அரசு திட்டங்களை துவக்கி வைக்கவும் அ.தி.மு.க.வுடன் அரசியல் பேசவும் சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமீத்சாவை சந்திக்க தமிழக டி.ஜி.பி. திரிபாதி, முன்னாள் கவர்னர் சதாசிவம், தொழிலதிபர் சேகர் ரெட்டி , ஹோட்டல் அதிபர் முரளி , ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் என பலரும் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருந்தனர். ஆனால், யாருக்கும் நேரம் ஒதுக்கப்படவில்லை. ஆனால், தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகனை வரவழைத்துப் பேசியிருக்கிறார் அமீத்சா.
சமீபத்தில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, நீதிபதி கலையரசன் தலைமையில் தனிநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்ட விவகாரம் அமீத்சா- அன்பழகன் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டுள் ளது. சூரப்பாவுக்கு எதிராக கமிசன் அமைக்க அடிப்படையாக இருந்த புகார்களின் நம்பகத் தன்மையை ஆராயும்படி மத்திய உளவுத்துறைக்கு அமீத்சா உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை விசாரித்துள்ள உளவுத்துறை, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் தெரிவித்தவர்கள் சிலரின் முகவரி போலி என தெரிய வருவதாக அமீத்ஷா வுக்கு ரிப்போர்ட் தரப்பட்டுள்ளது.
இதனடிப்படையிலேயே அமைச்சர் அன்பழகனிடம் அமீத்ஷா விசாரிக்க, அன்பழகன் தெளிவாக விளக்கமளிக்கத்திருந்தாலும், ""தனி நபர் ஆணையம் மூலம் விசாரணை என்பதே தவறா னது. தனி நபர் மூலம் நீங்கள் விரும்பும் பரிந் துரைகளைப் பெற திட்டமிடுகிறீர்கள்'' என கோபம் காட்டியதுடன், ""ஆணையத்துக்கு உறுப்பினர்களை நியமியுங்கள்'' எனவும் கட்டளையிட்டிருக்கிறார் அமீத்ஷா.
இதனையடுத்து, சூரப்பாவுக்கு எதிரான விசாரணை கமிஷனுக்கு, உயர்கல்வித்துறை துணைச்செய லாளர் சங்கீதா, தமிழக விஜிலென்ஸ் எஸ்.பி.பொன்னி, உயர்நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன், வழக்கறிஞர் சாய்பிரசாத், ஓய்வு பெற்ற நிதித்துறை கூடுதல் செயலர் முத்து ஆகியோர் உறுப் பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். "சூரப்பாவுக்கு எதிரான கமிஷன் மீது அமீத்சா ஆதிக்கம் செலுத்தியிருப்பதால், ஆணையத்தின் விசாரணை நீர்த்துப் போக வைக்கப்படும்' என்கிறார்கள் கல்வியாளர்கள்.
நம்மிடம் பேசிய கல்வியாளர்கள், ""சூரப்பா வின் பதவி காலம் 2021, ஏப்ரலில் முடிவடைகிறது. ஆனால், சூரப்பாவையே மீண்டும் துணைவேந்தராக நியமிக்க மிக ரகசியமாக காய்களை நகர்த்தியுள்ளது ஆர்.எஸ்.எஸ். அந்த வகையில், புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கு பிப்ரவரியில் அமைக்கப்படவிருக்கும் தேடுதல் குழுவிடம் (சர்ச் கமிட்டி) மீண்டும் விண்ணப்பிக்க சூரப்பா தயார் படுத்தப்பட்டிருக்கிறார். 70 வயதை கடந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. ஆனால், அடுத்த வருடம் டிசம்பரில்தான் அவருக்கு 70 வயதாகிறது என்பதால் விண்ணப்பிக்கத் தடையில்லை'' என்கிறார்கள் விதிமுறைகளை சுட்டிக்காட்டி.
தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகள் ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் உள்ளவர்களைக் கொண்டே நிரப்பப்படுகிறது. அதற்கேற்ப. பேராசிரியர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கவாதிகளாக உருமாற்றம் பெறுகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் விவரித்த சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ""சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக கடந்த ஆகஸ்டில் நியமிக்கப்பட்டார் பேராசிரியர் எஸ்.கௌரி. இவரது நியமனத்தின் பின்னணியில் இருந்ததும் ஆர்.எஸ்.எஸ்.தான். அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் பிரிவின் துறைத் தலைவராகவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் மல்டி மீடியா கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்த கௌரி, பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூ.ஜி.சி.) வைஸ் சேர்மன் பதவிக்கு கடந்த 2017-மார்ச்சில் விண்ணப்பிக்கிறார். டெல்லியிலுள்ள முக்கிய வி.ஐ.பி.க்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி களின் உதவியுடன் சர்ச் கமிட்டி இறுதி செய்த பேனலிலும் அவரது பெயர் இடம் பெற , 2017, ஏப்ரல் 14-ல் நடந்த நேர்காணலிலும் கலந்து கொள்கிறார் கௌரி.
"இந்த கௌரி, மத்தியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது அவர்களது ஆதரவாளராக இருந்திருக்கிறார் என உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் அந்த பேனலையே ரத்து செய்தது மோடி அரசு. அதன்பிறகு புதிதாக கால்ஃபர் செய்து 2018-ல் யூ.ஜி.சி.யின் வைஸ் சேர்மனாக வேறு ஒருவரை நியமித்தார்கள். இதனையறிந்த கௌரி, தன்னை ஆர்.எஸ்.எஸ்.வாதியாக முன்னிலைப்படுத் திக் கொள்ள பல முயற்சிகளை எடுத்தார். அதன்படி, திருச்சி பா.ஜ.க. பிரமுகரான செல்வதுரை மூலமாக பாஜக ஆளாகவும் காட்டிக் கொள்கிறார். இதற்கிடையே, தமிழக துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.சுக்கும், பா.ஜ.க.வின் துணைத்தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் கௌரி உறவினர் என்பதால் அவர்கள் மூலமாகவும் ஆர்.எஸ்.எஸ்.வாதியாக காட்டிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில்தான், மல்டிமீடியா கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் அகில இந்திய தலைவராக தற்போதைய பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் சகோதரர் நியமிக் கப்படுகிறார். இந்த நிறுவனத் தின் இயக்குநராக கௌரி இருந்ததால் டெல் லிக்கு அடிக்கடி சென்று ஜே.பி. நட்டாவின் சகோதரரை சந்தித்து விவாதிக்கும் வாய்ப்புகளை பெற்றார். .இதன் மூலம் அவர்களிடையே நல்ல நட்பு உருவாகிறது. இந்த நிலையில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவிக்கு இறுதி செய்யப்பட்ட 3 பேர் கொண்ட பேனலில் கௌரியின் பெயரும் இணைக்கப்பட்டது. கடைசி நேரத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் சிபாரிசில் அவருக்கு நெருக்கமான ராஜேந்திரனுக்கு யோகம் அடிக்க, கௌரிக்கு தோல்வி ஏற்பட்டது. விடாமுயற்சியுடன் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழகம், திருச்சி பாரதிதாசன், கோவை பாரதியார் பல்கலைக்கழங்களின் து.வே.பதவிக்கு விண்ணப்பித்தும் பலனில்லை.
இந்த நிலையில், 2018 மே மாதம் பணியிலிருந்து கௌரி ஓய்வு பெற, ஜே.பி.நட்டா சகோதரரின் சிபாரிசில் மல்டி மீடியா கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக 1 வருடம் நீட்டிப்பு அவருக்கு கிடைக்கிறது. 2019 தேர்தலில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி தொடர, மீண்டும் 1 வருடம் நீட்டிப்பு கௌரிக்கு கிடைக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் பதவி காலியாக, ஜே.பி. நட்டாவின் சகோதரர் உதவியில் துணை வேந்தராகிறார் கௌரி. "நான்தான் கௌரியை துணைவேந்தராக்கினேன்' என சொல்லிக் கொள்கிறார் பா.ஜ.க. செல்வதுரை. ஆக, சூரப்பா முதல் கௌரி வரை ஆர்.எஸ்.எஸ். பின்னணியே கோலோச்சுகிறது'' என்று துணைவேந்தர் நியமனங்களில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கரங்கள் பிணைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள்.
-இரா.இளையசெல்வன்