அனைத்துத் துறைகளையும் தனியாருக்கு தாரைவார்க்கும் இந்த அரசு, சென்னை மாநகராட்சியின் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் வசூல் செய்யும் நடைமுறையையும் தனியாருக்கு தாரைவார்த்துள்ளது.
தமிழக முழுவதும் உள்ள மாநகரட்சிகளில் முக்கிய இடங்களில் கார் பார்க்கிங் பிரிவுத் தொழிலாளர்கள் 5 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் பணிபுரிந்து வந்தனர். இதில் சென்னை மாநகராட்சியின் கீழிருக்கும் அரசு கட்டடங்கள், கோயில்கள், சென்னை மெரினா போன்ற முக்கிய இடங்களில் 250 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ராணுவத்தில் பணி புரிகின்றவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு இந்தப் பணி வழங்கப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்திடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டு, கார்களுக்கு 6 மணி நேரத்திற்கு 5 ரூபாய் வீதம் ஒரு நாளுக்கு 20 ரூபாய் பெற்று தொகையை அரசிடம் ஒப்படைப்பார்கள். இவர்களுக்கான ஊதியத்தை அரசு வழங்கி வந்த நிலையில், தற்போது முன்னால் மதுரை மேயர் ராஜன் செல்லப்பாவின் ஜி.சி.சி. நிறுவனத்திற்கு இந்தப் பணி தாரைவார்க்கப்பட்டது. அமைச்சர் வேலுமணி உடனிருக்க, 04.02.2021-ஆம் தேதி இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி.
அரசு பார்க்கிங் கட்டணம் வசூலித்தபோது டூவீலர்களுக்கு இலவசமாகவும், கார்களுக்கு குறைந்த பட்சமாக 5 ரூபாயும் அதிகபட்சமாக 20 ரூபாயும் இருந்தது. தற்போது தனியாருக்கு தாரைவார்த்த காரணத்தால் டூவீலர்களுக்கு 1 மணி நேரத்திற்கு 5 ரூபாயும், ஒரு நாளைக்கு 50 ரூபாயும், கார்களுக்கு 1 மணி நேரத்திற்கு 20 ரூபாயும், ஒரு நாளைக்கு 200 ரூபாயும் வசூல் வேட்டை செய்துவருகிறார்கள்.
இதனால் ஆத்திர அவசரத்துக்கு கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தவேண்டிய பொதுமக்கள் கூடுதலாகச் செலவிடவேண்டிய நிலையும், இப்பணியை நம்பியிருந்தவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகவும் ஆகியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய செந்தில்குமார், “""நான் மெரினாவில் பணிபுரிந்து வருகிறேன். எங்கள் குடும்பமே இந்த சம்பளத்தை வைத்துதான் வாழ்ந்து வந்தோம். அரசுதான் எனது ராணுவப் பணியைப் பாராட்டி இந்த வேலை கொடுத்தது. 25 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். திடீரென இந்தப் பணியை தனியாருக்குக் கொடுத்ததால் எங்களின் வாழ்க்கை கேள்விக்குறி யாகிவிட்டது. துப்புரவுத் தொழி லாளர்களுக்கும் இதேதான் நடந்தது. ஒன்றைத் தனியார்மயம் ஆக்கும்முன், அந்தப் பணியில் இருந்தவர்களின் எதிர்காலத்தை யோசிக்காமல் எப்படி அரசால் செயலாற்ற முடிகிறது?''’என்றார்.