""ஹலோ தலைவரே, தமிழகம் வந்த மோடி, சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், "வணக்கம் வணக்கம் சென்னை வணக்கம்...'ன்னு தமிழ்ல பேசியதோட, சென்னை அறிவும் ஆற்றலும் நிறைந்த நகரம்னு ஐஸ்கட்டி ஒழுக ஒழுக பேசியிருக்கார்.''

""ஆமாம்பா, தமிழகத்துக்கு ஆதரவான வாயும் தமிழகத்துக்கு எதிரான செயலும்தானே மத்திய பா.ஜ.க அரசின் அடையாளம். சென்னை வந்த அவர், தமிழக அமைச்சர் ஒருவரைத் தொட்டு உலுக்கி ஆசிர்வாதம் பண்ணியிருக்காரே?''

thangamani

""உண்மைதாங்க தலைவரே, மோடி ஒருத்தரை ஆசிர்வாதம் பண்ணினால், அவர் கதி எப்படி இருக்கும்னு அரசியல் வட்டாரத்தில் பெரிய செண்டி மெண்ட்டே உண்டு. இதுக்கு உதாரணமா சில சம்பவங்களையும் சுட்டிக்காட்ட றாங்க. ஜெ.’இறப்புக்கு வந்த மோடி, ஜெ மரணத்தின்போது அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி, சசி கலாவின் தலையை இடது கையால் தொட்டு ஆசிர்வாதம் பண்ணினார். அடுத்த சில நாட்களிலேயே அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போய்விட்டார். அதே போல் ஒருமுறை அமைச்சர் விஜய பாஸ்கரைத் தன் வலது கையால் தொட்டு மோடி ஆசிர்வாதம் பண்ணினார். அடுத்த சில நாட்களிலேயே குட்கா வழக்கில் அவர் சிக்கி ரெய்டுக்கும் ஆளானார். அந்த வரிசையில் இப்ப அமைச்சர் தங்கமணியின் இரண்டு தோள்களையும் பற்றி உலுக்கியபடியே, மிஸ்டர் தங்கமணின்னு மர்மப் புன்னகையை உதிர்த்திருக்கிறார் மோடி. மோடியின் இரண்டு கைகளும் பட்ட தங்கமணிக்கு எப்ப, என்ன நடக்குமோன்னு சக அமைச்சர்களே கமெண்ட் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.''

Advertisment

""முதல்வரின் நம்பிக்கைக்குரிய கொங்கு மண்டலத்தின் வெயிட்டான அமைச்சராச்சே தங்கமணி?''

""ஆமாங்க தலைவரே, அமைச்சர் தங்கமணி வசமுள்ள மின்துறையில் ஏகப்பட்ட ஊழல்கள் நடக் கறதா, ஆதாரப்பூர்வமான புகார்கள் மோடியின் கைக்கு ஏகத்துக்கும் போயிருக்கு. அதையெல்லாம் பட்டியலிட்டு, மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ்கோயலையே சென்னைக்கு அனுப்பி, தங்கமணியிடம் சீக்ரெட் என்கொயரி பண்ணும்படி சொல்லியிருக்கிறார் மோடி. ஆனால் தங்கமணியோ, பியூஸ்கோயல் சென்னைக்கு வந்தபோது, தனக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாகச் சொல்லி, சந்திப்பைத் தவிர்த்துவிட்டாராம். கொரோனா ட்ரீட்மெண்ட் முடிந்தபிறகும் மத்திய அமைச்சரை சந்திக்கலை யாம். இதுதான் மோடியைக் கோபப்படுத்தியிருக்கு. இந்த நிலையில்தான் மோடியால் தங்கமணி, மோடியின் டிரேட் மார்க் ஆசிர்வாதத்தைப் பெற்றிருக்கிறார்.''

""மோடியின் சென்னை விசிட்டில், தேவேந்திர குலவேளாளர் சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்றி, ஆதரவைப் பெற்றிருக்கிறாரே?''

Advertisment

""தமிழகத்தில் பட்டியலினத்தில் வைக்கப்பட்டிருந்த தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அண்மைக் காலமாக வலுத்து வந்த நிலையில், இதை ஏற்றுக்கொண்டு மத்திய அரசு சட்டதிருத்த மசோதாவை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்திருக்கு. இதை சென்னை நிகழ்ச்சியிலும் மோடி குறிப்பிட்டுப் பேசினார். இது அந்த சமூக மக்களிடையே மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கு.''

""கோ பேக் மோடிங்கிற வழக்கமான டிரெண்டிங் முதல் நாளே ஆரம்பமான நிலையில், பா.ஜ.க தரப்பு டென்ஷனாக இருந்ததே?''

""நடிகை ஓவியாவின் ட்வீட்டர் பக்கம் உள்பட பலரும் கோ பேக் மோடின்னு ஆரம் பிச்சிட்டாங்க. தமிழ்நாடு எப்பவும் இப்படித் தானான்னு பா.ஜ.க. நிர்வாகிகள் டென்ஷனா யிட்டாங்க. அதற்குப் போட்டியா, "நமஸ் காரம் மோடி'னு பா.ஜ.க தரப்பிலிருந்து ட்ரெண்டிங் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டது. அத்துடன், தேவேந்திர குல வேளாளர் அமைப்புகளின் வாழ்த்துப் பதிவுகளும் பா.ஜ.க தரப்புக்கு ஆறுதல் தந்தது. அதே நேரத்தில், தேவேந்திர குல வேளாளர்கள் என்ற அடை மொழிக்குள் கொண்டு வருவதை வேளாளர்கள், முக்குலத்தோர்கள், கொங்கு வேளாளர்கள் போன்ற சமூகங்கள் விரும்பலை. அவங்க தரப்பிலிருந்து அதிருப்தி வெளிப்படுது. எல்லாரும் இணக்கமா இருக்கிற சூழலை உருவாக்க வேண்டியது மத்திய-மாநில அரசுகளின் பொறுப்பு.''

""அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியா இல்லைன்னு, இங்கே வந்த தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, தமிழக அரசின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஏகத்துக்கும் குடைந்திருக்கிறாரே?''

election commissioner

""உண்மைதாங்க தலைவரே, தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் டெல்லியில் உள்ள தேர்தல் அதிகாரிகள் இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு கடந்த 11-ந் தேதி வந்தாங்க. 12-ந் தேதி தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அமலாக்கத்துறையினர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாங்க. அப்ப சுனில் அரோரா, உள் துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரிடம், ""தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நீங்க கொஞ்சமும் கவனிக்கலை. மதுவிலக்குப் பிரச்னைகள் நிறைய இருக்கு. சொல்லப்போனால் உங்களுக்கு வேலை செய்யவே தெரியலை''ன்னு காட்டம் காட்டியதோடு, ""தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு ஏன் பதவி உயர்வு கொடுக்கலை? தேவையில்லாமல் காவல் துறையில் உயர் அதிகாரிகளின் பதவிகளை ஏன் காலியாகவே வச்சிருக் கீங்க?ன்னு கடுமையான கேள்விகளையும் கேட்டதோடு, ""இப்படியே போனா தேர்தல் இப்போதைக்கு இல்ல''ன்னும் திகைக்க வச்சிட்டாராம்.''’

""சுகாதாரத்துறைச் செயலாளர் கிட்டேயும் கேள்விகள் பாய்ந்திருக்கே?''

""ஆமாங்க தலைவரே... கொரோனாவிலிருந்து உலகம் மீண்டு வரும் நிலையில், சட்ட மன்றத் தேர்தலை நடத்துவதற்கு மருத்துவ ரீதியான பாதுகாப்பு அம்சங்கள் ரொம்ப முக்கியம். ஆனால், சுகாதாரத்துறையில் பல இடங்கள் காலியாகவே இருக்குது. ஆள் இல்லா விட்டால், அந்த வேலையை செய்ய முடியாது. அதனால்தான், ஏன் இதை காலியா வச்சிருக்கீங்கன்னு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்கிட்ட சுனில் அரோரா கேள்விகள் கேட்டிருக்கிறார்.''

""அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி யிருக்குதே?''

""கேள்விக்குள்ளான அதிகாரிகளை அடுத்து, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனிடம் பேசிய அரோரா, ""நான் சொன்ன குற்றச்சாட்டுகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நீங்க அறிக்கை கொடுத்தாகனும்''னு கறாரா சொல்லியிருக்கார். அதனால் தமிழக அதிகாரிகள் அப்செட் ஆகியிருக்காங்க.. அதேபோல் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனையின் போது, அவர்கள் கூறிய பல கருத்துக்களைத் தேர்தல் ஆணையர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தமிழகத்திற்கும் புதுவைக்கும் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்துவதாக அவர் சொல்லியிருக்கிறார். அதேபோல், தேர்தல் முடிந்ததும் ஒரு நாள் இடைவெளியில் வாக்குகள் எண்ணனும்ங்கிற கோரிக்கையையும் அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.''

""ம்...''’

ff

""இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியேறிய தமிழக அதிகாரிகள், இங்கே தேர்தலை நடத்தக்கூடாதுங்கிற முடிவோட டெல்லி அதிகாரிகள் நம்மிடம் ஆலோசனை நடத்துனமாதிரி இருக்கேன்னு முணுமுணுத்திருக்காங்க. மத்திய பா.ஜ.க. அரசைப் பொறுத்தவரை, தங்களுக்கான சாதகமான சூழலைத் தமிழ்நாட்டில் எதிர்பார்க் குது. அதனால் என்ன நடக்குமோங்கிற பதற்றம் அதிகாரிகளிடமும் அரசியல் கட்சிகளிடமும் இருக்குது.''

""முதல்வர் எடப்பாடியிடமே பொள்ளாச்சி வி.ஐபி. பற்றி பெண்கள் புகார் சொல்லிக் குமுறி இருக்காங்களே?''

""உண்மைதாங்க தலைவரே, உடுமலை, பொள்ளாச்சி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்ற எடப்பாடி, உடுமலைப்பேட்டையில் ஓய்வெடுத்த போது, பெண்கள் திரண்டுபோய் அவரை சந்திச்சிருக்காங்க. அப்போது பொள்ளாச்சி பாலியல் வில்லங்க விவகாரத்தில் சிக்கியுள்ள பொள்ளாச்சி வி.ஐ.பி.யையும் அவர் மகனையும் கடுமையாகத் தண்டிக்கனும்,. அவர்களால் கொங்கு சமூகப் பெண்கள் உள்பட பல சமூகத்துப் பெண்களும் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். அதனால் இந்த வி.ஐ.பி. குற்றவாளிகளை எந்த வகையிலும் தப்ப விட்டுவிடக் கூடாது. இதில் உங்க அரசியலைக் காட்டிடாதீங்கன்னு ஆத்திரமும் ஆவேசமுமாக் கொந்தளிச்சிருக்காங்க. ஒரு கட்டத்தில், சாபம் விடுற மாதிரி அவங்க குரல் இருந்திருக்கு. அந்தப் பெண்களை சமாதானப்படுத்திய எடப்பாடி, குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப் படுவார்கள்ன்னு உறுதியளிச் சாராம்.''’

""எம்.பி. தேர்தல் சமயத்தில் நம்ம நக்கீரன் மூலமா அம்பலமானது பொள்ளாச்சி கொடூரம். எம்.எல்.ஏ தேர்தல் சமயத்தில் நடவடிக்கை எடுக்கப் போறாராமா எடப்பாடி? தன் பதவிக்கான தேர்தல் வரும்போதுதான் நீதிதேவதை அவர் கனவுல வந்ததா?''

""தலைவரே இதற்கிடையில், பெண்கள் திரண்டுபோய் தன்னைப் பற்றியும் தன் மகனைப் பற்றியும் எடப்பாடியிடம் புகார் தெரிவிச்சதை அறிந்து அரண்டுபோன, அந்த வி.ஐ.பி., அடுத்த கொஞ்ச நேரத்தில் தன் இரு மனைவிகளையும் அழைத்துக் கொண்டுபோய், எடப்பாடியின் காலில் விழுந்து, சி.பி.ஐ.யின் பிடியில் இருந்து நீங்கதான் எங்களைக் காப்பாத்தனும்னு கண்ணீர் விட்டிருக்கார். எடப்பாடியோ, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. நாம நினைக்கிற மாதிரி நடக்குறதா தெரியலை. ஒருவேளை, உங்க தரப்பின் மீது கைது நடவடிக்கை பாய்ந்தால், உங்களைக் கட்சியில் இருந்து கட்டம் கட்ட வேண்டியிருக்கும்ன்னு கறார்க்குரலில் சொல்லி அவரை அனுப்பி வச்சிட்டாராம்.''

""பிப்ரவரி 24-ல் ஜெ.வின் 73-வது பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டாட எடப்பாடி திட்டமிட்டிருக்கிறார்னு சொல்லப்படுதே?''

""ஆமாங்க தலைவரே, பிறந்தநாள் விழான்னா, அதன் முதல் நிகழ்வா அவர் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தறதுதான் வழக்கம். ஆனால் இப்போது அது பூட்டப்பட்டிருப்பதால், இந்த ஆண்டு அப்படியொரு அஞ்சலி நிகழ்ச்சி இருக்குமான்னு அ.தி.மு.க.வினரே கேள்வி எழுப்பறாங்க. இதற்கிடையே ஜெ. பிறந்தநாளில் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளையும், அவற்றுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க நினைக்கிறாராம் எடப்பாடி. அந்த நாள், தனக்கு உகந்த நாளான்னு தன் ஆஸ்தான ஜோதிடர்களை ஆராய்ச்சி பண்ணச் சொல்லியிருக்கிறாராம் அவர். இதற்கிடையே, ஜெ.’ பிறந்த நாளில் தன் தலைமையில் அஞ்சலிப் பேரணி நடத்த சசிகலா விரும்புகிறாராம். தினகரனோ, அதற்குள் ஜெ.’ நினைவிடத்தை அவங்க திறப்பாங்களாங்கிறது தெரியலை. அப்படியே திறந்தாலும் நாம் பேரணி நடத்த அனுமதி கொடுக்கமாட்டாங்கன்னு சசிகலாவிடம் சொல்லியிருக்காராம்.''

premalatha

""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். தே.மு.தி.க., அ.தி.மு.க.விடம் 40 தொகுதியைக் கேட்டதால், எடப்பாடி ரொம்பவே எரிச்சலாயிட்டாராம். அதனால் கூட்டணிப் பேச்சு வார்த்தைக்கே அவங்க தரப்பை அவர் அழைக்கலை. இந்த நிலையில் இப்போது தே.மு.தி.க. நம் கூட்டணிக்குத் தேவையில்லை. அவங்களுக்கு ஒரு சீட்டைக்கூட கொடுக்க எனக்கு மனசு வரலைன்னு அவர் சொல்லிவிட்டாராம். இதையறிந்த தே.மு.தி.க. பொருளாளரான பிரேமலதா, எடப்பாடி மீது கடும் கோபத்தில் இருக்கார். இந்த நிலையில் அவர் சசிகலாவை சந்திக்க முயல, சசிகலாவும் இப்போதைக்கு நான் உங்களை சந்திக்க விரும்பலைன்னு சொல்லிஅவரை மேலும் அப்செட் ஆக்கிவிட்டாராம்.''