* சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டனை உறுதிசெய்யப்பட்ட சசிகலா, 2017-ஆம் ஆண்டு சிறைசென்றார்.
* 4 ஆண்டு தண்டனைக் காலம் முடிந்து ஜனவரி-27 அன்று விடுதலையானாலும், சிறையில் இருக்கும்போதே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் பௌரிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஜனவரி-31 அன்று டிஸ்சார் ஆனார்.
* கொரோனா குணமான நிலையில் பெங்களூருவில் உள்ள ப்ரஸ்டீஜ் கோல்ட் பியர் விடுதியில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இளவரசியும் விடுதலை செய்யப்பட்ட நிலையில்... "பிப்ரவரி 8-ஆம் தேதி சசிகலா தமிழகம் வருவார்' என டி.டி.வி. தினகரன் தெரிவித்திருந்தார்.
* இந்நிலையில் சசிகலா, தான் தங்கியிருந்த விடுதியிலிருந்து, ராகுகாலமான 7:30 மணிக்கு முன்பே புறப்பட்டு ஜெ.வின் படத்துக்கு மாலை போட்டு வணங்கி அங்கிருந்து கிளம்பினார். வெளியே வந்து அங்கிருந்து தனது பயணத்தைத் தொடங்கினார்.
* தமிழக எல்லையான ஜூஜுவாடிக்கு 10:15-க்கு வருகை தந்த சசிகலாவின் காரிலிருந்த அ.தி.மு.க. கொடியைக் கழற்றச் சொன்னதால், டி.என். 05 பி.ஆர். 3333 என்ற எண் கொண்ட அ.தி.மு.க. உறுப்பினரின் காருக்கு மாறிய சசிகலா, அ.தி.மு.க. கொடியுடனே தமிழக எல்லைக்குள் நுழைந்தார்.
* 10:46-க்கு தமிழக எல்லையிலிருந்து சென்னை நோக்கி சசிகலா கிளம்பினார். சசிகலாவின் காரிலிருந்து அ.தி.மு.க. கொடியை அகற்றச் சொன்ன காவலர்களிடம் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டி, "வழக்கு கோர்ட்டில் இருப்பதால் கொடியை அகற்றவேண்டியதில்லை' என வாதம் செய்தார்.
* 11:20 மணியளவில் ஓசூர் வந்தடைந்த சசிகலாவை, டி.டி.வி. தினகரனின் சொந்த ஜல்லிக்கட்டு காளையைக் கொண்டுவந்து அதன் மூலம் வரவேற்பளித்தனர். அ.தி.மு.க. துண்டை தோளில் அணிந்தபடி அங் குள்ள முத்துமாரியம்மன் கோவிலில் வழிபட்டார்.
* ஓசூரை விட்டு 12 மணிக்குக் கிளம்பிய சசிகலா 12:20-க்கு மதனஹள்ளியை வந்தடைந்தார். அங்குள்ள காளிகோவிலில் 12:20-க்கு வழிபாடு மேற்கொண்டார்.
கெடுபிடிகள்
* சசிகலாவின் வருகை எந்த வகையிலும் முக்கியம் பெற்றுவிடக் கூடாது என நினைத்த தமிழக அரசு, "அ.தி.மு.க. கொடியைப் பயன்படுத்தக் கூடாது. பேனர், கட் அவுட் வைக்கக் கூடாது' என பல்வேறு நிபந்தனைகளை விதித்ததுடன் போலீஸ் கெடுபிடிகளை யும் தாராளமாக மேற்கொண்டது.
* பேனர், கட்-அவுட் விழுந்து உயிர்ப்பலி ஏற்பட்டபோதெல்லாம் மௌனமாக இருந்த அரசு, சசிகலா வின் வருகையையொட்டி அவரது ஆதரவாளர்கள் பேனர், கட்-அவுட் வைக்காமல் பார்த்துக்கொள்வதில் அக்கறை செலுத்தியது. மீறி வைக்கப் பட்ட இடங்களில் போலீஸே அவற்றை அகற்றுவதில் மும்முரம் காட்டியது.
* சசிகலாவின் வருகையை யொட்டி பெங்களூரிலும் நிறைய போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. தமிழ் போஸ்டர்களைப் பார்த்து ஆத்திரமடைந்த "கன்னட ரட்ச வேதிகே' அமைப்பினர் போஸ்டர்களைக் கிழித்து தங்கள் மொழி வெறியைக் காட்டியுள்ளனர்.v * காரில் கட்சிக் கொடியைப் பயன்படுத்தியதற்காக தமிழக போலீஸ் அவருக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் ராஜா செந்தூர்ப்பாண்டி, “""பெங்களூருவிலிருந்து தமிழக எல்லைவரை எந்தப் பிரச்சனையோ, போலீஸ் கெடுபிடியோ இல்லை. தமிழக எல்லையிலிருந்துதான் போலீஸ் கெடுபிடி உருவானது. கொடி பயன்பாடு குறித்த பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கிறது. சசிகலா அ.தி.மு.க.வில்தான் இருக்கிறார். எனவே கொடி பயன்படுத்தக்கூடாதென சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை. வழக்குகள் எல்லாம் முடியும்போது கட்சி எங்களிடம் வரும்''’என்றார்.
* சசிகலாவின் காரை 5 கார்கள் மட்டுமே பின்தொடர வேண்டுமெனக் கூறி உடன்வந்திருந்த கார்களை காவல்துறை தடுத்துநிறுத்த முயன்றதால் பரபரப்பு கிளம்பியது.
* சசிகலாவை வரவேற்க வந்த இரு கார்கள் கிருஷ்ணகிரியில் தீப்பற்றி எரிந்துள்ளன. இதுகுறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
* சசிகலாவுடன் அவரது நம்பிக்கைக்குரிய வழக்கறிஞர் ராஜா செந்தூர்ப்பாண்டியன் வர, ஒவ்வொரு ஊரையும் தாண் டும்போது அவ்வப்பகுதியில் போலீஸ் கெடுபிடி இருப்பதால் அதைச் சமாளிக்க 50-க்கும் மேலான வழக்கறிஞர்கள் ஒவ்வொரு ஊரிலும் பத்துப் பத்து பேராக பிரிந்து முன்கூட்டியே சென்று போலீசாரை எதிர்கொள்கின்றனர்.
* கே.பி. முனுசாமியின் ஆட்கள், சூளகிரியைத் தாண்டியுள்ள போலுப்பள்ளியில் சசிகலாவை வரவேற்றுக் கட்டப்பட்டிருந்த பேனர்களை எல்லாம் கிழித்தெறிந்ததாக, அ.ம.மு.க. தொண்டர் சுரேஷ்குமார் குற்றம்சாட்டினார்.
* தொண்டர்களின் எதிர்ப்புகளுக்கிடையே பாலுச் செட்டிசத்திரத்தில் பேனர், போஸ்டர்களை போலீஸ் அகற்றியது. காஞ்சிபுரம் மாவட்ட நுண்ணறிவுப் பிரிவு போலீசார் வரவேற்பை பிசுபிசுக்கச் செய்ய என்ன செய்யலாம் என முயற்சித்துவருகிறது. சென்டர்மீடியனில் வைக்கப்பட்டிருந்த அ.ம.மு.க. கொடிகளை போலீசார் அகற்றிவிட்டனர்.
* பூந்தமல்லியிலிருந்து ராமாபுரம் செல்லும் சாலை நெடுக சசிகலாவை வரவேற்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை தூய்மைப் பணியாளர்கள் மற்றும் போலீசார் முடிந்தவரை அகற்றினர்.
* சென்னை திரும்பும் சசிகலா ராமாபுரம் எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு வருகை தருவதையொட்டி, சென்னை நுண்ணறிவுப் பிரிவு போலீசார் சசிகலாவுக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். ஆனால் தினகரன் தரப்பினரோ, "ஆய்வு என்ற பெயரில் சசிகலாவை வரவேற்க வைத்திருந்த பேனர், போஸ்டர்களைக் கிழிக்கும் வேலைகளையே போலீசார் மேற்கொண்டனர்' என குற்றம்சாட்டுகின்றனர்.
வரவேற்புகள்
* டி.டி.வி. தினகரன், திவாகரன், விவேக், தீபக் ஆகியோர் தனித் தனி கார்களில் உடன் வருகின்றனர். அ.தி.மு.க. கட்சியினர் நிறைய பேரின் தலைகளைக் காணமுடிந்தது. கோவையைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் மக்கள் மன்றத் தலைவர் பாபு சசிகலாவை வரவேற்க வந்திருந்தார்.
* கோடம்பாக்கம் ஸ்ரீ சசிகலா தங்கியிருந்த ஹோட்டலுக்கே சென்று தனது இந்து மகா சபா அமைப்பின் ஆதரவைத் தெரிவித்ததுடன், சசிகலா குழுவினருடன் பெங்களூரு எல்லைவரை தனது வண்டியில் உடன் வந்திருக்கிறார்.
* ஜெ., சசிகலாவின் உருவப் படங்களுட னான ட்ரோன்கள் ஓசூர் பகுதியில் பறக்கவிடப்பட்டன.
முன்னால் 10 கார்களும், பின்னால் 30 கார்களும் தொடர வந்த சசிகலாவை வரவேற்க கிட்டத்தட்ட 10,000 பேருக்கு நெருக்கமாக திரளான பொதுமக்களும், அ.தி.மு.க.வினரும் தமிழக எல்லையில் திரண்டிருந்ததைக் காணமுடிந்தது. தமிழகத் தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தனியார் பேருந்துகளில் தொண்டர் கள் சசிகலாவை வரவேற்க வந்துகுவிந்திருந்தனர்.
* ஒவ்வொரு ஊரிலும் திரளான தொண்டர்கள் தட்டுப்படவேண்டுமென்பதால், தொண்டர்களுக்கு அளிக்கப்பட்ட உத்தரவின்படி முக்கிய ஊர்களில் எல்லாம் பத்திலிருந்து இருபது பஸ்களை நிறுத்திக் காத்திருக்கின்றனர். இதனால் ஒவ்வொரு ஊரிலும் உள்ளூர் மக்களோடு, பேருந்தில் வந்தவர்களுமாக கணிசமான கூட்டம் திரள்கிறது.
* அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் அவரது பி.ஏ.வான வி.எச். மூர்த்தியும் பயணத்துக்குத் தேவையான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்தனர்.
* சூளகிரிக்கு அருகில் நம்மைச் சந்தித்த, முதல்வரின் சொந்த ஊரான எடப்பாடியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் செந்தில்ராஜா, ""நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் சசிகலாவை வரவேற்க வந்திருப்பதாகக்'' கூறினார். “""தன்னை வளர்த்துவிட்டவங்களையே தெரியாதுனு சொல்றவங்களைப் பார்த்து வருத்த மாயிடுச்சு. சின்னம்மாவ வரவேற்க வந்தே ஆகணும்னு கிளம்பிவந்தேன்''’என்கிறார்.
* வேலூர் தாண்டி காஞ்சிபுரத்தின் நுழைவுப் பகுதியான தாமலில் இருந்து சசிகலாவை வரவேற்க, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் மொளச்சூர் பெருமாள், காஞ்சிபுரம் நகரச் செயலாளர் மனோகரன், ஒ.செ. தூரம் பச்சையப்பன் ஏற்பாட்டில் தாமல் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை எட்டு இடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* தமிழகத்துக்குள் சசிகலா நுழையும்போது, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாவையடுத்த ஊத்துக்காட்டிலுள்ள சசிகலாவுக்குச் சொந்தமான 200 ஏக்கர் இடங்களை அரசுடைமையாக்கும் முயற்சியில் மும்முரம் காட்டியது. இதனால் இந்த இடங்களில் அ.ம.மு.க., அ.தி.மு.க. தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
* திருவள்ளூர் மாவட்டம் சார்பாக, பூந்தமல்லி முன்னாள் எம்.எல்.ஏ. ஏழுமலையும், பொன்னேரி முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.ராஜாவும் சென்னை நுழைவாயிலான பூந்தமல்லியில் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பெரிதும் போராடியும் பேனர் வைக்க போலீசார் அனுமதி தரவில்லை. இதனால் அங்கு சற்று சலசலப்பு காணப்பட்டது.
மொத்தத்தில் சசிகலா வரவையொட்டி அவரது ஆதரவு வட்டத்தில் அமர்க்களத்தையும், அ.தி.மு.க. மேல்மட்டத்தில் அல்லோகலப்பட்டதையும் காணமுடிந்தது.