ந்தத் தேர்தலில், அதிகாரச் செருக்கோடு திரிந்த ஆளுங்கட்சிப் புள்ளிகள் பலருக்கும் மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டியிருக்கிறார்கள்.

குறிப்பாக, விழுப்புரம் மாவட்ட ஆளும்கட்சி மா.செ.வாக இருப்பவர் அமைச்சர் சி.வி.சண்முகம். தேர்தலுக்கு முன்புவரை தொகுதியில் அசைக்கமுடியாத செல்வாக் குள்ளவராகத் தன்னை இவர் காட்டிக்கொண்டார். அப்படிப் பட்டவரையே தோற்கடித்து, உட்கார வைத்திருக்கிறார்கள் வாக்காளர்கள். அதேசமயம் விழுப்புரம் தி.மு.க. வடக்கு மா.செ.வான செஞ்சி மஸ்தான், இரண்டாவது முறையாக செஞ்சி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

d

விழுப்புரம் தி.மு.க. மா.செ.வாக புகழேந்தி, கடந்த 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு, அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனிடம் தோல்வியைத் தழுவினார். ஆனால் இந்தமுறை அதே விக்கிரவாண்டியில் போட்டியிட்டு, வெற்றிக்கனியைப் பறித்திருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முத்தமிழ்ச்செல்வன் தோல்வியைத் தழுவியுள்ளார்.

Advertisment

இதேபோல் அ.தி.மு.க.வின் கள்ளக் குறிச்சி மாவட்டத்தின் மா.செ.வாக இருக்கும் குமரகுரு, எடப்பாடியின் மிக நெருங்கிய நண்பர். அவரையும் உளுந்தூர்பேட்டை வாக்காளர்கள் தோற்கடித்துள்ளனர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக மற்ற எல்லா வேட்பாளர்களையும்விட தொகுதியில் உள்ள அனைத்துத் தரப்பினருக்கும், தேர்தலை மனதில் வைத்து தாராளமாக உதவிகளைச் செய்து வந்தார். எப்படியும் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்று வைட்டமின் ’"ப'’வை வாரியிறைத்தார். அப்படியிருந்தும் அவரால் கரையேற முடியவில்லை.

மேலும் குமரகுருவின் சிஷ்யராக இருந்தவர் கள்ளக்குறிச்சி செந்தில்குமார். இவரை கள்ளக்குறிச்சி வேட்பாளராக கட்சித் தலைமையிடம் வற்புறுத்தி சீட்டு வாங்கிக் கொடுத்து, போட்டியிட வைத்தார் குமரகுரு. அத்தோடு அவருக்காக தேர்தல் செலவு முழுவதையும் குமரகுருவே பார்த்துக் கொண்டாராம். அந்த செந்தில் குமார் வெற்றி பெற்றுள்ளார். குரு, குமரகுரு தோற்றுப்போக, சிஷ்யர் செந்தில் வெற்றி பெற்றதை வினோதமாகப் பார்க்கிறார்கள் அ.தி.மு.க.வினர். இதுதான் தேர்தல் நடத்தும் விளையாட்டு.

அதே நேரத்தில் தி.மு.க.வின் வடக்கு, தெற்கு மா.செ.க்களாக வசந்தன் கார்த்திகேயனும் உதயசூரியனும் இருக்கிறார்கள். இந்த இருவரையும் வெற்றிபெற வைத்துள்ளார்கள் வாக்காளர்கள்.

Advertisment

உதயசூரியன் சங்கராபுரத்திலும், வசந்தன் கார்த்திகேயன் ரிஷிவந்தியத்திலும், போட்டியிட்டு அதிகளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளனர்.

d

அடுத்து பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன், கடந்தமுறை போலவே குன்னத்தில் இந்த முறையும் போட்டியிட, அவரை, அரியலூர் தி.மு.க. மா.செ.வான சிவசங்கர் ஏகபோகமாக வெற்றிகொண்டி ருக்கிறார். அரியலூர் அ.தி.மு.க. மா.செ.வான அரசுக் கொறடா தாமரை ராஜேந்திரன், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.தி.மு.க. மா.செ.வான வழக்கறிஞர் சின்னப்பாவிடம் தோல்வியைத் தழுவினார்.

தி.மு.க.வின் கடலூர் மேற்கு மா.செ.வான கணேசன், திட்டக்குடியில் இரண்டாம் முறையாக வெற்றிவாகை சூடியிருக்கிறார். கடலூர் கிழக்கு மா.செ.வான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், குறிஞ்சிப்பாடி தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்றுள்ளார்.

கடலூர் அ.தி.மு.க.வில் மூன்று மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். இதில் கிழக்கு மா.செ.வாக இருக்கும் அமைச்சர் சம்பத், இந்தமுறை கடலூரில் தோல்வியைத் தழுவியிருக்கிறார். அதேநேரம் அ.தி.மு.க. மேற்கு மா.செ.வான செயலாளர் அருண்மொழித்தேவன், புவனகிரி தொகுதியிலும் தெற்கு மா.செ.வான பாண்டியன் மீண்டும் சிதம்பரம் தொகுதியிலும் போட்டியிட்டனர். இவர்கள் இருவருக்கும் வெற்றி மகுடம் கிடைத்திருக்கிறது.

minister

அ.தி.மு.க.வைச் சேர்ந்த 10 மந்திரிகளையும் பல மாவட்டச் செயலாளர்களையும் வாக்காளர்கள் தோற்கடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குச் சொல்லப்படும் காரணம், இவர்கள் கடந்த பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஏகபோகமாக சம்பாதித்து, தங்களை மட்டுமே செழிப்பாக்கிக்கொண்டனர். அதனால் ஏற்பட்ட செருக்கில் அவர்கள் மக்களை மதிக்கவே இல்லை. அதனால் இந்த முறை அவர்களுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்டியிருக்கிறார்கள் என்பதுதான்.

அதிகாரத் திமிரை அடக்கும் ஆயுதத்தை, மக்களுக்குத் தேர்தல் மூலம் ஜனநாயகம் கொடுத்திருக்கிறது. அதை வைத்து அவர்கள் உரிய நேரத்தில் உரியபடி களமாடியிருக்கிறார்கள். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்; வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும். இதை மனதில் வைத்து நிதானமாகச் செயல்பட்டால் அதிகாரச் செருக்கு தலைக்கேறாது. வெற்றியும் தோல்வியும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.