2021-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, ஊடகத் துறையைச் சேர்ந்த மரிய ரீஸாவுக்கும் டிமிட்ரி முரட்டோவுக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. வழக்கமான ஏதாவது நாட்டின் அதிபருக்கோ, தனியார் அமைப்புகளுக்கோ வழங்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு, இம்முறை பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது புதுமையான ஒன்றுதான்.

"ஜனநாயகத்துக்கும் ஊடகச் சுதந்திரத்துக்கும் பல இடங்களில் நெருக்கடி எழுந்துள்ள நிலையில், துணிச்சலான இவர்கள் இருவரும் இந்த உலகில் பத்திரிகையாளர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள். கருத்துச் சுதந்திரமும் தகவல் சுதந்திரமும் ஜனநாயகத்துக்கும், போர் மற்றும் மோதல்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான உரிமைகளாகும்''’என அறிவித்துள்ளது நோபல் குழு.

nobleprize

மரிய ரீஸா 58 வயதுக்காரர். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர், சி.என்.என். செய்தி நிறுவனத்தின் ஜாகர்த்தா பிரிவு தலைவராக பணியாற்றியவர். 2011-ல் முகநூலில் மூவ்பிஹெச் எனும் பெயரில் செயல்பட்டு வந்த மரியா, புலனாய்வு இதழியலில் இருந்த ஆர்வம் காரணமாக, 2012-ல் சில நண்பர்களுடன் இணைந்து ராப்ளர் எனும் டிஜிட்டல் மீடியாவைத் தொடங்கினார். மரியா, 2018-ஆம் ஆண்டு, வலைத்தளத்தில் வரும் போலிச்செய்திகளை அடையாளம் காட்டியதற்காக டைம் பத்திரிகையின் விருதும் பெற்றவர்.

Advertisment

"எந்தவொரு ஜனநாயகத்திற்கும் சட்டத்தின் ஆட்சி முக்கிய மானது, சட்டத்தின் ஆட்சி இல்லையென்றால் அது பாசிசத்தை நோக்கித் தாவிவிடும். பின் அதிகாரத்தில் இருப்பவரே யார் வாழ் கிறார், யார் இறக்கிறார் என்பதை முடிவு செய்கிறார்''’எனச் சொல் லும் மரியா, அந்த சட்டத்தின் ஆட்சியை விட்டு பிலிப்பைன்ஸ் விலகியபோதெல்லாம் தனது ராப்ளர் மூலம் அம்பலப்படுத்தி வந்தார்.

ராப்ளரின் முக்கியமான சாதனைகளில் ஒன்று, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூர்ட்டே ஆட்சிக்காலத்தில் போதை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற பெயரில் போதை மருந்து முகவர்கள், போதை அடிமைகள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஏழைகள் கொன்றொழிக்கப்பட்ட விவகாரத்தை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்ததாகும்.

அதிகாரத்தின் மூலமும் இணையத்தில் திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல்களின் மூலமும் பிலிப்பைன்ஸ் அதிபர் டியூர்ட்டே, அரசியல் எதிரிகளைத் துன்புறுத்தியதை தனது ராப்ளர் இணையதளத்தில் தொடராக எழுதி அம்பலப்படுத்தினார். அத்தோடு நின்று விடாமல் அர சியல் தலைவர்களின் ஊழல்களையும் தொடர்ந்து வெளிப்படுத்தியது ராப்ளர்.

Advertisment

இத்தனையையும் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்குமா பிலிப்பைன்ஸ் அரசு? ராப்ளர் ஊடகம் அந்நிய நாட்டைச் சேர்ந்த ஒருவரால் தொடங்கி நடத்தப்படுவதாகவும், பிலிப்பைன் ஸின் தேசிய நலனுக்கு விரோதமாகச் செயல்படுவதாகவும் விமர்சித்தார் அதிபர் டியூர்ட்டே. ஊடகத்தின் உரிமை ரத்து செய்யப்பட்டது. அதற்கெதிராக சட்டரீதியாக ரீஸா கடுமையாகப் போராட வேண்டியதானது. வழக்கொன் றில் ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெறுவது வரைக்கும் ரீஸா சென்றார். எனினும் மேல்முறையீட்டில் தப்பினார்.

அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்த செய்தி அறிந்ததும், “"பிலிப்பைன் குடிமக்களே! பத்திரிகை சுதந்திரம்தான் உங்களின் அனைத்து உரிமைகளுக்கும் அடித்தளம்''’என்றிருக்கிறார் மரியா.

nn

நோவாயா கெஸட்டாவின் ஆசிரியரான டிமிட்ரி முரட்டாவ், ரீஸாவுக்குச் சமமான போராட்டங்களை ரஷ்யாவில் எதிர்கொண்டவர். இந்த பத்திரிகையின் உருவாக் கத்தில் முன்னாள் ரஷ்ய அதிபர் மிகையில் கோர் பச்சேவுக்கும் பங்குண்டு. 1993-ல் கோர்பச்சேவுக் குக் கிடைத்த அமைதிக்கான நோபல் பரிசுத் தொகையில் கணிச மான தொகையை நோவாயா கெஸட்டா பத்திரிகைக்கு கணினி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கும் நிர்வாகச் செலவுகளுக்கும் அளித்தார். அதில் உருவானதுதான் இந்தப் பத்திரிகை.

ஊடகங்களுக்கு சவாலான சூழல்கள் அதிகரித்துவரும் ரஷ்யாவில், பத்தாண்டுகளுக்கும் மேலாக பேச்சுரிமையைப் பாதுகாத்து வருவதற் காக 59 வயதாகும் டிமிட்ரிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் மிகவும் தனித்துவமான பத்திரிகைகளில் ஒன்றாக நோவாயா கெஸட்டாவை அங்கீகரித்துள்ளதோடு, டிமிட்ரியின் இருபதாண்டு களுக்கும் அதிகமான ஊடக சேவையையும் நோபல் கமிட்டி பாராட்டியுள்ளது. ஊழல், போலீஸ் வன்முறை, சட்டபூர்வமற்ற கைதுகள், தேர்தல் முறைகேடுகள் என பலதரப்பட்ட செய்திகளை இப்பத்திரிகை வழங்குகிறது. மிக முக்கியமாக, செஸன்ய போர் மற்றும் சோவியத் ரஷ்யா உருவானதற்குப் பின்பான அரசியல் செல்வாக்குள்ள வியாபாரத் தலைவர்கள் குறித்து காத்திரமான செய்திகளைத் தந்துள்ளது.

தனது துணிச்சலான அணுகுமுறை காரணமாக நோவாயா கெஸட்டா ஆறு பத்திரிகையாளர்களை இழந்துள்ளது. செசன்யா போர் குறித்து, கட்டுரைகள் எழுதியதற்காக ஒப்பந்தக் கொலைகாரரால் சுட்டுக்கொல்லப்பட்ட அன்னா பொலிட் கோவ்ஸ்காஜா அவர்களுள் குறிப்பிடத்தக்கவர். செஸன்யாவில் ஒருபால் புணர்ச்சியாளர்கள் எப்படி நெருக்குதலுக்குள்ளாக்கப்பட்டனர் என்பது குறித்த இப்பத்திரிகையின் கட்டுரைகளும் கவனம் பெற்றன.

ரஷ்யாவில், பத்திரிகையாளர்கள் அந்நிய நாட்டு முகவர்கள் என்று முத்திரை குத்தப்படுவதும், நாடு கடத்தப்படுவதும் மிகஎளிது என்பதை மனதில் கொண்டால், சமரசமில்லாமல் ஆட்சியாளர்களுக்கு எதிராக தொடர்ந்து ஊடகத்தை நடத்துவது எத்தனை சிரமம் என்பதை உணர முடியும்.

கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இந்தியாவில் 18-க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் கொல்லப் பட்டிருக்கின்றனர். நாசூக்காக, எத்தகைய செய்திகள் வரவேண்டுமென்பதை ஆள்பவர்கள் பத்திரிகை யாளர்களுக்குச் சுட்டிக்காட்டுகின்றனர். சமூக ஊடகங்களை அரசுகள் கட்டுப்படுத்தும் நிலை நிலவுகிறது. இன்றைய சூழ்நிலையில் உலகமெங்கும் தேவை ஆயிரம் ஆயிரம் மரிய ரீஸாக்களும், டிமிட்ரி முரடோவ்களும்தான்.

-சூர்யன்