ன்னதான் உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் கடுமையான வார்த்தைகளால் விளாசி கண்டனத்தைப் பதிவு செய்தாலும் தமிழக போலீசின் மணமும் குணமும் மாறாததாகவே இருக்கிறது. அதிலும் தமிழகத்தையே உறைய வைத்த சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகும், அப்பாவிகளிடம் தங்களின் வெறியாட்டத்தை நிறுத்திய மாதிரி தெரியவில்லை. சமீபத்தில் மதுரை மாநகரில் அரங்கேறிய போலீசின் வெறியாட்டம், கிட்டத்தட்ட சாத்தான்குளம் சம்பவம் போன்றது தான்.

police

மதுரை ஜெய்ஹிந்த்புரம் காலனி பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் திருப்பதியும் அவரது நண்பர்கள் மூன்று பேரும் கடந்த 08-ஆம் தேதி பாண்டிகோவிலில் நடந்த விழா ஒன்றில் டோல் (பறை) அடித்து முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். சுப்பிரமணிய புரம் அருகில் அவர்களை நான்கு போலீசார் வழிமறித்துள்ளனர்.

""யார்டா நீங்க? எங்கருந்துடா வர்றீங்க?''’’என எடுத்த எடுப்பிலேயே சண்டியர்த்தனமாக கேள்விகள் கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளைஞர்கள், ""ஜெய்ஹிந்த்புரத்தில் இந்த ஏரியாவிலிருந்து பாண்டிகோவிலுக்குப் போய் டோல் அடிச்சுட்டு வர்றோம்''’’ என பவ்யமாக பதிலளித்துள்ளனர்.

Advertisment

""ஓ... அந்த ஏரியாதே. பயலுகளா?''’ என கேவலமாகப் பேசி தங்களது வெறியாட்டத்தை அந்த இடத்திலேயே ஆரம்பித்துவிட்டனர்.

அதன் பின் என்ன நடந்தது என்பதை இப்போது குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் திருப்பதி நம்மிடம் சொல்லத் தொடங்கினார்.

"குடிச்சிட்டு சலம்பல் பண்ணிக்கிட்டு வர்றீகளாடா நாய்களா'ன்னு அந்த போலீஸ்காரவுக கேட்டதும், "சார் நாங்க குடிச்சிருக்கோம், ஆனா டிரைவர் குடிக்கல சார்'னு சொன்னதுக்கு "என்னடா சட்டமெல்லாம் பேசுறே'ன்னு அந்த இடத்துல தாறுமாறா அடிச்சு, ஜெய்ஹிந்த் புரம் ஸ்டேஷனுக்கு இழுத்துட்டுப் போனார்கள். அங்க ஜட்டியோட உட்கார வச்சு, பின்பக்கம், தாடை, முதுகு, வாய்னு வெறிகொண்டு அடித்தார்கள். சத்தம் வெளில வரக் கூடாதுன்னு எங்க சட்டத்துணிய வாய்ல வச்சு அமுக்கிட்டாக.

Advertisment

கொஞ்ச நேரத்துல ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வந்தாரு. நாங்க யாரு எந்த ஏரியான்னு போலீசிடம் விசாரிச்சதுதான் தாமதம், அஞ்சு போலீசும் சேர்ந்து ருத்ரதாண்டவமே ஆடிட்டாக. என்னை மட்டும் சுவத்தோரம் திருப்பி உட்கார வச்சு, சகட்டுமேனிக்கு அடிச்சதுல, ரத்த வாந்தி எடுத்துட்டேன். சார் எதுக்காக எங்கள இப்படி அடிக்கிறீகன்னு கேட்டதுக்கு சாதியச் சொல்லி அசிங்கமாக பேசுனாரு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார். அதன் பின்னும் அடி நிக்காததால மயக்கம் போட்டு விழுந்துட்டேன், அதுக்குப் பிறகு என்ன நடந்ததுன்னு தெரியல சார்''’என்றார் வேதனைக் குரலில். அதன் பின் நடந்ததை விவரித்தார் திருப்பதியின் அண்ணன் தமிழ்பதி.

police

""தகவல் கேள்விப்பட்டு நானும் தமிழ்ப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலரும் ஸ்டேஷனுக்குப் போனபோது, ரத்த வெள்ளத்தில் கிடந்தான் என் தம்பி. இதனால் பயந்து போன சப்-இன்ஸ்பெக்டர், ""கேஸெல்லாம் பெரிசா ஒண்ணுமில்ல, சும்மா பெட்டிகேஸ்தான்... கோர்ட்ல ஃபைன் கட்டிரு, இப்ப உன் தம்பிய கூட்டிட்டுப் போ''ன்னு ஈவிரக்கமே இல்லாம சொன்னாரு.

விதிய நொந்துக்கிட்டு என் தம்பிய கவர்மெண்ட் ஆஸ்பத்திருக்கு கூட்டிப் போய் ஸ்கேன் எடுத்துப் பார்த்தப்ப தான் தாடை பற்கள் முமுசும் ஒடஞ்சு போய், கழுத்து, காது, இடுப்பு பகுதிகளில் எலும்பு உடைஞ்சு போயிருப்பது தெரிஞ்சது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் டேமேஜாகி வீங்கிப் போயிருச்சு. இதையெல்லாம் சரி செஞ்சு எப்படி என் தம்பிய பழைய நிலைக்கு கொண்டு வரப்போறேன்னு தெரியலயே''’என கண்ணீர்விட்டுக் கதறினார் தமிழ்பதி.

சில தலித் அமைப்புகளின் ஆதரவுடன் மதுரை மாநகர் போலீஸ் கமிஷனரிடம் சப்-இன்ஸ் செல்வகுமார் மற்றும் ஐந்து போலீசார்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஆக்ஷன் எடுத்து அவர்களைக் கைது செய்ய வேண்டும், திருப்பதியின் மருத்துவ செலவுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்’’ என மனு கொடுத்துள்ளார் முருகன்.

சப்-இன்ஸ் செல்வகுமாரை நாம் தொடர்பு கொண்டோம். அந்த நாலு பேரையும் நாய் அடி பேய் அடிச்சதுல ரொம்ப டயர்டா இருந்துருப்பாரு போல. நமது அழைப்பை ஏற்கவேயில்லை.