மிழக மக்கள் அளித்த தீர்ப்பு, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பத்தாண்டு களுக்குப் பிறகான இந்த ஆட்சி மாற்றத்தில், தி.மு.க. மீண்டும் ஆளுங்கட்சியாகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க. இரண்டும் ஆட்சிக்கு வருவது புதியதல்ல. ஆனால், தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த தடவை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க. தனக்கு மத்தியில் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் தனக்கான அரசியல் காய்களை நகர்த்துவதற்கு திட்டமிட்டிருந்ததை அனைத்துத் தரப்பு மக்களும் அறிந்திருந்தனர்.

n

நீட் தேர்வு, ஜி.எஸ்.டி, இந்தி -சமஸ் கிருதம் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை எனத் தமிழ்நாட்டின் தனித்துவத்திற்கும் மாநில உரிமைகளுக்கும் எதிராக மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதால் தமிழகம் கண்ட பாதிப்புகள் ஏராளம். அந்த பாதிப்பு களைத் தடுத்து நிறுத்திடும் ஜனநாயகப் பாதை யாக அமைந்ததுதான் தமிழக சட்டமன்றத் தேர்தல்.

சுருக்கமாக சொல்வதென்றால், ஆரிய -திராவிடப் போர்.

அந்த ஜனநாயகப் போரில் தி.மு.க. கூட் டணியை தமிழக மக்கள் வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். தி.மு.க.வுக்கு தனிப் பெரும்பான்மையை வழங்கியிருக்கிறார்கள். அதன் கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரதிநிதித் துவம் கொடுத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணி தனக்குரிய பிரதிநிதித் துவத்துடன் சட்டசபைக்கு செல்கிறது.

பன்முகத்தன்மை கொண்ட இந்த ஜனநாயகக் களத்தில், கலைஞரின் மறைவுக்குப் பிறகு தி.மு.க என்ற இயக்கத்தைக் கட்டிக்காத்து, வழிநடத்தி, மக்களிடம் நம்பிக்கையை விதைக் கும் வகையில் 12 ஆயிரம் கிலோமீட்டருக்கு அதிகமாகப் பயணித்து, 6 கோடி வாக்காளர் களைச் சந்தித்து, வாக்குறுதிகளை அளித்து, அவர்களின் பேராதரவுடன் வெற்றிபெற்று, தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியிருக் கிறார் மு.க.ஸ்டாலின்.

குறிப்பாக, தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்தும் சமூகநீதிக்கு ஆதரவானவை. மத நல்லிணக்க சிந்தனை கொண்டவை. சமத்துவக் கொள்கை கொண்டவை. அந்தக் கூட்டணியை அரவணைத்து -ஒருங்கிணைத்து, மக்களின் நம்பிக்கையைப் பெற்று, இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

தமிழ்நாட்டின் அரசியல் -சமூகத்தன்மைக்கு நேரெதிரான சித்தாந்தங்களைக் கொண்ட கட்சியை எதிர்கொண்டு வென் றுள்ளது தி.மு.க. கூட்டணி. இந்த வெற்றி, இன்றைய சூழலில் மிகவும் அவசியம். அந்த வெற்றிக் கூட்டணிக்கு தலைமை தாங்கி, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நக்கீரன் நேரில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.

பதவியேற்புக்கு முன்பாகவே, கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டிய கடுமையான சவாலை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த வேளையில்தான் நக்கீரன் அவரை சந்தித்து, இந்தக் கடும் போராட்டக் களத்தில் தமிழகம் வெற்றிபெற வேண்டும் என்பதை வலியுறுத்தியது.

மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை நக்கீரன் என்றும் வரவேற்கும். அதேவேளையில், இதழியல் அறம் சார்ந்து ஆட்சியாளர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டி, என்றும் மக்களின் குரலாக ஒலித்திடும்.

-ஆசிரியர்