சென்னை பெருவெள்ளத்தின்போது மக்களுக்கு உதவ முன்வந்த களப்பணி யாளர்களின் கூட்டமைப்பு, 2016 சட்டமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகளல்லாத ஊழலற்ற ஆட்சி அமைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மக்கள்பாதை இயக்கமாக உருவெடுத்தது. அதன் வழிகாட்டியாக ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சகாயம் ஐ.ஏ.எஸ் இணைந்ததுடன், இயக்கத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.ஏ.எஸ் அதிகாரி நாகல்சாமியை அறிவித்தார்.
இளைஞர்களின் புதிய பாதையாக மக்கள் பாதை பேசப்பட்டது. இந்த நிலையில் அந்த இயக்கத்திலே பணமுறைகேட்டில் சிலர் ஈடுபட்டதாக சகாயமே பேட்டியளித்ததுடன், தலைவர் நாகல்சாமி கோஷ்டி, சகாயம் கோஷ்டியென மாறிமாறி சரமாரியாக குற்றச்சாட்டுகளை ஒருவர் மீது ஒருவர் முன்வைக்கத் தொடங்கியிருப்பது மக்கள் பாதை இயக்கத்தின் மீது எதிர்பார்ப்பு வைத்திருந்தவர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.
பணமோசடி குற்றம்சாட்டப்பட்ட களப்பணியாளர்களில் ஒருவரான மக்கள் பாதையை ஒருங்கிணைத்த உமர்முக்தாரிடம் பேசினோம். ""ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஆரம்பித்து, இன்று நீட் வரை தொடர்ந்து போராடி வருகிறோம். சகாயம் அய்யாவை ரோல்மாடலாக நினைத்து பலரும் இயக்கத்தில் சேர்ந்தனர். சமீபகாலமாக மக்கள் பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, இயக்கம்சார்ந்த பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, சகாயம் அய்யாவை தொடர்புகொள்ள முடியவில்லை.
தலைமை அலுவலகப் பொறுப்பாளரான பாட்ஷா,அவரை நெருங்கவிடாமல் தொடர்ந்து தடுத்துவருகிறார், சமீபத்தில் நீட்டுக்கு எதிராக அறப்போர் இயக்கத்திலிருந்து, மக்கள் பாதைக்கு வந்த சந்திரமோகன், தன் உடல்நிலை மோசமான நிலையிலும், தமிழக மாணவர்களுக்கு நீதி கிடைக்க, நீட் தேர்வு ரத்து செய்யும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். ஆனால் சகாயம் அவர்களோ உண்ணாவிரத போராட்டத்தை கைவிடச்சொல்ல, சந்திரமோகன் உள்பட அனைவருக்கும் மிகுந்த வருத்தம்.
வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்குமரன், கொரோனா காலத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாவை எதிர்த்து, ஜூம் மீட்டிங் அறிவித்தார். அதில் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்த ரகுபதி எப்படி கலந்து கொள்ளலாம் என்று மீட்டிங்கை ஏற்பாடு செய்த அருண் குமரனை, தலைமை அலுவலகப் பொறுப்பாளர் பாட்ஷா, தலைவர் நாகல்சாமி ஒப்புதலில்லாமல் நீக்கினார். இதனால் கோபமான இயக்கத் தலைவர் நாகல்சாமி நான் தலைமைப் பொறுப்பில் உள்ளபோது எப்படி எனக்குத் தெரியாமல் அருண்குமரனை நீக்கினீர்கள் என்று இயக்கத்தின் வாட்சாப்பில் பதிவிட்டார். இதற்கு பாட்ஷா, இயக்கத் தலைவரான நாகல்சாமி யை, சமூக வலைத்தளத்தில் ஒருமையில் விமர்சனம் செய்தது அனைவரையும் கோபமடைய வைத்தது.
அலுவலகப் பொறுப்பிலிருந்து பாட்ஷாவை நீக்க 25 மாவட்ட நிர்வாகிகளும் சகாயத்தை சந்திக்க சென்னையில் இரண்டுநாள் காத்துக்கிடந்தனர். ஆனால் அவர் யாரையும் சந்திக்கவில்லை என்பதால், அங்கு காத்துக்கிடந்த நிர்வாகிகளுக்கு வெறுப்பு ஏற்படவே, மக்கள் பாதை தற்போது நாகல்சாமி அணி சகாயம் அணி என இரண்டாகப் பிரிந்துள்ளது.
அரசியல் குறித்த முடிவை அறிவிக்காமல் இருக்கும் ரஜினியை பாட்ஷா இரண்டுமுறை சந்தித்துப் பேசியுள்ளார். எந்த கட்சியுடனும் சேராமல், ஊழலற்ற அரசு அமையவேண்டும் என்ற நோக்கத்துடன் சென்று கொண்டிருக்கும் மக்கள் பாதையை, பாதை மாற்றி அழைத்துச்செல்ல நினைக்கும் பாட்ஷா வின் நிலைப்பாடு இயக்கத்தில் பிளவு ஏற்படுத்தியுள்ளது.
சகாயம் அய்யா, அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு கேட்டுள்ளதாக பாட்ஷா மூலம் நமக்குத் தெரிய வந்துள்ளது, ஆனால் பாட்ஷாவோ சமீபத்தில் இயக்கத்தின் முப்பெருவிழா நடைபெற்ற ரமணியம் கல்விக் குழுமம் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்களான கீதாஜெகநாதன் ஆகியோருடன் தொடர்பிலிருப்பதும், ரஜினியுடனான சந்திப்பும், இதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ், பாஜக தலையீடு இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இதையெல்லாம் கேட்டால், ""நான் கடந்த 2017-ல் ஏதோ பணமோசடி செய்ததாக அவதூறு கூறுகிறார்கள், அதுவும் நான் மிகவும் மதிக்கும் சகாயம் அவர்களே இதைக் கூறியிருப் பது மிகுந்த வருத்தமளிக்கிறது. பணமோசடி செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக் கட்டுமே. பணம் கொடுத்தவரே நேரில் வந்து விளக்கம் கொடுத்துள்ளார். இயக்கத்திற்காக இரவு பகல் எந்தப் பலனும் எதிர்பார்க்காமல் உழைத்தவனுக்கு கிடைத்தது பணமோசடி பட்டம்'' என மனம் கசந்து பேசினார்.
மக்கள் பாதை இயக்கத்தின் நிர்வாகி யான வேலூர் அருண்குமரன், ""சகாயம் அவர் களின் மனைவியின் உறவினரான கஷ்மீர் சகாய ராஜ், சகாயத்தை சந்திக்க விரும்பும் அமைப்பின ரிடம் பணம் கேட்ட உரையாடல் வாட்ஸ் அப்பில் ஆடியோவாக வெளியானது, அதற்கும் நடவடிக்கையில்லை. இயக்கத்தின் பத்திரிகையான நேர்மையின் பாதை இதழை கவனித்து வரும் அருணாவை கன்னத்தில் அறைந்த விவகாரத்திலும் நடவடிக்கை எதுவுமில்லை'' என புகார்களை அடுக்கியபடியே போனார்.
இயக்கத் தலைவரான நாகல்சாமி, ""இயக் கத்தின் மாண்பு கருதி தற்போது பேசவிரும்ப வில்லை. விரைவிலே ஊடகங்களுடன் தொடர்பு கொள்வோம்'' என்றார். மேலும் இதுதொடர் பாக தலைமை அலுவலக நிர்வாகியான பாட்ஷாவிடம் பேசினோம். ""ரஜினியை சந்திக்க வில்லை. அவரையும் சகாயம் அவர்களையும் அரசியல் கட்சியில் இழுத்து ஆதாயம் தேடும் குழுக்களால்தான் பிரச்சனை. அவர்களே பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள்'' என்றார்.
சகாயத்தை பலமுறை தொடர்பு கொண்டும், அவருடன் பேச இயலவில்லை.
-அரவிந்த்