சாதிச் சச்சரவும் சங்கடமும்!
விருதுநகர் மாவட்ட வேண்டுராயபுரமும், துலுக்கபட்டியும் இருவேறு சமூகத்தினர் வாழும் கிரா மங்கள். இவர்கள், சாதீய ரீதியில் விலகி வாழ்வதால் அடிக்கடி பிணக்கு ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சி யாக அரங்கேறியிருக்கிறது அந்த கசப்பான நிகழ்வு.
வேண்டுராயபுரத்தில் கடந்த சில நாட்களாக ஆடு, கோழிகள் திருட்டுப் போனதால், அந்த கிராமத்தினர் மல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். கடந்தவாரம் அதிகாலை நேரத்தில் அந்தவூர் வழியாக துலுக்கபட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரனும், சதீஸ்வரனும் டூவீலரில் வர, அவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு, “"யாருடா நீங்க? இந்த நேரத்துல எங்க ஏரியா வழியா எதுக்கு வந்தீங்க? அதான், வேற ரூட் இருக்குல்ல?'’என்று விசாரித்தபடியே தாக்கத் தொடங்கினர். அதோடு, மல்லி காவல்நிலையத்துக்கும் இழுத்துச் சென்றனர். அங்கிருந்த போலீசார் இருவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர். இதைத் தொடர்ந்து, சாதி அடிப்படையில் தங்களைத் தாக்கியதாகப் புகார் கூறி, மாரீஸ்வரனும் சதீஸ்வரனும், சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று ‘அட்மிட்டாக... துலுக்கபட்டி கிராமத்தினர், தாக்குதல் நடத்திய வேண்டுராயபுரத்தினர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று கூறி, சிவகாசி-விளாம்பட்டி பிரதான சாலையில் மறியலில் குதித்தனர். உடனே, காவல் துறையினர் குவிக்கப்பட்டு கிராமத்தினரைக் கலைந்து போகும்படி எச்சரித் தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக் கும்விதமாக பெண் ஒருவர், "தீக்குளிக்கப் போகிறேன்' என்றபடி மண்ணெண்ணெய் கேனுடன் ஓடிவர, தடுக்க முற்பட்ட பெண் காவலர் தடுமாறிக் கீழே விழுந்தார். பெண் காவலர் மண்டை உடைந்தது’என்று அந்த இடமே பர பரப்பானது. இதனால் அதிர்ச்சியடைந்த வேண்டுராயபுரத்தினர் மெல்லக் கலைந்து சென்றனர்.
பட்டியலின இளைஞர்களை அடித்த தாக, வேண்டுராயபுரம் கிராமத்தினர் 6 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவாகி யுள்ளது. சாலை மறியல் செய்து போக்குவரத் துக்கு இடையூறு ஏற்படுத்திய துலுக்க பட்டி கிராமத்தினரும் வழக்கைச் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
-அதிதேஜா
லஞ்ச அதிகாரிகளுக்கு பாடம் புகட்டிய பள்ளி!
நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்ரீகம்பத்துக்காரர் சிறப்புப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் தாளாளராக விஜயகுமார் என்பவரும், செயலாளராக அவருடைய மனைவி உமா மகேஸ்வரியும் இருந்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பணியாற்றிவரும் இரண்டு சிறப்பு ஆசிரியர்கள், ஒரு பிஸியோதெரபிஸ்ட் ஆகிய மூவருக்கும் 2020 -2021ஆம் ஆண்டுக்கான மானிய ஊதியமாக 5 லட்சம் ரூபாயை தமிழக அரசு கடந்த மாதம் விடுவித்தது. இதை நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், சம்பந்தப்பட்ட பள்ளியின் வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும். ஆனால், "இந்த ஊதியத்தொகை தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்றால், 2.5 லட்சம் ரூபாய், தங்களுக்கு கமிஷனாகத் தரவேண்டும்' என மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சியும் இணை மறுவாழ்வு அலுவலர் சேகரும் டிமாண்ட் வைத்ததோடு, "தாங்கள் கேட்டபடி ’கவனித்தால்தான்’ ஊதியத் தொகையை விடுவிப்போம். இல்லாவிட்டால் அரசின் கஜானாவுக்கே திருப்பி அனுப்பிவிடுவோம்' என்று மிரட்டியிருக்கிறார்கள். இதனால் திகைத்துப் போன விஜயகுமார், இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்சஒழிப்புப் பிரிவிடம் புகார் அளிக்க, அவர்கள் லஞ்சம் கேட்டவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டமிட்டனர்.
அவர்கள் போட்டுத் தந்த திட்டப்படி, விஜயகுமார் 2.50 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள, மறுவாழ்வு அலுவலர் சேகர் வீட்டுக்குச் சென்று பணத்தைக் கொடுத்தார். அதை வாங்கிய சேகர், உடனடியாக நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி வீட்டுக்குச் சென்று, லஞ்சப் பணத்தில் சரிபாதியை ’நாணயமாகப்’ பிரித்துக் கொடுத்தார். இவற்றையெல்லாம் ரகசியமாகக் கண்காணித்த லஞ்சஒழிப்புப் பிரிவு அதிகாரிகள், ஜான்சியையும், சேகரையும் கையும் களவுமாக மடக்கிப்பிடித்துக் கைது செய்து, அவர்களிடம் இருந்த லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்தனர்.
-இளையராஜா
புஸ்வாணமான புகார்!
சென்னையில் தேர்தல் வெற்றி தந்த குஷியில், தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் முகப்பேர் கிழக்குப் பகுதியில் இருக்கும் அம்மா உணவகத்திற்குச் சென்றனர் .அங்கு ஜெ.’படத்துடன் வைக்கப்பட்டி ருந்த எடப்பாடி அரசின் வினைல் போர்டைக் கிழித்தெறிந்தனர்.
இதைப் படம்பிடித்த அ.தி.மு.க. தரப்பு, தி.மு.க. தரப்புக்கு எதிராகத் தங்களுக்குக் கிடைத்த துருப்புச்சீட்டாக கருதியது. உடனே அதைத் தங்கள் ஐ.டி. விங் மூலம், சமூக ஊடகங்களில் வைரலாக்கியது. அதேபோல் அ.தி.மு.க. பிரமுகர்களும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலை வர்களும், அந்த பேனர் கிழிப்புக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்டனர். இந்த செய்தி வந்ததுமே சுதாரித்துக்கொண்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பேனரைக் கிழித்த தி.மு.க.வினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். உடனடியாக தி.மு.க.வின் தெற்கு மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியம் ”மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர்ப் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அவ்விரு வரை கழகத்திலிருந்து நீக்கவும் உத்தரவிட்டார். நவசுந்தர், சுரேந் திரன் இருவர் மீதும் ஜெ.ஜெ. நகர் காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட, அ.தி.மு.க. தரப்பின் புகார் புஸ்வாணமாகி யிருக்கிறது.
-நாடன்