"பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வினர் தூர் வாருவதில் செய்த மிகப்பெரிய மோசடியால் இப்படி நாங்கள் தவிக்கிறோம், இக்கட்டான சூழலில் ஆறு மாதத்திற்கு முன்பு ஆட்சிக்கு வந்த தி.மு.க.வை நாங்கள் குறைசொல்ல முடியாது, கோரிக்கைதான் வைக்கிறோம்'' என கலங்கியபடி முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளனர் டெல்டா விவசாயிகள்.

cmvisit

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களின் சார்பில் அமைச்சர்கள் யாரும் இல்லை. மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய ஐ.பெரியசாமி தலைமையில் 7 அமைச்சர்கள் குழுவை அமைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நவம்பர் 13 அன்று கடலூர் வழியாக இந்த 4 மாவட்டங்களையும் நேரில் பார்வையிட்டார்.

மழையினால் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரும், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா 20 ஆயிரம் ஏக்கரும், தஞ்சை மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கரும் மழை நீரில் மூழ்கியுள்ளன ஒட்டுமொத்தமாக டெல்டா மாவட்டங்களில் கிட்டத்தட்ட 1 லட்சத்து 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கியிருப்பதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

Advertisment

cc

கடலூர் மாவட்டத்தை ஆய்வுசெய்த முதல்வர் அதன்பின், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர், எருக்கூர், தென்னலக்குடி ஆகிய பகுதியில் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிரை பார்வை யிட்டார். அங்கிருந்த விவசாயி களிடம், "இது எத்தனை நாள் பயிர்'' என கேட்டார். விவசாயிகளோ, " 44 நாள் பயிர். இனிமேல் இந்தப் பயிர்கள் தேறாது, முழுவதும் அழுகி விட்டது... உரிய இழப்பீடு வழங்க வேண்டும்'' என்றனர்.

முதல்வரிடம் பலரும் மனு கொடுத்தனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள கருங்கண்ணி, திருவாரூர் மாவட்டம் ராயாநல்லூர், புழுதிக்குடி உள்ளிட்ட பகுதிகளை பார்வை யிட்டுவிட்டு, "உரிய நிவாரணம் கிடைக்கும்'' என ஆறுதல் கூறினார்.

Advertisment

பின்னர் ஊடகத்தினரிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "நாங்கள் ஆட்சிப் பொறுப் பேற்றவுடன் டெல்டா மாவட்டங்களில் 65 கோடி மதிப்பில் 4 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. இதனால்தான் காவிரிநீர் கடைமடை வரை சென்று பாதிப்புகளை குறைத்திருக்கிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணி செய்வதாக கூறி பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதற்கு தனி விசாரணைக்குழு அமைக்கப்பட்டு நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

முதல்வரின் வருகை குறித்து தரங்கம்பாடி அடுத்துள்ள கஞ்சாநகரம் விவசாயி இருதயராஜ் கூறுகையில், "கஜா புயலின்போது ஆளுங் கட்சியினர் வருவதற்கு முன்னமே முதல் ஆளாக வந்து ஆறுதல் கூறியதோடு தி.மு.க.வினரை முடுக்கிவிட்டு நிவாரண பொருட்களை லாரிகளில் கொண்டுவந்து வழங்கிடச் செய்தார். தற்போது முதல்வராக ஆன பிறகும் முதல்ஆளாக வந்திருக்கிறார். அரசு எவ்வளவு நிவாரணம் கொடுத்தாலும், விவசாயிகளின் கடனை அடைத்துவிட முடியாது. நேரடி ஆறுதல்தான் முதல் நம்பிக்கை. அதனைத் தந்த முதல்வர் ஸ்டாலின், நிச்சயம் நிவாரணமும் கிடைக்கச் செய்வார்'' என்றார் எதிர்பார்ப்புடன்.

சீர்காழி அடுத்துள்ள திருப்புன்கூர் விவசாயியான பிரபு பிள்ளை கூறுகையில், "கடந்த ஆண்டு ஆரம்பத்தில் மழை குறைவாக இருந்தாலும், இறுதி நாட்களில் மிக கனமழை பெய்து அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களை நாசம் செய்தது... கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையாகிடுச்சி. அப்போது எடப்பாடி அரசு முழுமையாக ஆய்வுசெய்து ஏக்கருக்கு 8,000 நிவாரணமும் வழங்கியது. அந்த பயிர்களுக்கு காப்பீடு செய்திருந்தோம், ஆனால் காப்பீடு நிறுவனம் குளறுபடி செய்து அதிகம் பாதித்த, கடைமடைப் பகுதியான எங்கள் பகுதிக்கே காப்பீடு வழங்கவில்லை. ஆய்வுக்குழு ஆய்வு செய்து "முழுமையாக பாதித்துள்ளது' என நிவாரணம் வழங்கிய நிலத்திற்கு, காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டுத் தொகை தர மறுக்கிறது. நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 194 கிராமங்களை புறக்கணித்திருக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம். இது குறித்து முதல்வரிடம் மனு அளித்துள்ளோம், எங்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்க முதல்வர் உதவி செய்ய வேண்டும்'' என்கிறார்.

flood