தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற தொல்லியல் அலுவலர்கள் பணிக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வழக்கத்துக்கு மாறான நடைமுறைகள் பின்பற்றப் பட்டுள்ளதாகவும், இதனால் தகுதியானவர்கள் தேர்வுபெறுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் தேர்வு எழுதியவர்கள்.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின்கீழ் மாவட்டம்தோறும் காலியாக உள்ள 18 தொல்லியல் அலுவலருக்கான பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். இதற்காக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்துவதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டு, 2020, பிப்ரவரி 29-ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இத் தேர்வுக்கான முடிவு செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது.
300 பேர் தேர்வு எழுதியதில், 145 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் "டாக் டி.வி. இசேவை மையம்' மூலம் சான்றிதழ்களை அனுப்பி வைக்க 5-11-2020 வரை காலக்கெடு வழங்கப்பட்டது. சான்றிதழ்களை அனுப்பிய மாணவர்களை நேர்முகத் தேர்விற்கு அவர்கள் பெற்றுள்ள ரேங்க் அடிப்படையில் அழைக்காமல் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ் இலக்கியம் முதுகலை பட்டப்படிப்பு பயின்றவர்களும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின்கீழ் வழங்கப் படும் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் முதுகலை பட்டயப் படிப்பைப் பயின்றவர்களும் இந்தப் பணியிட வாய்ப்பிற்கு முன்னுரிமை பெற்றவர்கள். அதேபோல தமிழ் இலக்கியம் முதுகலை பட்டப்படிப்பிற்கு இணையான முதுகலை வரலாறு, முதுகலை பண்டைய வரலாறு, தொல்லியல் போன்ற படிப்புகள் பல்கலைக்கழகங்களில் படித்தவர்களும் இத்தேர்வுக்கு தகுதியானவர்களே என்ற அடிப் படையில் அவர்களும் தேர்வு எழுதியிருந்தனர்.
இந்நிலையில் ஓவரால் ரேங்கிலும், கம்யூனல் ரேங்கிலும் முதன்மையில் உள்ள முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின்கீழ் முதுகலைப் பட்டயம் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் படித்தவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட வில்லை. ஓவரால் ரேங்க், கம்யூனல் ரேங்க் இரண்டிலும் பின்னால் உள்ளவர்களான வரலாறு படித்தவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். (உதாரணத்திற்கு ) எம்.பி.சி.க்குரிய நான்கு பணி யிடங்களுக்கு தரவரிசைப் பட்டியல்படி 1, 3, 4, 5, 6, 10, 13, 24 ஆகிய 8 பேரை அழைத் துள்ளனர். 2, 7, 8, 9, 11, 12, 14 அழைக்கப் படவில்லை.
வழக்கமான நடைமுறைகள் கைவிடப்பட்டு வழக்கத்திற்கு மாறான முறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு செயல்பட்டுள்ளது .
இவர்களின் நிராகரிப்புக்கு டி.என்.பி.எஸ்.சி.யின் பதில் என்னவெனில், "தமிழ் படித்த மாணவர்களிடம் பி.எஸ்.டி.எம். சான்றிதழ் இணைக் கச் சொல்லியிருந்த நிலையில் அவர்கள் யாரும் இணைக்க வில்லை' என்ப தாகும். ""அதற்கான சான்றிதழ் கொடுக்க வேண்டிய, தமிழ் நாடு அரசு தொல் லியல் துறை தமது நிறுவனத்தில் பயின்ற மாணவர் களுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான முன்னுரிமை அளிக்கும் பி.எஸ்.டி.எம். சான்றிதழ் வழங்கவில்லை'' என்கிறார்கள் தேர்ச்சி பெற்றவர்கள்.
இதுதொடர்பாக பேசிய ஆனந்தி, ""நான் ஓவராலாக 4-வது ரேங்கும், கம்யூனலில் 3-வது ரேங்கும் எடுத்திருக்கிறேன். ஆனால் என்னை நேர்முகத்தேர்வுக்கு அழைக்காமல். எனக்குப் பின்னால் இருப்பவர்களை அழைத்துள்ளனர். டி.என். பி.எஸ்.சி.யிடம் கேட்டதற்கு எந்தப் பதிலும் கொடுக்க மறுக்கின்றனர். எனவே நீதிமன்றத்தை நாடியுள்ளேன். இப்படி தமிழ் படித்து ரேங்கில் முதலில் வந்தாலும். ஆங்கிலம் வழி படித்தவர்களை மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது'' என்றார்.
ஓய்வுபெற்ற தொல்லியல்துறை ஆய்வாளர் பூங்குன்றன் கூறுகையில் ""இதுபோன்ற செயல் மிகவும் கண்டிக்கதக்கது. தொல்லியல்துறையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்குத்தான் பழைய தமிழையும் அதன் வடிவ அமைப்புகளையும் கண்டுபிடிக்க முடியும். அதன் நுட்பம் தெரிந்தால்தான் அதனை அடையாளப்படுத்த முடியும். அது ஆங்கிலவழிக் கல்வியில் படித்தவருக்குச் சிரமம்''’என்கிறார்.
டி.என்.பி.எஸ்.சி. தரப்பிலோ, “"தற்போது நேர்முகத் தேர்வு நடக்கும் நிலையில் நாங்கள் எந்தப் பதிலும் தெரிவிக்க முடியாது'’என்றனர்.
இதுதொடர்பாக தொல்லியல்துறை இயக்குனர் உதயச்சந்திரனிடம் கேட்டபோது, “""தமிழ், ஆங்கிலம் இரு மொழி வழியிலும் தேர்வு நடைபெற்றுள்ளது. இதிலிருக்கும் சிக்கலை நாங்கள் விவாதித்துள்ளோம். சரியான முடிவை கூடியவிரைவில் எடுப்போம்'' என்றார் உறுதியான குரலில்.
-அ.அருண்பாண்டியன்