பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118
பத்திரிகைகள் கேள்விகள் கேட்பதன் மூலம்தானே அரசு நிர்வாகத்தில் ஏற்படும் தவறுகளை சீர் தூக்கி நேர்மையான முறையில் ஆட்சி செய்ய முடியும்? அப்புறம் ஏன் ஆட்சியாளர்கள் பத்திரிகைகள் மீது எரிந்து விழுகிறார்கள்?
1991-ல் ராஜீவ்காந்தி படுகொலையைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் வீசிய அனுதாப அலையினால் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபோது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்று சொல்லக்கூடிய அளவில் வலுவான எண்ணிக் கையில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. அப்போது எதிர்க்கட்சிக்குரிய பணியை ஆற்றவேண்டிய நிலையில் இருந்தவை பத்திரிகைகளே! அந்தப் பணியை முழுமையாகவும் துணிவாகவும் செய்ததில் முதலிடம் நக்கீரனுக்குரியது. அதற்காக அது கொடுத்த விலை அதிகம். ஆசிரியர் கைது, அச்சகர் அய்யா கணேசன் உயிர்ப்பலி, நிருபர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல், மின்சாரம் துண்டிப்பு, பத்திரிகை இதழ்கள் எரிப்பு, முகவர்களுக்கு மிரட்டல் என 5 ஆண்டுகாலமும் பெண் ஹிட்லரைப் போல ஆட்சி நடைபெற்றது. ஆட்சிக்கு எதிராக எழுதிய பத்திரிகைகள் மிரட்டப்பட்டன. 2001-ல் நடைபெற்ற ஜெ. ஆட்சியிலும் நக்கீரன் மீது பொடா சட்டம் பாய்ந்தது. ஆசிரியர் 251 நாட்கள் சிறைப்பட்டார். 2011-ல் அமைந்த ஆட்சியில், நக்கீரன் அலுவலகம் மீது கொலைவெறித் தாக்குதலை அமைச்சர்களே முன்னின்று நடத்தினர். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. பெட்ரோல் குண்டு வீசினார். ஜனநாயகம் தருகின்ற அதிகாரத்தை சர்வாதிகாரமாக நினைத்துக்கொள்ளும்போது உண்மையை ஓங்கி ஒலிக்கும் பத்திரிகைகள் மீது ஆட்சி யாளர்கள் பாய்ச்சல் நடத்து கிறார்கள். கலைஞர் ஒரு பத்திரிகையாளர் என்பதால் அவரது ஆட்சியில் அ.தி.மு.க. அளவுக்கு மிரட்டல்கள் இல்லை. ஆனாலும், தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் நக்கீரன் மீது வழக்குகள் பாய்ந்தன. எல்லா ஆட்சியிலும் போடப்பட்ட வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொண்டு வெற்றி கண்டது நக்கீரன்.
மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை
வாழப்பாடி? எடப்பாடி?
வாழப்பாடி ராமமூர்த்தியும் எடப்பாடி பழனிசாமியும் தங்கள் ஊர்ப்பெயரை ஒவ்வொரு ஊர்க்காரரையும் உச்சரிக்க வைத்தவர்கள். தேசியக் கட்சி யில் இருந்து மத்திய அமைச்ச ரானவர் வாழப்பாடி ராமமூர்த்தி. பின்னர் அவர் சொந்தக் கட்சி ஆரம்பித்து, தன்னளவில் அரசியல் வெற்றியை நிலை நாட்டினார். எடப்பாடி பழனிசாமி மாநிலக் கட்சியில் பொறுப்புகளைப் பெற்று, எதிர்பாராத சூழலில் முதல்வர் பதவியை அடைந்தவர். அதி காரத்தை வைத்தே கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவர். ஆட்சி போனாலும் எதிர்க்கட்சி அந்தஸ்துடனான கட்சி இருக் கிறது எடப்பாடிக்கு.
த.சிவாஜிமூக்கையா, தர்காஸ்
திராவிடக் கட்சிகளின் மலைக்க வைக்கும் விசயம்தான் என்ன?
சராசரியாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டு கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்கு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களின் உறவுகள் -சொந்தபந்தங்கள் -நண்பர்கள் என எல்லாத் தரப்பிலும் இதே நிலைதான். இரண்டு கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் வேலைவாய்ப்பு -நலத்திட்ட உதவிகள் என ஏதேனும் பலன்பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். வலுவான குடும்ப அமைப்புகளைக் கொண்டது இந்திய சமுதாயம். அந்தக் குடும்பங்களில் வலுவாக இருக்கின்றன தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளும்.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
இந்த ஆண்டு கோடை சுற்றுலாத்தலங்களையும் இந்தக் கொரோனா மூடச் செய்துவிட்டதே?
கடந்த ஆண்டும் இதே காலகட்டத்திலும் இதேநிலைதான். ஒரே ஊரில் வேலை -படிப்பு என்பவர்களுக்கு சின்ன அளவில் மன உற்சாகத்தை ஏற்படுத்துபவை சுற்றுலாத் தலங்கள். அது சிந்தனைக்கும் செயலுக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும். தமிழ்நாட்டில் பனிமலை -எரிமலை தவிர அனைத்து வகையான சுற்றுலாத்தலங்களும் உண்டு. கோடையில் அவை கொண்டாட்டமாக இருக்கும். ஒரு வைரஸ் அத்தனை கொண்டாட்டத்தையும் முடக்கிவிட்டது.
லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)
ஜடேஜாவின் அந்த 36 எப்படி?
ஒரே ஓவரில் அவர் விளாசியது அசத்தல். அதைவிட கொரோனா காட்டிய வேகம் படு அசத்தல். ஐ.பி.எல். ஆட்டத்தையே முடக்கிவிட்டது.
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டிசிவிர் மருந்தை கள்ளத்தனமாக விற்பனை செய்ததாக அரசு மருத்துவமனை கம்பவுண்டர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாரே?
பயிர்கள் நடுவே களைகளும் வளர்கின்றன. கொரோனா நோயாளிகளுக்கு தங்கள் உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை அளிக்கிறார்கள் முன்களப்பணியாளர்களான டாக்டர்களும் செவிலியர்களும். நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு -பல மணிநேரம் க்யூவில் நின்று அதனை வாங்கவேண்டிய நெருக்கடியான சூழலில் இப்படியும் சிலர் அதனை கள்ள மார்க்கெட்டில் விற்று லாபம் சம்பாதிக்கிறார்கள். ஒரு கம்பவுண்டரால் மட்டும் இதைச் செய்யமுடியாது. இதற்கான நெட்வொர்க் பெரிதாக இருக்கும். அதனை மறைக்க, கம்பவுண்டரைக்கூட பலிகடா ஆக்கியிருக்கலாம்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு
கமல், குஷ்பு, ஸ்ரீப்ரியா, சினேகன் என சினிமா துறை சார்ந்தவர்கள் தோல்வியடைந்திருக்கிறார்களே?
கவலைப்படுகிறீர்களா? உதயநிதியையும் விஜய் வசந்த்தையும் தமிழக மக்கள் அமோகமாக வெற்றிபெற வைத்திருப்பதைப் பாருங்கள்.