மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்
""எங்களுக்கு களின்னா ஸ்டாலினுக்கு மட்டும் பிரியாணியா'' என கேட்கிறாரே எடப்பாடி?
கலைஞர் முதல்வராக இருந்தபோது ஜெயில் கைதிகளுக்கு சிக்கன் போட்டார். ஸ்டாலின் முதல்வரானால் பிரியாணி போடுவார் என்று எதிர்பார்க்கிறார்களோ!
ம.ரம்யா ராகவ், குப்பம் -ஆந்திரா
அதிகாரிகள், ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் இவர்கள் பெறுகின்ற லஞ்சப் பணத்தில் யாருக்கு முதலிடம்?
அரசியல்வாதிகள் ஆட்சியாளராகும்போது அவர்களுக்கு நிர்வாகத்தில் துணைநிற்கும் அதிகாரிகள் போட்டுக்கொடுக்கும் வியூகங்களின்படி லஞ்சப் பணம் பல வகைகளிலும் கொட்டுகிறது. ஊழல் விதையை விதைப்பவர்கள் அதிகாரிகள்தான் என்றாலும், அவர்களுக்கு கிடைப்பது கூலி. அமோக அறுவடை செய்பவர்கள் ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள்.
வாசுதேவன், பெங்களூரு
அந்தக் காலத்திய பேனா நண்பர்கள், இந்தக் காலத்திய வாட்ஸ்ஆப், பேஸ் புக் நண்பர்கள் ஒப்பிடுக?
பேனா நட்புகளின் தொடர்புக்கு கால இடைவெளி உண்டு. முகம் காண்பது வெகு அரிது. அன்பும் நட்புமே அப்போது முதன்மையாக இருந்தது. தற்போதைய வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் நட்பு அதிகவேகமாக பரவுகிறது. உடனடியாக ஈர்த்துவிடுகிறது. நீடித்து நிலைப்பதும் உண்டு. நம்பிக்கை வைக்கிற வேகத்திலேயே மோசடிக்குள்ளாகி, வாழ்க்கையையே தொலைப்பதும் உண்டு.
ட.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் தேனி 625531
""கொரோனா தடுப்பு மருந்து மீது மக்களுக்கு நம்பிக்கை வருவதற்கு பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முதலில் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று பீகார் காங். தலைவர் அஜீத் ஷர்மா கூறியுள்ளது குறித்து..!?
சிங்கப்பூர் பிரதமர், இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்டோர் முதலில் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக் கிறார்கள். இந்திய பிரதமர், கொரோனாவை விரட்ட கைத்தட்டச் சொல்லி, விளக்கேற்றச் செய்து, "கோ.. கொரோனா.. கோ' என அரிய தொழில்நுட் பங்களைக் கையாண்டார். பலிக்காத நிலையில்... அவசரமாக தடுப்பூசி அறிமுகப்படுத்துகிறது என்கிறார்கள் மருத் துவர்கள். ஊசி போட்டுக் கொள்ள வேண்டாம். உரிய விளக்கத்தை உண்மைத் தன்மையுடன் பிரதமர் அளித்தால் போதும்.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து பிசிசிஜ தலைவர் சவுரங் கங்குலிக்கும் பிஜேபி மறைமுகமாக அரசியல் அழுத்தம் தந்ததாமே?
மேற்கு வங்கத்தில் மம்தாவை எதிர்க்க மண்ணின் மைந்தராக சவுரங் கங்குலியைக் கணக்கு போட்டார் அமித்ஷா. ரஜினிக்கு கிட்னி மாற்று சிகிச்சை, கங்குலிக்கு இருதய சிகிச்சை என பா.ஜ.க. வலையிலிருந்து வி.வி.ஐ.பி.கள் காப்பாற்றப் படுகிறார்கள்.
செந்தில்குமார் எம்., சென்னை-78
""சாதி, மத சண்டைகள் இல்லாமல் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது'' என எடப்பாடி பெருமையாக சொல்கிறாரே?
அவர் மட்டுமல்ல, நீங்களும் நானும்கூட பெருமையுடன் சொல்லலாம். அந்தப் பெருமையை சிதைக்கும் வகையிலான கட்சிகள் கால்ஊன்ற துணை நிற்கிறார் எடப்பாடி என்பது பெருமைக் குரியதல்ல.
_________
தேர்தல் களம்
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.
மின்னணு தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டில் அமோக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற கட்சி எது?
வாக்குச்சீட்டு முறையில் இரண்டு சின்னங்களில் முத்திரை விழுந்து, செல்லாத வாக்குகளின் எண்ணிக்கை அதிகமானபடியே இருந்தன. அத்துடன், வாக்குப்பெட்டி யைக் கடத்துவது போன்ற முறைகேடு களும் தொடர்ந்த நிலையில்தான், வாக்குச்சீட்டுக்கு மாற்று முறைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டன. அதன் விளைவாக பெங்களூருவில் உள்ள "பாரத் இன்ஜினியரிங் லிமிடெட்' மூலம் தற்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டன. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் வடக்கு பருவூர் தொகுதியில் சோதனைமுறையில் சில வாக்குச்சாவடிகளில் 1982-ல் மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. அதன்பின் 1989-ல் டெல்லி, ராஜஸ் தான், மத்தியப்பிரதேச மாநிலங்களில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மின்னணு இயந்திரங்கள் பயன் படுத்தப்பட்டன. இதன் நம்பகத்தன்மை குறித்து வி.பி.சிங் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். எனினும், அந்தத் தேர்தலில் வி.பி.சிங்தான் பிரதமர் ஆனார். ஒரு மாநிலத்தில் முதன்முறையாக முழுமையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டது என்பது 1999-ல் நடந்த கோவா சட்டமன்றத் தேர்தல்தான். அதில், ஆளுங்கட்சியான காங்கிரசே மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. தமிழ்நாட்டில் 1998-ஆம் ஆண்டு தேர்தலில் சென்னையின் மூன்று தொகுதிகளின் சில வாக்குச் சாவடிகளில் மின் னணு இயந்திரம் பயன்படுத்தப் பட்டது. அந்தத் தொகுதி களில் தி.மு.க. வெற்றிபெற்றது. 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் முழுமையான அளவில் மின்னணு இயந்திரம் பயன் படுத்தப்பட்டன. அதில் ஆளுங்கட்சி களான அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மொத்தமாகத் தோல்வியடைந்தது. தி.மு.க.-காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சி கூட்டணி முழு வெற்றி பெற்றது. தேர்தலில் தோல்வி அடையும் கட்சித் தலைவர்கள் மின்னணு இயந் திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவது உண்டு. மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, பொதுமக்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந் திரத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டது.