வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
இடதுசாரிகளின் கொடுங்கோண்மை ஆட்சியின் மறுவடிவம்தான் மேற்குவங்கத்தில் நடைபெறும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி என்கிறாரே மோடி?
சொல்லியிருப்பவர் யார்? குஜராத்தில் அரசின் ஸ்பான்சராக நடைபெற்ற மதவெறி கொலை- கொடூரத்தின் மறுவடிவமாக இந்தியாவை ஆட்சி செய்வதில் முனைப்பாக இருப்பவர்.
அ.யாழினிபர்வதம், சென்னை-78
அ.தி.மு.கவும் தி.மு.கவும் கூட்டணிக் கட்சிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?
சீட்டு கணக்குதான் காரணம். இப்பவே பேச ஆரம்பித்தால், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு அதிருப்தி ஏற்படலாம். அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிறோமா- இல்லையா எனப் புரியாமல் இருக்கும் கட்சிகளுக்கு, தங்களுக்கு என்ன மதிப்பு என்பது அம்பலமாகிவிடலாம்.
த.சிவாஜிமூக்கையா தர்காஸ்
மேடைப் பேச்சை வளர்த்துக்கொள்ள என்ன மாதிரியான பயிற்சிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்?
மேடைப்பேச்சு களில் பல வகை உண்டு. அதில் அரசியல் மேடைப் பேச்சுக்கு தனி இலக்கணம் வகுத்தவர் அறிஞர் அண்ணா. அவரைத் தொடர்ந்து நாவலர் நெடுஞ் செழியன், சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத், பேராசிரியர் அன்பழகன், கலைஞர் மு.கருணாநிதி எனப் பலர் தங்கள் சிந்தனைகளை சொற்சித்திர மாக்கி மக்களைக் கவர்ந்தனர். பின்னர், புரட்சிப்புயல் வைகோ கலக்கினார். அ.தி.மு.கவில் காளிமுத்து அசத்தினார். காங்கிரஸ் கட்சியிலும் சொல்லின் செல்வர் குமரி அனந்தன், தமிழ்க் கடல் நெல்லைக் கண்ணன், தற்போதைய பீட்டர் அல்போன்ஸ் என நிறைய பேர் உண்டு. இடதுசாரி இயக்கங்களின் மேடைப் பேச்சு வலிமையை தா.பாண்டியன் குரலில் இப்போதும் கேட்கலாம். இளைய தலைமுறையினருக்கு சீமான் பேச்சில் ஆர்வம். ஒவ்வொருவரும் ஒரு பாணியைக் கடைப்பிடிப்பது வழக்கம். எந்த பாணியாக இருந்தாலும் உண்மையின் சாரமும், கொள்கையின் வலிமையும் வெளிப்படும்போதுதான் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும். பேச்சை விட செயல்களும் அணுகுமுறை களுமே இன்றைக்கு அதிகளவில் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. அதன் வலிமை எத்தகையது என்பதை, கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினைக் கைப்பிடித்து தன் வீட்டுக்குள் அழைத்துச் சென்ற கட்சியின் மூத்த தொண்டர் பத்தமடை சண்முகத்தின் உரிமை கலந்த உணர்வின் வெளிப்பாடு காட்டுகிறது.
கே.கே.பாலசுப்ரமணியன், கோவைபுதூர்
தி.மு.க- அ.தி.மு.க இரண்டுக்கும் மாற்று எனக் கூறும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனின் அணுகுமுறை, விஜயகாந்தின் தே.மு.தி.க போல ஆக்கிவிடுமா?
கறுப்பு எம்.ஜி.ஆர் எனச் சொல்லிக்கொண்ட விஜயகாந்த்தும், எம்.ஜி.ஆர். மடியில் வளர்ந்ததாகச் சொல்லும் கமலும், தாங்கள் எம்.ஜி.ஆர். இல்லை என்ற உண்மையை உணர்ந்தவர்கள். தேர்தல் நேரத் தேரோட்டம் நடத்தி தங்களுக்கான மகிழ்ச்சியைத் தேடிக் கொள்வார்கள்.
_________
தேர்தல் களம்
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72
சென்னை கடற்கரையில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டது எப்போது?
தங்கப் பொடி தூவிய ராஜபாட்டை போல மணல்பரப்பால் நீண்டிருக்கும் சென்னை கடற்கரை, தேர்தலுக்காக மட்டுமல்ல. இந்திய விடுதலைக்காக, இந்தி ஆதிக்கத்திலிருநது தமிழைக் காக்கும் மொழிப்போருக்காக, கட்சிகளின் பலம் காட்டும் பேரணிக்காக, மதபோதகர்களின் அல்லேலுயா பிரச்சாரத்திற்காக எத்தனையோ விதங்களில் பயன்பட்டிருக்கிறது. எனினும், தேர்தல் நேரத்தில் கடற்கரையில் நடைபெறும் பொதுக்கூட்டமும் அதற்கு கூடும் மக்களின் அளவும் அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது வழக்கம். எமர்ஜென்சி எனும் நெருக்கடி நிலைக்கு எதிராக கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றிய தி.முக., அதனைப் பொதுமக்கள் முன்னிலையில் உறுதிமொழியாக எடுத்தது கடற்கரையில்தான். அதனாலேயே தி.மு.க. ஆட்சியை பிரதமர் இந்திராகாந்தி கலைத்தார். 1980 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தி.முக.-காங்கிரஸ் கூட்டணி அமைந்தபோது, கடற்கரையில் கலைஞர் தலைமையில் நடந்த கூட்டத்தில்தான், நெருக்கடி நிலையைக் கொண்டு வந்ததற்காக வருத்தம் தெரிவித்துப் பேசினார் இந்திராகாந்தி அம்மையார். 1980 சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றிபெற்று முதல்வரான எம்.ஜி.ஆரின் பதவியேற்பு நிகழ்வு நடந்தது கடற்கரையில்தான். கடற்கரையில் திலகர் கட்டம் எனப் பெயர் பெற்ற (இன்றைய கண்ணகி சிலை) பகுதியில், அறிஞர் அண்ணா ஆட்சிக்காலத்தில் சீரணி அரங்கம் அமைக்கப்பட்டது. நாட்டு நலப்பணிக்காக மக்கள் தங்களை அர்ப்பணித்துக்கொள்ளும் வகையில், அண்ணா உருவாக்கிய மக்கள் தொண்டர்களின் குழுவுக்கு சீரணிப் படை எனப் பெயரிடப்பட்டது. தமிழகத்தின் பல ஊர்களிலும் அவர்கள் பல பணிகளை மேற்கொண்டனர். சென்னை கடற்கரையில், சீரணி அரங்கம் எனும் நிரந்தர பொதுக்கூட்ட மேடையை உருவாக்கினர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க, அ.தி.மு.க. என தேசிய-மாநில கட்சிகள் பலவும் அங்கே தேர்தல் நேரப் பொதுக்கூட்டங்களை நடத்தின. தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட வைகோ தனது பலத்தைக் காட்டும் வகையில் பேரணி நடத்தி, விடியும்வரை பொதுக்கூட்டம் நடத்தியதும் சீரணி அரங்கில்தான். கொட்டும் மழையில், கலைஞரின் கலையுலகப் பொன்விழாவை நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த் பிரம்மாண்டமாக நடத்தினார். ஜெ ஆட்சியில் கண்ணகி சிலை அகற்றப்பட்டபோது, சீரணி அரங்கில் கண்டனக் கூட்டம் போட்டு நீதி கேட்டார் கலைஞர். அதையடுத்து சில நாட்களில், அண்ணா ஆட்சிக்காலத்து சீரணி அரங்கத்தை இடித்து தரைமட்டமாக்கியது அண்ணா தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான அரசு.