ஆட்சி முடியும் நேரத்தில் முடிந்த வரை ஹெவியாக கல்லா கட்டுகிறது எடப்பாடி அரசு. சென்னை நந்தனத்தில் உள்ள தமிழக அரசின் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் ஏராளமாக காலி இடங்கள் இருக்கிறது. அந்த இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பதும், வாடகைக்கு விடுவதும் வாரியத்தின் முக்கிய பிஸ்னெஸ். இது மட்டுமல்லாமல் 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளை சிதிலமடைந்ததாகச் சொல்லி அதனை இடித்து விட்டு புதிதாக பல அடுக்கு குடியிருப்புகளை கட்டி வருகிறது.
அந்தக் கணக்கில், நன்றாக உள்ள கட்டிடங்களை வைத்து கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க புதிய டெண்டர் விடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது வாரியம். அதே வகையில் வாரியத்தின் தலைமையகமான நந்தனம் அலுவலகத்தையும் அதன் எதிரே உள்ள பெரியார் மாளிகையையும் இடிப்பதுதான் தற்போது சர்ச்சையாகியிருக்கிறது.
இதனை கண்டித்து வாரியத்தின் நிர்வாக இயக்குநர் முருகேஷ் ஐ.ஏ.எஸ்.சுக்கு புகார் தெரிவித்திருக்கிறார் வீட்டுவசதி வாரிய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளரான திமுகவின் பூச்சி எஸ். முருகன். இதுகுறித்து அவரிடம் நாம் பேசியபோது, ""நந்தனத்திலுள்ள வாரியத்தின் தலைமையகத்தையும் அதற்கு எதிரே உள்ள பெரியார் மாளிகை யையும் இடித்து விட்டு புதிதாக பிரமாண்ட மான வர்த்தக கட்டிடங்களையும், அவைகளை இணைப்பதற்காக புதிய ஆகாய உயர் மட்ட மேம்பாலத்தையும் கட்டுவதற்கு 486 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்து திட்டமிட்டு அதற்கான டெண்டரை இம்மாதம் 13-ந்தேதி அறிவித்திருக்கிறது வாரியம்.
3 அடுக்குகளாக கட்டப்படும் இத்திட்டத்தில் முதல் டவரில் 2 அடித்தளமும் தரைத் தளமும் உள்ளடக்கிய 20 மாடிகள், இரண்டாவது டவரில் 2 அடித்தளமும் தரைத்தளமும் உள்ளடக்கிய 16 மாடிகள், மூன்றாம் டவரில் 2 அடித்தளமும் தரைத்தளமும் உள்ளடக்கிய 15 மாடிகள் என பிரமாண்டமாக கட்டுகிறார்கள். அண்ணாசாலையில் எதிர்எதிரே இருபுறமும் அமையவுள்ள இந்த பிரமாண்ட உயர் மட்ட 2 கட்டிடங்களையும் இணைக்கும் வகையில் ஆகாய தொங்கும் மேம்பாலமும் கட்டப் படுகிறது. இத்திட்டத்திற்கான டெண்டரை பிப்ரவரி 18-ந்தேதி இறுதி செய்ய நாள் குறித்துள்ளனர். அன்றைய தினம் காண்ட்ராக் டர்களை முடிவு செய்வதற்கான பணிகள் தற்போது மிக ரகசியமாக நடந்து வருகின்றன.
இன்னும் ஓரிரு மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மிக பெரிய அளவிலான 486 கோடி ரூபாய்க்கான டெண்டரை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? கட்டிடம் கட்டப்படும் இடத்திற்கு அருகே சுரங்க பாதையில் மெட்ரோ ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் கட்டிடம் கட்டுவது பாதுகாப்பானதாக இல்லை. அண்ணாசாலையின் இரு பகுதியையும் இணைக்க ஏற்கனவே ஒரு மேம்பாலம் இருக்கிறது. அதுவே, பாதுகாப்பானது இல்லை என்று சாலையை நடந்தே கடக்கின்றனர் பொதுமக்கள். அப்படியிருக்க, புதிதாக ஆகாய பாலம் கட்டுவது மிக மிக ஆபத்து.
கடல் மைல்களின் கணக்கின்படி நந்தனத்திற்கும் விமான நிலையத்திற்குமிடையே குறைவான தூரமே இருப்பதால், நந்தனத்தில் உயர் அடுக்கு வர்த்தக மையம் கட்டுவதும் ஆபத்தாக முடியும். பொதுவாக, உயர் மதிப்பிலான டெண்டரை அறிவிப்பதற்கு முன்பு பெறவேண்டிய, இந்திய விமான நிலைய ஆணையம், நெடுஞ்சாலைத்துறை, சுற்றுச்சூழல் துறை, மெட்ரோ ரயில் நிர்வாகம், தீயணைப்புத்துறை ஆகியவற்றின் ஒப்புதலைப் பெறவில்லை. வாரிய தலைமையகம் இடிக்கப் படவிருப்பதால் அதன் அலுவலகத்தை கோயம்பேடுக்கு மாற்றுகிறார்கள். அந்த கட்டிடத்தின் உள் அலங்காரத்திற்காக 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது,
கடைசி நேரத்தில் கல்லா கட்டும் முயற்சியாக இந்த டெண்டர் அறிவிக்கப்பட்டு, முதலமைச்சர் எடப்பாடியின் உறவினர்களுக்கு சொந்தமான காண்ட்ராக்ட் நிறுவனங்களுக்கு கொடுக்கவிருப்பதாக அறிகிறோம். அதாவது, சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக மத்திய அரசு ரெய்டு நடத்திய வி.எஸ். அண்ட் கோ (சத்தியமூர்த்தி), பி.எஸ்.டி., ஆர்.பி.பி. ஆகிய நிறுவனங்களில் ஏதேனும் ஒரு நிறுவனத்துக்கு டெண்டரை ஒதுக்கவிருக்கிறார்கள்.
ஏற்கனவே வாரியத்தில் கட்டப்பட்டுள்ள 2,800 வீடுகள் விற்பனையாகாமல் இருக்கிறது. இதனால் வாரியத்திற்கு 1,500 கோடி ரூபாய் இழப்பு. நிதி நெருக்கடியை காரணம் காட்டி ஓய்வூதியதாரர்களின் அறக்கட்டளைக்கு தரவேண்டிய 280 கோடி ரூபாயை வாரிய அதிகாரிகள் தர மறுக்கிறார்கள். இத்தகைய நிதிச்சிக்கல்கள் இடையே, ஊழல் நோக்கத்துடன் 486 கோடி ரூபாயில் சிறப்பு கட்டிடங்கள் கட்டுவது நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல், எங்களின் நடவடிக்கைகள் வேறுவகையில் இருக்கும்'' என்கிறார் மிக ஆவேசமாக!
தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகரப்புற துறையின் நேர்மையான அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, ""துறையின் அமைச்சராக இருப்பவர் துணை முதல்வர் ஓபிஎஸ். அவருக்கு தெரியாமலே பல்வேறு டெண்டர்களை முடிவு செய்கிறார் முதல்வர். அதற்கேற்ப முதல்வரின் செயலாளர்களான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் துறையின் செக்ரட்டரி கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.சும் இயங்குகிறார்கள். இவர்களுக்கு தலையாட்டும் பொம்மையாக வாரியத்தின் எம்.டி. முருகேஷ் ஐ.ஏ.எஸ். செயல்படுகிறார். துறையிலும் வாரியத்திலும் அறிவிக்கப்படும் டெண்டர் மதிப்பில் 25 சதவீதம் ஊழல் நடக்கிறது. இதில் 15 சதவீதம் மேலிடத்துக்கும், 10 சதவீதம் கீழ்நிலை அலுவலர்கள் துவங்கி உயரதிகாரிகள் வரை அவரவர்களின் தகுதிக்கேற்ப பங்கு பிரிக்கப்படுகிறது. ஆட்சியின் கடைசி காலக்கட்டத்தில் இருப்பதால், ஆட்சியாளர்களுக்கு இணையாக கொள்ளையடிக்க அதிகாரிகளும் வேகமாக இயங்குகிறார்கள்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 486 கோடி ரூபாய் டெண்டரில் சத்தியமூர்த்தி அண்ட் கோ, தென்னரசுவின் பி.எஸ்.டி நிறுவனம், ஆர்.பி.பி. நிறுவனம் ஆகிய 3 காண்ட்ராக்டர்களில், ஆகாய பாலம் கட்டும் காண்ட்ராக்ட்டை தென்னரசுவின் பி.எஸ்.டி. நிறுவனத்துக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளனர். அதேபோல, நந்தனம் வாரிய அலுவலகத்தையும், பெரியார் மாளிகையில் கட்டப்படும் வர்த்தக மையத்தையும் கட்டும் காண்ட்ராக்ட்டை வேண்டிய நிறுவனங்களுக்கு தருவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
மேற்கண்ட காண்ட்ராக்ட் நிறுவனங்கள் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பழனியப்பனுக்கு (தற்போது டி.டி.வி. தினகரனிடம் இருக்கிறார்) வலதுகரமாக இருந்து உயர்கல்வித் துறையின் அனைத்து டெண்டர் களையும் எடுத்து துறையை ஆட்டிப்படைத்த பி.எஸ்.டி. நிறுவனத்தின் உரிமையாளர் தென்னரசு, பழனியப்பனுக்கு பிறகு எடப்பாடிக்கு மிக நெருக்கமாகி விட்டார்.
விழுப்புரம்-கடலூர் இடையே தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே 25 கோடி ரூபாய் மதிப்பிலான தடுப்பணை பாலம் கட்டும் காண்ட்ராக்ட் முதலமைச்சரின் உத்தரவின்படி பி.எஸ்.டி. நிறுவனத்துக்கு கொடுத்தது பொதுப்பணித்துறை. அந்தத் தடுப்பணை தற்போதைய மழையில் இடிந்து விழுந்தது. தி.மு.க நடத்திய போராட்டத்தையடுத்து, அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், காண்ட்ராக்டர் தென்னரசு மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அப்படிப்பட்ட அதே பி.எஸ்.டி. நிறுவனத்தின் தென்னரசுவுக்கே, ஆகாய மேம்பாலம் கட்டும் டெண்டரை கொடுக்க விருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் நடமாட்டம் இருக்கும் அண்ணாசாலையின் குறுக்கே கட்டப்படும் ஆகாய மேம்பாலம் இடிந்து விழுந்தால், மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு?
அதேபோல நாமக்கல்லில் புதிய மெடிக்கல் கல்லூரி கட்டிடம் கட்டும் காண்ட்ராக்ட் சத்தியமூர்த்தி நிறுவனத்துக்கு தரப்பட்டது. கட்டிடம் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் போதே சமீபத்தில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. அப்படிப்பட்ட அந்த சத்தியமூர்த்தி நிறுவனத் திடம்தான் தற்போதைய 486 கோடி ரூபாய் டெண்டரில் பெரும் பகுதியை ஒதுக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. பிப்ரவரி மாதத்துக்குள் அனைத்து டெண்டர்களும் இறுதி செய்து அதற்கான கமிஷன் தொகையை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் எடுத்து விடுவதற்கேற்ப துரிதமாக வேலை பார்க்கிறார்கள் உயரதிகாரிகள்''’என்று ரகசியமாக நடக்கும் ஊழல்களை விவரிக்கின்றனர்.
படங்கள்: ஸ்டாலின்