4 வருடம் சிறையிலும் 10 நாட்கள் மருத்துவமனையிலும் கழித்த சசிகலா சுதந்திரக் காற்றை இப்பொழுது தான் சுவாசிக்கிறார். பெங்களூரு புறநகரில் உள்ள ப்ரஸ்டீஜ் கோல்டு ஃப்ஷயர் என்கிற சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் சசிகலாவுக்கென சிறப்பு வசதிகளை சொகுசு விடுதியின் நிர்வாகம் செய்து கொடுத்திருக்கிறது.
விடுதியில் கொடுக்கும் உணவை சசிகலா சாப்பிடுவதில்லை. அவருக்கென சமைக்க போயஸ் கார்டனில் ஏற்கனவே சமைத்த பெண் ஒருவரை சொகுசு விடுதிக்கும் வரவழைத்திருக்கிறார். அந்த பெண் சமைப்பதற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட்களை ஓசூரைச் சேர்ந்தவரும் கடந்த நான்கு வருடமாக சசிகலாவை கவனித்துக் கொண்டதால் மிகப்பெரிய பணக்காரராக மாறிய மா.தேவா என்பவரும், மா.தேவாவை போல கடந்த நான்கு வருடமாக சசிகலாவை கவனிப்பதையே தொழிலாக வைத்துக் கொண்டிருக்கும், ரியல் எஸ்டேட் அதிபரும், முன் னாள் எம்.எல்.ஏ.வுமான ஸ்ரீபெரும்புத்தூரைச் சேர்ந்த மொளச்சூர் பெருமாளும் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.
மெயின் ரோட்டில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந் துள்ளது சசிகலா தங்கியிருக்கும் ரிசார்ட். அந்த ரிசார்ட்டைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பை கர்நாடகா போலீசார் அமைத்திருக்கிறார்கள். மாநில உளவுத்துறை போலீசார், மத்திய உளவுத்துறையினர் என போலீஸ் மயமாகக் காணப்படும் அந்த ரிசார்ட்டில், கோடம்பாக்கம் சிவா தலைமையில் மன்னார்குடியில் இருந்து வரவழைக்கப்பட்ட சஃபாரி படையினர் சசிகலாவுக்கென தனிப்பட்ட பாதுகாப்பை வழங்குகிறார்கள்.
சசிகலாவின் அறைக்கு சற்று தொலைவில் இன்னொரு அறை எடுத்து டாக்டர் வெங்கடேஷ் மற்றும் இளவரசியின் மகன் விவேக் ஆகியோர் தங்கியிருக்கிறார்கள். சசிகலாவை தினமும் அவரது குடும்ப மருத்துவர் கார்த்திக் என்பவர் வந்து மருத்துவ பரிசோதனை செய்கிறார். சிறையில் இருந்த பொழுது தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளும் சசிகலா விடுதலையானதும் உடல்நிலை சரியில்லாததால், அதைத் தவிர்த்துவிட்டார். பெரும்பாலும் தனிமையில்தான் இருக்கிறார். செல்போனில் பேசுவது, அவ்வப்போது டாக்டர் வெங்கடேஷிடம் பேசுவது, டி.வி.யில் செய்திகள் பார்ப்பது என நேரத்தைக் கழிக்கிறார் என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்க மானவர்கள்.
5- ஆம் தேதி சிறையில் இருந்து விடு தலையாகும் இளவரசி நேராக சசிகலா தங்கியிருக்கும் ரிசார்ட்டு வருவதாகத் திட்டம். 6-ஆம் தேதி ஒருநாள் முழுவதும் சசிகலாவுடன் தங்கியிருந்து விட்டு, 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரையிலான நல்ல நேரத்தில் புறப்படலாம் என சசிகலாவின் ஜோதிடர் குறித்துக் கொடுத்த நேரத்தில் ரிச்சார்ட்டிலேயே சிறிய பூஜையை நடத்தி முடித்துவிட்டு இளவரசியுடன் சசி புறப்படுகிறார்.
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரில் சஃபாரி படையினரின் பாதுகாப்புடன் வரும் சசிகலாவுக்கு வரவேற்பு கொடுப்பதற்கென சசிகலாவின் சொந்தபந்தங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இடம், பெங்களூருவில் இருந்து சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள இளவரசியின் வீட்டுக்கு பக்கத்தில் சசிகலாவுக்கெனக் கட்டப்பட்டுள்ள புதிய வீடு வரை வரவேற்பு அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது.
சென்னைக்கு வரும் சசிகலா நேரடியாக ஜெயலலிதாவின் சமாதிக்கு செல்லத் திட்டமிட்டிருந்தார். அதைத் தடுக்க, எடப்பாடி பராமரிப்பு வேலை என்று காரணம் சொல்லி மூடி வைத்து விட்டார். சிறைக்கு செல்லும் முன் சசிகலா குடியிருந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிற்கு அவர் சென்றுவிடக்கூடாது என அங்கேயும் தமிழ்நாடு போலீசாரைக் குவித்து வைத்து விட்டார். இந்த தகவல் சசிகலாவை சென்றடைந்தது.
""நான் வருவேன் என்று அக்காவின் சமாதியை மூடி வைத்து விட்டார்களா? இப்போதுதானே மூட முடியும். அக்காவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று சமாதியை மூட முடியுமா? நான் அன்று சென்று அக்காவை பார்த்து வருகிறேன்'' என டாக்டர் வெங்கடேஷிடம் தெரிவித்திருக்கிறார் சசிகலா.
தனக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர் அடிக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகளை ஓ.பி.எஸ்.ஸின் ஒப்புதலுடன் கட்சியை விட்டு எடப்பாடி நீக்குவது பற்றி சசிகலா வருத்தம் அடைந்திருக்கிறார். போஸ்டர் அடிப்பவர்கள் ஏதோ ஆர்வத்தில் செய்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்ன நியாயம்? என கேட்டிருக்கிறார். இதற்கிடையே, தமிழ்நாடு முழுவதும் ஒரு தனியார் ஏஜென்ஸியை வைத்து, சசிகலா இணைந்தால் அ.தி.மு.க. பலம் பெறுமா என ஒரு கருத்துக் கணிப்பை மன்னார்குடி வகையறாக்கள் ஜெ.வின் பாணியில் ஒரு தனியார் ஏஜென்ஸி மூலம் நடத்தியிருக்கிறார்கள்.
அதில் சசிகலாவின் வருகை அ.தி.மு.க.விற்கு வலுச்சேர்க்கும். சசிகலா, ஜெயலலிதாவுக்காக சிறைத் தண்டனை அனுபவித்தவர். அவர் சிறையில் இருந்து வெளிவரும் பொழுது கொரோனா நோயால் சாகும் நிலைக்கு சென்று மீண்டு வந்தவர். எடப்பாடி நான்கு ஆண்டு காலமாக அ.தி.மு.க. ஆட்சியை மோடி மூலமாகக் காப்பாற்றி வைத்துக் கொண்டவர். ஆனால் ஓ.பி.எஸ். போன்றவர்கள் அ.தி.மு.க. ஆட்சியைக் கவிழ்த்து, தி.மு.க. ஆட்சியை வர வைக்க முயற்சி செய்த போது, அ.தி.மு.க. ஆட்சியைக் காப்பாற்றியவர் சசிகலா. அதேபோல் அ.தி.மு.க. ஆட்சி அமைவதற்கு பாடுபட்டவர் சசிகலா. அப்படிப்பட்ட சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி சொல்வது துரோகம் என்று ஒரு தனியார் ஏஜென்ஸி மூலம் நடத்தப்பட்ட அந்த கருத்துக்கணிப்பில் 70 சதவீதம் அ.தி.மு.க.வினர் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். இது சசிகலாவை உற்சாகமடைய வைத்துள்ளது.
இது பற்றி தனக்கு நெருக்கமானவர்களுடன் பேசும் சசிகலா, ""நான் சிறைக்கு சென்ற போது, என்னை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க.வினர் மத்தியில் எனக்கு இருந்த ஆதரவு விதை இன்றும் தொடர்கிறது. நான் சென்னைக்கு வந்ததும் என்னை அ.தி.மு.க. அமைச்சர்கள் வரிசையாக வந்து பார்ப்பார்கள். நான் அ.தி.மு.க.வை உடைத்து, ஒரு தனி அணியை உருவாக்க மாட்டேன். அ.தி.மு.க. என் வசம் வரும்'' என தன்னம்பிக்கையுடன் சொல்லி வருகிறார் சசிகலா. இதற் கிடையே, பா.ஜ.க.வின் தலைவர்களின் ஒருவரான ராஜ்நாத் சிங்கின் உறவினர் ஒருவரை பிடித்து சசிகலாவுக்காகப் பேசி வந்தார்கள் மன்னார்குடி சேர்ந்தவர்கள். அந்த பேச்சுவார்த்தை பண விவகாரத்தில் முட்டி நின்றபோது, யாரும் பணம் கொடுக்க தயாராக இல்லை.
இதற்கிடையே, தினகரன் தனி ஆவர்த்தனமாக பா.ஜ.க. தரப்புடன் பேசி வந்தார். பா.ஜ.க.வும் எடப்பாடியிடம் அ.ம.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள். சசிகலா தனியாக இருக்கட்டும். அ.ம.மு.க.வினர் தங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது எனச் சொல்லும் 54 தொகுதிகளில் 25 தொகுதிகளைக் கொடுங்கள் என பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. சசிகலாவை அனுமதிக்க மறுப்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடியோ, அது நடக்கவே நடக்காது என மறுத்துள்ளாராம். இதையெல்லாம் கேள்விப்பட்ட சசிகலா தினகரனிடம், ""உனக்கு இப்படி ஒரு பேச்சுவார்த்தையை நடத்த யார் சொல்லி தந்தார்கள்'' என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பா.ஜ.க., அ.ம.மு.க.வுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக இருக்கிறது என தினகரன் பதிலளித்துள்ளார். அதை மதுரையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தினகரன் எதிரொலித்துள்ளார்.
தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்றால் சசிகலாவின் ஆதரவு தேவையென தினகரன் சொன்ன பதிலில் பின்னணியில் பா.ஜ.க.வுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தை எதிரொலித்ததை சசிகலா ரசிக்கவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இதற்கிடையே, சசிகலாவுக்கு எதிராக பேசி வரும் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவின் கைகளுக்கு அ.தி.மு.க. செல்லுமானால் நான் பா.ஜ.க.விற்கு சென்றுவிடுவேன் என்கிறார். அதேபோல், கே.பி.முனு சாமியும் பா.ஜ.க.வின் ஆதரவுடன் மிச்சமுள்ள எம்.பி. பதவி காலத்தைக் கழித்துவிடுவேன் என்கிறார்.
இதற்கிடையே, ஓ.பி.எஸ்., சசிகலா பக்கம் சாய்ந்து விடுவார் என சந்தேகக் கண்ணுடன்தான் எடப்பாடி விசாரித்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். சசிகலாவை ஆதரித்து எடப்பாடி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், ஆகியோர் ஏற்கனவே பேசிய பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுவது அ.தி.மு.க.வினரின் மன நிலையைக் காட்டுகிறது என்கிறார்கள் கட்சியின் நிர்வாகிகள்.