ஒருபக்கம் பொருளாதாரம் பாதாளத்துக்குப் போய்க்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பெட்ரோல், டீசல் விலை விண்ணைநோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு சமையல் கேஸ்விலை இரண்டு தவணையாக 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 50 ரூபாய் கூடியுள்ளது. மக்களோ கைகளைப் பிசைந்தபடி திரிசங்கு சொர்க்கத்தில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சில வாரங்களாவே பெட்ரோல், டீசலின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறுமுகம் கண்டுவருகின்றது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 90.96 காசுகள் ஆகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ 84.96 காசுகளாகவும் சென்னையில் விற்கப்படுகின்றது. ஆனால் அதேவேளையில் தலைநகர் டில்லியில் பெட்ரோல் ரூ.87.85 காசுகளும், டீசல் ரூ.78.05 காசுகளும், கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.89.10 காசுகளும், டீசல் ரூ.81.61 காசுகளுக்கும் தமிழகத்தைக் காட்டிலும் குறைவாக விற்கப்படுகின்றது.
கடந்த 15 ஆண்டுகளாக கச்சா எண்ணை விலை ஏற்ற இறக்கத்திக்கு ஏதுவாக பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்ய பெட்ரோலிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று காரணமாக பெட்ரோலியம் விலை ஏற்றமடையாமல் இருந்தது. இந்த நிலையில் ஜூலை மாதம் முதல் தளர்வுகள் காணப்பட்டதால் படிப்படியாக எரிபொருள் விலை ஏறத்துவங்கியது.
தற்போது பட்ஜெட்டில் சேர்க்கப்பட்ட சிறப்பு செஸ் வரி காரணமாக பெட்ரோல் விலை போகும் வேகத்தைப் பார்த்தால் விரைவிலேயே நூறு ரூபாயை எட்டுவதற்கு அதிக நாளாகாதெனத் தெரிகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் பெட்ரோலியத்தின் விலை ஏறுமுகமாக இருந்தாலும், விரைவில் தேர்தல் நடக்கவிருக்கும் அசாமில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையில் ஐந்து ரூபாய் குறைத்து வழங்க வசதியாக, பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் செஸ் திரும்பப் பெற்றுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் காரணமாக இருக்கும் அதிருப்தியை, இந்த விலைக்குறைப்பு மாற்றுமா என்பது சந்தேகம்தான்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பொருளாதார வல்லுநர் அருணாச்சலம் ""சர்வதேச அளவில் பெட்ரோலிய விலை குறைந் துள்ளது. அதை உத்தேசித்து, மேலும் விலை குறையக்கூடாது என்பதற்காக பெட்ரோலியம் சப்ளை செய்யும் நாடுகள் குறை வான உற்பத்தியே செய்துவருகின்றன. தடால்புடால் வரிகளைக் குறைத்து, மத்திய, மாநில அரசுகள் நினைத்தால் கண்டிப்பாக விலையைக் குறைக்கலாம். கொரோனா காலத்தில் அரசுக்கு ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறை, பட்ஜெட்டில் விழுந்திருக்கும் துண்டுகளைச் சமாளிக்கவே இந்த விலையேற்றம் நடக்கிறது'' என்றார்.
ஆவடியைச் சேர்ந்த அகஸ்டின் ""நான் மெடிக்கல் ரெப்பா வேலை செய்யுறேன். தினமும் பைக்கிலதான் கிளையண்டுகளைப் பார்க்கப்போவேன். தினம் தினம் பெட்ரோல் விலை ஏறிட்டே போகுது. அந்த சலுகை இந்த சலுகைனு சொல்லி ஒருபக்கம் அள்ளிக் கொடுத்துட்டு, மறுபக்கம் கூடுதல் செஸ்வரின்ற பேர்ல வசூல் பண்றது எந்த வகையில நியாயம். இதேரேஞ்சுல போனா நாங்க சைக்கிளில் போய்தான் க்ளையண்டுகளைப் பார்க்க முடியும்'' என்றார்.
நம்மிடம் பேசிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அசோக்குமார், ""பெட்ரோல், டீசல் விலையேற்றம் ஒரு ரூபாய் தானேனு சாதா ரணமா நினைக்கலாம். ஆனா மறைமுகமா மக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் விலையேறும் என்பதை பார்க்கவேண்டும், பெட்ரோல் டீசல் விலை ஏறினால் காய்கறி, மளிகைப் பொருட்கள், பால் முதல் கொண்டு அனைத்தும் விலையேறும். வாகனக் கட்டணம் அதிகரிக்கும். அவசரத் தேவைக்கான ஆட்டோ, டாக்ஸி, பேருந்துக் கட்டணம், லாரி வாடகை என எல்லாமே கணிசமாக விலையேறும். அந்த சுமை நேரடியாக மக்கள் தலையில்தான் விழும்''’என்றார் ஆதங்கமாக.
பல்லாவரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தண்டாயுத பாணியோ, ""அரசாங்கம் அது பாட்டுக்கு பெட்ரோல் விலை ஏத்துது, பெட்ரோல் விலை ஏற்றத்தால வாடகைய கூட்டிக் கேட்டா மக்கள் ஆட்டோகாரங்கள திட்றாங்க. நாங்க என்ன செய்றது'' என அலுத்துக்கொண்டார்.
ஏற்கெனவே கொரோனா மக்களில் ஒருபிரிவினரின் வேலையைப் பிடுங்கிவிட்டது. நிறைய பேருக்கு சம்பளக் குறைப்பு, வேலைவாய்ப் பின்மை என மொத்த இந்தியாவுமே திணறிக்கொண்டிருக்கும்போது, சலுகை தராவிட் டாலும் பரவாயில்லை. இது போல அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றத்துக்குக் காரணமாகும் பெட்ரோலியப் பொருட்களை விலையேற்றிக் கொண்டுதான் போகவேண்டுமா? மத்திய- மாநில அரசுகள்தான் யோசிக்கவேண்டும்.