 லட்ச ரூபாய் பணத்தை கைப்பற்றினார். விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முருகன் அலுவலகத்தில் சுமார் 30 லட்சத்தை கைப்பற்றினார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, திண்டிவனம் சார்பதிவாளர் அலுவலகத்தில், பதிவாளர் சங்கரலிங்கம் ரூ.50,000 லஞ்சப் பணத்தைப் பெறும்போது, சங்கரலிங்கத்தையும், ஆவண எழுத்தர் சரவணனையும் கைது செய்தனர். கடந்த இருபத்தி ஒன்பதாம் தேதி, சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் என்ற இடத்தில் வாகன சோதனையில் திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சரவணகுமார் வந்த காரை மடக்கி 38,75,000 ரூபாயைக் கைப்பற்றினர். சென் னையிலுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்குக் கொடுப்பதற்காக எடுத்துச்செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
செஞ்சி, தெய்வீக மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ராஜா தேசிங்கம், "எங்கள் மாவட்டத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக தேவநாதன் வந்த பிறகு பல்வேறு துறைகளிலும் புகுந்து லஞ்சப் பேர்வழிகளை வேட்டை யாடி வருகிறார். இதன் காரணமாக தற்போது அரசு அலுவலகங்களில் உடனுக்குடன் மக்களுக்கான பணிகள் நடைபெறுகின்றன. பொதுமக்கள் கேட்கும் சான்றிதழ் உடனுக்குடன் கிடைக்கின்றன'' என்கிறார்.
உளுந்தூர்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ், "பெரும்பாலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எப்போதாவது ஒருமுறை லஞ்சம் வாங்குபவர்களை பிடித்து சம்பிரதாயத்திற்கு வழக்கு போடுவார்கள். சில நாட்கள் பரபரப்பாக பேசப்படும். சில ஆண்டுகளில் வழக்கில் இருந்து சம்பந்தப்பட்ட ஊழல்வாதிகள் வெளியே வந்து தங்கள் லஞ்ச கைவரிசையை மீண்டும் நீட்டுவார்கள். அப்படிப்பட்டவர் களை லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி. எஸ்.பி. தேவநாதன் தலைமையிலான டீம், தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்து வழக்குப் போடுவதோடு, அதை முறையாக விரைவாக நடத்தி, நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தருகிறார்கள். அதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இங்கே பணி மாறுதலில் வந்த அதிகாரிகள் ஊழல் மூலம் சம்பாதித்த பணத்தில் பங்களா வீடுகள் கட்டி இங்கேயே செட்டிலாகிறார்கள். அப்படிப்பட்டவகளிடம் விசாரணை நடத்தி வழக்கு போடுகிறது லஞ்ச ஒழிப்புத் துறை. இதே நிலை ஒவ் வொரு மாவட்டத்திலும் தொடர்ந் தால் பொதுமக்கள் சந்தோஷமாக நிம்மதியாக வாழ்வார்கள். ஊழலற்ற அரசு நிர்வாகத்தைக் கண்டு வாழ்த்துவார்கள். மக்களுக்கான திட்டங்கள் லஞ்சமில்லாமல் சென்று சேர்ந்தால் தமிழக அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும். எனவே முதல்வர் ஸ்டாலின், மாவட்டம்தோறும் தேவநாதன் போன்ற நேர்மையான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை பணியில் அமர்த்த வேண்டும்'' என்கிறார்.
பெருச்சாளிகள் ஒழியும்வரை தொடரட்டும் வேட்டை!