கொரோனா காலகட்டத்தில் நோய்த்தொற்று பரவாமல் உயிரைப் பணயம் வைத்து உழைத்த 750 தூய்மைப் பணியாளர்களை மனித தன்மையற்ற முறையில் தூக்கி வீசியுள்ளது மாநகராட்சி.
ஒருகோடி மக்கள் வாழும் சென்னையில், ஒரு நாளைக்கு கொட்டப்படும் சுமார் 5,800 டன் குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரம் பேர். இதில் 5 ஆயிரம் பேர் அரசு பணியாளர்கள் மற்றவர்கள் தொகுப்பூதிய தொழிலாளிகளாகவே உள்ள னர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களைத் தனியாருக்கு தாரை வார்த்ததின் விளைவே... தூய்மைப் பணியாளர்களின் நீக்கத்திற்கான காரணமாக உள்ளது.
அமைச்சர் எஸ்.பி.வேலு மணி, சுமித் நிறுவனத்திற்கு 7 மண்டலத்தையும், ராம்கி நிறுவனத்திற்கு 4 மண்டலங்களையும் கொடுத்துவிட்டதால், மீதமுள்ள 4 மண்டலங்கள்தான் மாநகராட்சியின் கீழ் செயல் பட்டுவருகிறது. தனியாரிடம் உள்ள 11 மண்டலங்களிலும் அந்த நிறுவனங்களே ஆட்களை நியமித்ததால், ஏற்கனவே அங்கிருந்தவர்கள் மாநகராட்சிக்கு கீழ் உள்ள 4 மண்டலங்களுக்கு மாற்றப்பட்டதால் அந்த 4 மண்டலங்களில் பணிபுரிந்து வந்த தொகுப்பூதிய தூய்மை பணியாளர்கள் இப்போது பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பணி நீக்கப்பட்ட ரத்தினம்மாள் கூறுகையில் ""நான் பத்து வருடமாக இந்தப் பணியைச் செய்துவருகிறேன். வழக்கம்போல வேலைக்குப் போனபோது. "நீங்க யாரு' என்று கேட்டு வெளியே போகச்சொன்னாங்க, "ஏன்' என்று கேட்டதற்கு "உங்களை எல்லாம் வேலையைவிட்டுத் தூக்கிட் டாங்க'ன்னாங்க. நியாயம் கேட்டதுக்கு போலீஸை வைத்து அடிச்சி விரட்டிட்டானுங்க. நான் கணவனை இழந்தவள், அன்றாடச் சாப்பாட்டுக்கே வழியில்லாமல்தான் இந்த வேலையை வைத்து நம் குழந்தைகளை காப்பாத்திடலாம் என்று இருந்த நிலையில் இப்படி ஆயிடுச்சே'' என அழுதார்.
அடுத்துப் பேசிய ஜெயந்தி, ""கொரோனா காலத்தில் எங்கள் உழைப்பைச் சுரண்டிக்கொண்டு தற்போது, மீண்டும் தனியார் நிறுவனத்திடம் அடிமாட்டு விலைக்கு நாங்கள் மீண்டும் வேலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எங்களை மீண்டும் இந்த அரசு பணியில் நியமிக்க வேண்டும்'' என்றார்.
இந்திய குடியரசு தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெலிக்ஸ் கூறுகையில்... ""இது மாநகராட்சி செய்த மோசடியான செயல். பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாகப் பணியை நிரந்தரமாக்கவேண்டும். அடிப்படை சம்பளமும், அரசு சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்'' என்றார்.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்களிடம் கேட்டபோது... பேச மறுத்துவிட்டார்.
"தூய்மைப் பணியாளர்கள் என்று பெயர் மாற்றினால் மட்டும் தீர்வு கிடைத்துவிடாது. சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி அடிப்படை ஊதியம் உள்ளிட்ட வைகளை வழங்கி பணி பாதுகாப்பை வழங்குவதே' நிரந்தரத் தீர்வாகும்.