வாசுதேவன், பெங்களூரு

கிரிக்கெட் மைதானத்தில் 100 ரன்கள், அரசியல் களத்தில் ஆட்சியின் 100 நாட்கள்?

கிரிக்கெட்டில் 100 ரன்கள் என்பது தொடர்ச்சியான ஆட்டத் தில் எட்டப்படும் உயரம். அதற்குப் பல ஓவர்கள் தேவைப்படும். அதன்பிறகு மேலும் அதிக ரன்களைக் குவிப்பது என்பது பேட்ஸ்மேனின் தாக்குப்பிடிக்கும் திறமையைப் பொறுத்தது. 100 எடுத்தாலே கிரிக்கெட்டில் சாதனைதான். ஆட்சியின் 100 நாட்கள் என்பது முதல் ஓவரில் எடுக்கப்படும் ரன்கள் போல. ரன் ரேட் பிரமாதமாகத் தெரியும். ஆட்சி எனும் ஆட்டத்தை கவனிக்கும் மக்களின் எதிர்பார்ப் பும் கூடுதலாக இருக்கும். அதன்பிறகு, ஒவ்வொரு ஓவரிலும் அதே ரன் ரேட்டை மெயின் டெய்ன் பண்ணவேண்டும். கிரிக்கெட்டில் ஒரு மேட்ச்சில் ஒரு 100 எடுத்தாலே மக்கள் கொண்டாடுவார்கள். விருதுகள் -பரிசுகள் குவியும். ஆட்சியின் 5 ஆண்டு மேட்ச்சில் ஏறத்தாழ 18 முறை 100-ஐ கடந்தாக வேண்டும். அதை சரியாகக் கடந்தாலும், மக்கள் மனநிலை என்ன என்பது அடுத்த தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

Advertisment

"மாடுகளை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்' என அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது குறித்து?

மனைவியே ஆனாலும் அவரது அனுமதியின்றி கணவன் தன் விருப்பத்துக்கு நிர்பந்தித்தால் அது பாலியல் கொடுமைதான் என நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளை வழங்கியுள்ள நிலையில், "மனைவியை கணவன் நிர்பந்தப்படுத்துவது பாலியல் குற்றமாகாது' என சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது. சட்டங்கள் ஒன்றுதான். நீதியின் பார்வை மாறுபடுவது வழக்கம். வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் பல கருத்துகளைத் தெரிவிப்பார் கள். அது அவர்களின் சட்ட உரிமை. இறுதி உத்தரவில் -தீர்ப்பில் என்ன தெரிவிக்கிறார் கள் என்பதே செயல்பாட்டுக் குரியது. எனினும், இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், நீதிமன்றத்தில் வெளிப்படும் கருத்துகளே தீர்ப்புகள் போல தொலைக்காட்சிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் விவாதங்க ளாகிவிடுகின்றன. மாடுகளை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்கிற அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கருத்தும் விவாதப் பொருளாகிவிட்டது. இந்தியாவின் தேசிய விலங்காக இருப்பது புலி. அதனை பசுத்தோல் போர்த்திய புலியாக மாற்ற விரும்புகிறவர்கள் இந்தக் கருத்துக்கு ஆதரவாக வரிந்து கட்டுவார்கள். அப்படிப்பட்ட வர்களிடம், எருமை மாட்டை தேசிய விலங்காக அறிவிக்கலாம் என்று சொல்லிப் பாருங்கள். "மாடு வேண்டாம், புலியே இருக்கட்டும்' என்பார்கள்.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

Advertisment

அரசு சொத்துக்களை விற்கும் நிலைக்கு பொருளா தாரம் தள்ளப்பட என்ன காரணம், அதற்கு பொறுப்பு யாராக இருக்கும்..?

உலகமயம் -தாராளமயம் என்கிற பொருளாதாரக் கொள்கையே தனியார் மயத்திற்கான வாசல்தான். ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியா அந்த வாசலை அகலமாகத் திறந்துவிட்டது. நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி என காங்கிரஸ் -பா.ஜ.க. பிரதமர்களின் ஆட்சியில் இந்தியாவின் பொதுத்துறை நிறு வனங்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து, தனியார்வசத்திற்கு மெல்ல மெல்ல மாறிவருகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கை பல புது துறைகளை உருவாக்கியுள்ளது. திறமைக் கான வேலை வாய்ப்பை அளிக்கிறது. ஆனால், சமச்சீரான வளர்ச்சியையும் தரவில்லை. பாதுகாப்பான சூழலையும் உருவாக்கவில்லை. அதன் விளைவுதான், அரசு சொத்துகளை விற்பது -ஏலம் விடுவது -குத்தகைக்கு விடுவது என்ற நிலைமையை நோக்கிய பயணம். காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளால் இதற்கு சில கடிவாளங்கள் போடப்பட்டன. பா.ஜ.க. ஆட்சியில் தனியார்மயம் என்பது தறிகெட்ட குதிரையாகப் பாய்ந்துகொண்டிருக்கிறது.

mm

சி. கார்த்திகேயன், சாத்தூர்

திரையரங்குகள் திறப்பு பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தவில்லையே?

மாற்றம் ஒன்றே மாறாதது. நாடகக் கொட்டகைகளை திரையரங்கங்கள் விழுங்கின. திரையரங்குகளை டி.வி., வீடியோ, யூ-டியூப் உள்ளிட்டவை விழுங்கத் தொடங்கிய நிலையில் கொரோனா அவற்றை முழுமை யாக விழுங்கிவிட்டது. கையடக்க செல்பேசியிலோ, ஹோம் தியேட்டரிலோ தங்கள் வசதிக்கேற்ப படங்களைப் பார்க்கப் பழகிவிட்டது இளைய தலைமுறை. தியேட்டர்களை நோக்கிச் செல்லவேண்டிய அவசிய மில்லாமல் தங்களுக்குப் பிடித்த நாயகன் -நாயகியைப் பார்த்துவிடுகிறார்கள். ஓ.டி.டி. தளம் சினிமாவின் பிரம்மாண்ட பிம்பத்தை சித்திரக்குள்ளனாக்கி விட்டது. “"என்ன இருந்தாலும், தியேட்டரில் பார்ப்பதுபோல இருக்குமா?'” என்கிற பெருசுகளும், பெருசுகளைப் போன்ற மனநிலை கொண்டவர்களும் திரைத்துறை மீது ஆர்வம் கொண்டவர்களும் திரையரங்குகளை விரும்புகிறார்கள். ஓ.டி.டி. யுகத்தில், தியேட்டர் களில் டிஜிட்டல் வெர்ஷனில் ரிலீசாகி யுள்ள எம்.ஜி.ஆர் இயக்கி -நடித்த "உலகம் சுற்றும் வாலிபன்' திரையரங்க உரிமையாளர்களுக்கு வாழ்வளிக்கிறது. பாலியஸ்டர் காலத்திலும் பட்டுப்புடவை அழகு தானே!