(31) மாடி மேல அழகான லேடி!
"நிழல்கள்'’ பட தோல்வியால் எங்க டைரக்டர் பாரதி ராஜாவின் டீமையே சினிமா உலகம் புறக்கணிப்பது போல நடந்துகொண்டது. ‘இதுநாள்வரை புத்திசாலி என சினிமா உலகத்தால் கொண்டாடப்பட்ட ஒருவரை, அவரின் ஒரே ஒரு படத்தின் தோல்வி, ‘முட்டாள்’ ஆக்கிவிடுமா? இது மிகவும் ஆபத்தான போக்கு.
இந்த சிக்கலை சவாலோடு எதிர்க்கொள்ளும் பொருட்டு, அடுத்த படத்தை பெரும் வெற்றிப் படமாக்கும் தீவிரத்தோடு களத்தில் இறங்கினோம். இளையராஜாவின் "பாவலர் கிரி யேஷன்ஸ்' தயாரிப்பில், பட வேலைகள் தொடங்கியது.
திரைக்கதையை உருவாக்கி, படப்பிடிப்பிற்கு போவதற்கு முன்... அதுவரை சினிமாவில் யாரும் செய்திருக்காத ஐடியா ஒன்று எனக்குத் தோன்றியது. இதை இன்றைய சினிமாக்காரர் களும் கவனித்தால் அவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
டைரக்டரிடம் நான் அந்த யோசனையைச் சொன்னேன். அது செலவு பிடிக்கிற யோசனை என்றாலும் கூட டைரக்டர் அதை ஏற்றுக்கொண்டார்.
சென்னை மைலாப்பூரில் ஏவி.எம்.ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தின் அருகே அப்போது மேனா தியேட்டர் இருந்தது. பிரபலங்கள் படம் பார்ப்பதற்காக ப்ரிவியூ மற்றும் பிரீமியர் ஷோ இங்குதான் போடப்படும்.
இங்கே பாரதிராஜாவின் படைப்புகளையெல்லாம் தொடர்ந்து ஒளிபரப்புவது, அங்கு திரையிடும்போது... எந்தப் படம் போடுகிறோமோ... அதில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அழைப்பது என முடிவு செய்து, அதன்படி ‘"16 வயதினிலே'’ முதல், ‘"நிழல்கள்'’ வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படமாக திரையிட்டோம்.
கமல், ராதிகா என படத்தில் நடித்த பிரபலங்கள் படம் பார்க்க வந்தார்கள். ஒவ்வொரு படத்தையும் மிகவும் ரசித்துப் பார்த்தார்கள். ‘"நிழல்கள்'’ படம் போடப்பட்டபோது எங்கள் முகம் இருண்டு போனது. பார்வையாளர்களின் முகத்திலும் திருப்தியில்லை.
பெரும்பாலும் பாரதிராஜா எடுத்த கிராமியப் படங்களில் வாழ்க்கைச் சம்பவங்கள், சம்பிரதாயங்கள் காட்சிப்படுத்தப்பட் டிருந்தது. அதனால் அந்தப் படங்கள் ரசிக்கும்படி இருந்தது. ஆனால் ‘"நிழல்கள்'’ படம் முழுக்க நகர்ப்புற வாழ்க்கை என்ப தால் கதையை நகர்த்துவதில் சிரமம் இருந்தது படம் பார்க்கும் போதே தெரிந்தது.
ஆக... கிராமியப் படங்களை, மண் வாசனைப் படங்களை எடுக்கும்போது தான் டைரக்டரின் இயக்கத்தில் உற்சாகம் கொப்பளிக்கிறது. ("சிகப்பு ரோஜாக்கள்' த்ரில்லர் பட லிஸ்ட்டில் சேர்ந்துவிடும்)
அதனால் மீண்டும் கேமராவைத் தூக்கிக்கொண்டு டைரக்டர் கிராமத்துப் பக்கம் போவதே சிறப்பு என்கிற முடிவுக்கு ஏக மனதாக வந்தோம். டைரக்டரும் முழுமனதாக அந்த முடிவுக்கு வந்தார்.
இளையராஜாவின் சின்ன அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பு பணிகளை கவனித்துக் கொண்டார்.
ஹோட்டலில் ரூம் போட்டு உட்கார்ந்திருக்கிறோம். கதை எழுதுவதற்காக வாங்கிய கட்டுக் கட்டான வெள்ளைப் பேப்பர்கள் மை கறை படியாமல் அப்படியே சுத்த வெள்ளையாக இருக்கிறது. தினமும் அதைப் பார்த்துவிட்டு, “"என்னப்பா இன்னும் கதை ரெடி பண்ணலையா? பிள்ளையார் சுழி கூட போடாம வச்சிருக்கீங்களேப்பா'’என நச்சரித்துக்கொண்டிருந்தார் பாஸ்கர்.
அவர் கவலையும் நியாயம்தானே!
ஆனால் எத்தனை நாளைக்கு ‘இதோ, அதோ’ எனச் சொல்லிக் கொண்டிருக்க முடியும்? தற்காலிகமாக பாஸ்கரின் வாயை அடைக்க ஒரு வேலை செய்தேன்.
முதல்நாள் இரவே மணிவண்ணனிடம் சொல்லி வைத்தபடி... மறுநாள் நான் கதையைச் சொல்லச் சொல்ல மணிவண்ணன் எழுதினார்.
பாஸ்கரிடம் கதை எழுதிய பேப்பர்களைக் காட்டி... "அண்ணே... ஒரு சூப்பர் கதை மாட்டீருக்கு. கதையைக் கேளுங்க. ‘நன்றாக இருந்த ஒருவன், எதிர்பாராத விதமாக ஓர் விபத்தால் சித்தபிரமை பிடித்தவனாகி, தன் பழைய நினைவுகளை மறந்து போகிறான். அவனை பழையபடி மீட்டெடுக்க வைத்தியம் செய்ய ஒருத்தி வருகிறாள். அவனுக்கும், அவளுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. இந்த காதலை அந்தஸ்து பிரிக்க நினைக்கிறது. இறுதியில் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா?’ அப்படிங்கிறதுதான் கதை. எப்படிண்ணே இருக்கு?''
"யேய்... பாலா... நல்லா இருக்கு கதை. இதையே எடுத்துறலாம்? அதான் கதை ரெடியாயிருச்சே... திரைக்கதை -வசனத்தை எழு துங்க, ஷூட்டிங் கிளம் புங்க''’எனச் சொன் னார் பாஸ்கர்.
நாங்களும் பேப்பரை எடுத்து தொடர்ந்து எழுத ஆரம்பித்தோம்.
பாஸ்கர் கிளம்பியதும், எழுதுவதை நிறுத்தினோம்.
இரவு ஒன்பது மணிக்கு டைரக்டர் வந்தார்.
எல்லோரும் மூஞ்சியை கழுவிவிட்டு ஃப்ரெஷ்ஷாக உட்கார்ந்தோம்.
"பாஸ்கரண்ணன் வந்ததையும், அவரிடம் ஒரு கதையைச் சொன்னதையும், ‘பாரதின்னா பாரதிதான். சூப்பர் கதையைப் பிடிச்சிட்டானே'’ என பாஸ்கர் சொன்னதையும் டைரக்ட ரிடம் நான் சொல்ல... டைரக்டர் உட்பட எல்லாருமே விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
ஏன்னா...
பாஸ்கரிடம் நான் சொன்ன கதையை நீங்களும் எங்கேயோ கேட்ட மாதிரி.... எந்தப் படத்திலோ பார்த்த மாதிரி இருக்குமே.
ஆமாம்...
பாஸ்கரண்ணனின் வாயை அடைக்க நான் சொன்ன கதை... சிவாஜி சாரும், ஜெயலலிதா மேடமும் நடித்த ‘"எங்கிருந்தோ வந்தாள்'’ படத்தின் கதையாகும்.
தீவிரமாக கதை யோசித்துக்கொண்டிருக்கையில் மணிவண்ணன் ஒரு கதையைச் சொல்வதாகச் சொன்னார். ‘"நிழல்கள்ல கவிழ்த்ததே நீதானப்பா'’என்கிற மாதிரி எல்லோ ரும் பார்க்க... “"கதையைச் சொல்லுய்யா''’என்றார் டைரக்டர்.
அசத்தலான லவ் ஸ்டோரியைச் சொன்னார் மணிவண்ணன்.
இந்தப் படம் வெளியான பிறகு... பாரதிராஜாவின் அலை ஓயவே இல்லை....
"இளமை பொங்கும் இந்தக் கதைக்கு கதாநாயகியாக யாரை அறிமுகப்படுத்துவது?'’என டைரக்டர் யோசிக்க...
"சார் ஒரு இளம் பெண்ணைப் பார்த்தேன்... மாநிறமா, முக லட்சணமா இருக்கு. நடிகை அம்பிகாவோட தங்கச்சினு சொன்னாங்க.''”
"எங்க போய் பார்க்கிறது. அதுக்கெல்லாம் அவகாசம் இல்லையே பாலா''”
"சார் இங்க ரஞ்சித் ஹோட்டல் மாடியில மூணாவது ஃபுளோர்லதான் தங்கியிருக்காங்க. ஏதோ கல்யாண விசேஷத்துக்காக உறவினர்களோட வந்திருக்காங்க. அவங்க அம்மா சரசம்மாவும் ரூம்லதான் இருக்காங்க.''”
"உடனே போய் பேசுய்யா''’என்றார் டைரக்டர்.
நான் மூன்றாம் மாடிக்குச் சென்று, அவர்கள் தங்கியிருந்த அறைக்குப் போனேன். சரசம்மாவைப் பார்த்து, “"நான் பாரதிராஜா சாரோட அஸோஸியேட்''’என்றேன்.
"பாரதிராஜா'’என்றதுமே... பிரமிப்பு விலகாமல் என்னைப் பார்த்தார் சரசம்மா.
உதயசந்திரிகாவும், முரளியும் நடிக்க வந்த கதை.... அடுத்த அத்தியாயத்தில்...
(பறவை விரிக்கும் சிறகை)