விடுதலைப் புலிகளுக்கு தடை ஏன்?
விடுதலைப் புலிகள் இயக்கத்தால்தான் இந்தியாவில் பயங்கரவாதம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறதா?
குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்றல்லவா சுதந்திரநாளில் பிரதமர் தேசியக்கொடி ஏற்றுகிறார். சுதந்திரநாளைச் சுதந்திரமாகக் கொண்டாட சுதந்திரம் இல்லாமல் போனது ஏன்?
இதற்கெல்லாம் யார் காரணம்?
டில்லிக்கு ஏ.கே.-47 துப்பாக்கிகளை ஏந்திக் கொண்டு விடுதலைப்புலிகளா கடல் கடந்து வருகிறார்கள். இந்தியாவில் தொடர்ந்து நடந்து நிகழ்ந்த பயங்கரவாத நிகழ்வுகளுக்கு யார் காரணம்? நாடு முழுக்க நடந்த வெடி குண்டுத் தாக்குதல்களுக்கு யார் காரணம்?
1992-ல் அத்வானி தலைமையில் பாபர் மசூதி தகர்க்கப்பட்ட சத்தத்தின் எதிரொலிதான் பம்பாயில் வெடிகுண்டாகக் கேட்டது. 900 பேர் பிணமானார்கள். 1998-ல் கோவையில் ரத்தக்களறியை உண்டாக்கியது யார்? 2002-ஆம் ஆண்டு காந்தி பிறந்த குஜராத் மண் மயானக் காடாக மாறியது யாரால்?
இத்தனை பயங்கரவாத நிகழ்வுகள், இத்தனை குண்டு வெடிப்புகள், இத்தனை கோரக் கொலைகள், இத்தனை பிணங்கள், இத்தனை ரத்தம்... இவற்றில் எதற்காவது, என்றாவது விடுதலைப் புலிகள் காரணமாக இருந்தார்கள் என்று இந்த நாட்டில் இருக்கும் யாராவது சொல்ல முடியுமா?
(ராஜீவ்காந்தி கொலையில் விடுதலைப்புலிகளுக்குச் சம்பந்த மில்லை என்பதை சில-பல ஆதாரங்களோடு ஏற்கனவே விரிவாக சில அத்தியாயங்களில் சொல்லியுள்ளேன்)
இந்தியாவில் விடுதலைப்புலிகள் குண்டல்ல... ஒரு குண்டூசியைக் கூட வைத்ததில்லை.
"இதோ இந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த இவர்கள் இதைச் செய்தார் கள்'’என்று ஒரு சின்னப் பொடி யனைச் சுட்டிக்காட்ட இவர்களால் முடியுமா?
பிறகு ஏன், இங்கே விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு சுமார் 30 ஆண்டுகளாக தடை விதித்து வைத்திருக்கிறீர்கள்? பிடிவாதமாகத் தடை விதித்திருப்பதற்கு காரணம் என்ன?
அவர்கள் தமிழர்கள்.’
அந்தக் காரணம் போதுமே... வேறேன்ன வேண்டும்?
அவர்களைப் பயங்கரவாதிகள் என்று சொல்பவர்கள் பகுத்தறிவு சிறிதும் இல்லாதவர் களாக இருக்கவேண்டும் அல்லது பைத்தியக் காரர்களாக இருக்கவேண்டும். விடுதலைப்புலி கள் இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கு காந்தியைக் காட்டிலும் உண்ணாநோன்பிருந்து உயிர் விடவும் தெரிந்திருந்தது. உயிருக்கு மேலான விடுதலையை மீட்டெடுக்க ஆயுதம் ஏந்தி களத்தில் நின்று தங்கள் உயிரைத் தத்தம் செய்ய வும் தெரிந்திருந்தது. ஒரு பயங்கரவாத அரசுக்கு எதிராக பதினாறு வயதிலே, பதினெட்டு வயதிலே, வாழவேண்டிய வசந்தகாலத்தில் "தங் கள் தாய்மண்னின் மானத்தைக் காக்க, ‘மரண தேவனுக்கு வாழ்க்கைப்பட்டவர்கள் நாங்கள்' ’என்று இந்த வையகத்திற்குக் காட்ட சயனைடுக் குப்பிகளைக் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டிருந்த தியாக தீபங்கள் அவர்கள். உலகம் கண்டிராத லட்சிய வீரர்கள் அவர்கள்.
இங்கே இருக்கும் தமிழ்இன உணர்வு கொண்ட இளைஞர்கள், தமிழீழ விடுதலைக்கு ஆதரவாய் குரல் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படிக் குரல் கொடுத்தால் இலங்கையின் இறையாண்மைக்கு பங்கம் வந்துவிடும். இதனால் இலங்கையுடன் இந்தியாவுக்குள்ள நட்புறவு கெட்டு விடக்கூடாதே. அதனால் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை என்ற பெயரில் ஒட்டுமொத்த தமிழ் உணர்வு களுக்கே தடை விதித்து வைத்திருக் கிறார்கள். விடுதலைப்புலிகள் மீதான தடை என்பது அவர்கள் மீதான தடை அல்ல. தடை விதிக்க அணுஅளவு காரணமும் இல்லை.
விடுதலைப்புலிகள் இயக்கம் மீது இலங்கை விதிக்காத தடையை இந்தியா விதித்திருக்கிறதென்றால் அதற்கு என்ன பொருள்?
ஈழக் கொடுமைகளை இங்குள்ள தமிழர்கள் தெரிந்து, தெளிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கருத்துரிமைகளை, எழுத்துரிமைகளை மறுக்கிறார்கள்... தடுக்கிறார்கள். இந்திய அரசு எதையும் நிதானமாக நின்று சிந்தித்து பார்ப்பதாகத் தெரியவில்லை. "தமிழர்களைப் பற்றி நடுவண் அரசு கவலைப்படுவதில்லை' என்கிற எண்ணம் தமிழ் மக்களிடம் பரவலாக வந்துகொண்டிருக்கிறது. இந்த எண்ணம் வலுப்பெற்றுவிடுமானால், அது நல்லதல்ல என்பதைப் பொறுப்புள்ளவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஒருமுறை பிரான்ஸ் அதிபர் டெல்லிக்கு வந்தார். அவரை வரவேற்ற அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்... ""பிரான்ஸில் உள்ள சீக்கியர்கள் தலைப்பாகை அணிவது தடுக்கப் படுகிறது. எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் தலைப்பாகை அணிவதை எப்படி தடுக்க லாம்?''’எனத் தன் ஆற்றாமையை- ஆதங்கத்தை- அதிருப்தியை- வருத்தத்தை பிரான்ஸ் அதிபரிடம் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பிரதமராக இருப்பவர் இந்த நாட்டின் ஒவ்வொரு இன மக்களும் பாதிக்கப்படும்போது குரல் கொடுக்கவேண்டும், அதுதானே நியாயம். ஆனால் தனது இன மக்களின் தலைப்பாகை பற்றிக் கவலைப்பட்ட மன்மோகன்சிங், ஈழத்தில் தமிழர்களின் தலைகளைப் பற்றிக் கவலைப்பட வில்லையே! தமிழர்களின் தலையைப் பந்தாடிய இலங்கை அரசுக்கு ஆயுத உதவி, ராடார் கருவி, பண உதவி... இந்திய அரசு சார்பில் செய்தாரே மன்மோகன் சிங்.
இந்தியாவின் ஒருமைப்பாட்டை, ஒற்றுமையை கட்டிக் காக்கும் பொறுப்பில் உள்ளவர்கள், இப்படி இனம் பிரித்து, தரம் பிரித்து நடத்தும் நிலைமை ஏற்பட்டால் பாதிக்கப்படும் மக்கள் உள்ளத்தில் நாட்டின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை கெட்டுப்போய்விடும். இதை மட்டும் பெரிய இடத்தில் இருப்பவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் என்றும், எங்கும் எந்தவித மான பயங்கரவாதச் செயலிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஈடுபட்டதில்லை. இனியும் ஈடுபடும் எண்ணமுமில்லை. அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை. அவர்களை விட்டுவிடுங்கள்.
பிரதமர் பதவிக்குப் பெருமை சேர்த்த சிலரும் இருக்கிறார்கள். பிரதமர் பதவியில் அமர்ந்து தங்களுக்குப் பெருமை சேர்த்துக்கொண்டவர்களும் இருக்கிறார்கள். இதில் மன்மோகன் சிங் முதல் வகையைச் சேர்ந்தவர். நிரம்பக் கற்றறிந்த மேதை. அறிவார்ந்த மனிதர். ஆர்ப்பாட்டமில்லாதவர். அடக்கமானவர். எங்கள் பேரன்பிற்குரிய பேரறிஞர் அண்ணாவைப் போல மிகவும் எளிமையானவர். வெளிநாடு செல்கையில் வழியனுப்ப அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் திரள் வதைக்கூட விரும்பாதவர் நீங்கள். ஒரு வட்டச் செயலாளர் காரில் புறப்பட்டுச் செல்லும்போது, அவரைப் பின்தொடர்ந்து 40-50 கார்கள் செல்வதைப் பார்த்திருக்கிறேன்.
உலகத்திலேயே பதவியைப் போல லாகிரி வஸ்து வேறு எதுவும் இல்லை. பதவி மீது பற்று கொண்டவர்கள் அதுதரும் மயக்கமான சுகத்தில் மாட்டிக்கொள்வார்கள். கொள்கை கோட்பாடு, மானம், மரியாதை எல்லாத்தையும் இழந்துவிடுவார்கள். நல்லவர்களாக இருந்தவர் கள்கூட பதவிக்காக கெட்டுப்போயிருக் கிறார்கள். ஆனால் செங்கோட்டை அரியாசனம் மன்மோகன் சிங்கின் சிந்தையை மயக்கவில்லை.
ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியப் பிரதமர்களாக இருந்தவர்கள் ஏதோ ஒரு வகையில் ஈழத் தமிழர்களுக்கு இன்னலையே ஏற்படுத்தியிருக்கிறார்கள் ஒப்பந்தங்கள் மூலமும், உதவிகள் மூலமும்.
நல்லவரான மன்மோகன் சிங்கும் தனது பிரதமர் பதவிக் காலத்தில்... ஈழத் தமிழர்கள் விஷயத்தில் நல்லது செய்துவிட்டாரா என்ன?
மன்மோகன் சிங் என்ன செய்தார் என்பதைச்.....
(சொல்கிறேன்)