காற்றில் பறக்க விடப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்று, ஜெ அறிவித்த தமிழ்த்தாய் சிலை. ""அம்மா ஆட்சி என்கிறவர்கள் தமிழ்த் தாயைக் கண்டு கொள்ளவில்லை. போகட்டும். தமிழ்ச் சங்கம் அமைக்க விருக்கிற தமிழ்த்தாய் சிலையை வைப்பதற்குக்கூட அனுமதியளிக்க மறுப்பதா'' எனக் கொந்தளிக்கிறார்கள் தமிழுணர் வாளர்கள். இதில் உணர்வுள்ள அ.தி.மு.க.வினரும் உண்டு.

tamilthai

ராமகிருஷ்ணன் அ.தி.மு.க.வின் எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட இணைச் செயலாளர் பொறுப்பிலிருப்பவர். தமிழ் மற்றும் தமிழ்த்தாயின் மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட ராமகிருஷ்ணனும் தமிழ் இன உணர்வாளர்களும் இணைந்து திருச்செந்தூரில் 2016-ன் போது தமிழ்ச் சங்கத்தை நிறுவுகின்றனர்.

திருச்செந்தூரில் தமிழ்த்தாய்க்குச் சிலையமைத்து அதனை கோவிலாக்க வேண்டும், என்ற நோக்கத்தில் தமிழ்ச்சங்கத்தினர் முடிவெடுத்து அதற்கான பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். தங்களின் இந்த ஏற்பாட்டினை தமிழ் வளர்ச்சித்துறையின் அமைச்சரான மாஃபா. பாண்டியராஜனிடம் தெரிவித்து அனுமதி கேட்டிருக்கிறார்கள்.

சிலை வடிவமைப்பு பணிகள் முடிந்த பிறகும்கூட இழுத்தடித்த அமைச்சரோ, ""இது விஷயமாக தொகுதி அமைச்சரையும், மா.செ.வையும் பாருங்கள்'' என்று சொல்லி அலைக்கழித்திருக்கிறார்.

இதனால் விரக்தியடைந்த தமிழ்ச் சங்கத்தினர் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மற்றும் சி.எம். செல் வரை விஷயத்தைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதன் பிறகே சி.எம். செல்லிலிருந்து இது விஷயமாகக் கவனிக்கும்படி தமிழக வருவாய் ஆணையருக்கு தகவல் போயிருக்கிறது. இதற்கிடையில் இன்னும் ஏராளமான தடங்கல்கள்.

""48 நாட்கள் மட்டும் சிலையை வைக்க அனுமதி தாருங்கள். அதன் பிறகு நாங்கள், எங்கள் ஏற்பாட்டில் வேறிடம் பார்த்துக்கொள்கிறோம்'' என்று திருச்செந்தூர் வட்டாட்சியரிடம் கெஞ்சிய தமிழ்ச்சங் கத்தினர், கோரிக்கை மனுவும் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகே அசைந்து கொடுத்திருக்கிறது நிர்வாகம்.

இதையடுத்து டிச. 20 அன்று திருச்செந்தூருக்குக் கொண்டுவரப் பட்ட தமிழ்த்தாய் சிலை அங்குள்ள தெப்பக்குளமருகில் கூடாரத்தில் வைக்கப்பட, விஷயமறிந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று தமிழ்த்தாயை வணங்கி வழிபட்டிருக்கிறார்கள்.

தமிழ்ச் சங்க நிறுவன செயலாளரான ராமகிருஷ்ணனிடம் பேசியதில், ""தமிழன்னையைக் கோவிலாகக் குடியமர்த்த காணி நிலம், அதுவும் விலை கொடுக்கிறோம் என்று சொல்லிப் போராடுகிறோம். 82-க்கும் மேற்பட்ட இடங்களில் தலைவர்களின் சிலையை அமைக்க இடம்கொடுத்த அரசு, அன்னையை நிலையாக ஓரிடத்தில் வைப்பதற்கு இதுவரையிலும் அனுமதி தரவில்லை. இங்கு அன்னையும் ஆலயமாய் நிற்கிறாள் என்பது உலகுக்குத் தெரியவேண்டும் என்பதற்காகவே போராடிக் கொண்டிருக்கிறோம்''’என்று கம்பீரமாகச் சொன்னார்.

-பரமசிவன்

படங்கள் : ப.இராம்குமார்