இருக்கின்ற கட்சியிலே இருக்கின்ற மேடையிலே இங்கிருந்து இன்னொரு கட்சிக்குத் தாவும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத்து வருகிறது பா.ஜ.க. அதற்கு சமீபத்திய உதாரணங்கள் காங்கிரசிலிருந்து பா.ஜ.க.வுக்கு ஜம்பான நடிகை குஷ்பு, தி.மு.க. விலிருந்து பா.ஜ.க.வுக்கு ஜம்பான வி.பி.துரை சாமி, கு.க.செல்வம், கே.பி.ராமலிங்கம் ஆகியோர்.
எதிரணியி லிருந்து இப்படி இழுப்பது வழக்கம்தான். தோழமைக் கட்சி என்றால் இப்படிப்பட்ட ஆட்டத்தை ஆடாமல் இருப்பது அரசியல் நாகரிகமாக இருந்து வந்தது. எங்களுக்காவது நாகரிகமாவது என்ற ரீதியில், பா.ஜ.க. தன் வேலையை ஆரம்பித்து விட்டது. தமிழ்நாட்டில் பா.ஜக. கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.மு.க.வின் பவர் ஃபுல் அமைப்பான இளைஞர்கள்-இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளராகவும் கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் வி.வி.செந்தில்நாதன். 2011 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அரவக் குறிச்சியில் தி.மு.க.வின் கே.சி.பழனிச்சாமியிடம் 4 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2016-ல் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு வென்றார், பழைய போக்கு வரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜெ.மறைவுக்குப் பின் டிடிவி அணிக்குப் போய் எம்.எல்.ஏ. பதவியை இழந்து, அதன் பின் தி.மு.க.வுக்கு ஜம்பானார். இதனால் 2019-ல் அரவக் குறிச்சிக்கு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக களம் இறங்கினார் செந்தில்பாலாஜி. ஏற்கனவே செ.பா.வுக்கும் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால், செந்தில்பாலாஜியின் பழைய பகையாளியான செந்தில்நாதனை தயார்படுத்தி இடைத்தேர்தலில் களம் இறக்கினார் தம்பிதுரை. ஆனால் விஜயபாஸ்கரின் உள்ளடியும் சேர மண்ணைக் கவ்வினார் செந்தில் நாதன். போதாக்குறைக்கு மாவட்ட கட்சிப் பதவியை யும் பறித்து தனது ஆதரவாளரான கமலக் கண்ணனுக்கு கொடுத்தார் போ.வ.அமைச்சர் விஜயபாஸ்கர்.
இரண்டு போக்குவரத்து அமைச்சர்களாலும் தனது அரசியல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மனம் நொந்த நிலையில் இருந்தார் செந்தில்நாதன். இதை மோப்பம் பிடித்த பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவர் ரிடையர்டு ஐ.ஏ.எஸ். அண்ணாமலை, கரெக்டான நேரத்தில் செந்தில்நாதனுக்கு ஸ்கெட்ச் போட்டார். பா.ஜ.க.வில் இணைந்தால் மாநில அளவில் கட்சிப் பொறுப்பு, கரூர் அல்லது குளித்தலையில் எம்.எல்.ஏ. சீட் என்ற தூண்டிலைப் போட்டதால் சிக்கினார் செந்தில் நாதன். கடந்த வாரம் தமிழக பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாள ரான சி.டி.ரவி முன்னிலையில் தேசிய நீரோட்டத்தில் சங்கமித்து விட்டார்.
போன மாதம் தான் அதே கரூர் மாவட்டம் குளித்தலை யைச் சேர்ந்த அ.தி. மு.க.வின் முக்கியப் பெண்மணியான மீனா வினோத்குமா ரை தங்கள் கட்சியில் இணைத்து மாநில மகளிர் அணித் தலைவி பதவியும் கொடுத்தது தமிழக பா.ஜ.க. இப்போது செந்தில்நாதனையும் இழுத்து அ.தி.மு.க. வுக்கு இரண்டாவது ஷாக் கொடுத்துள்ளது பா.ஜ.க.
-துரை.மகேஷ்