அயல்நாட்டில் கேட்ட அழகுத் தமிழ்!
பிரான்ஸ் சட்ட நிர்வாகப்படி செயல்படும் பிஜு தீவின் பிரதான உற்பத்தி சர்க்கரை. இனிப்பை உற்பத்தி செய்யும் தமிழ்த் தொழிலாளர்கள் பெரும்பாலானவர்களின் கூலி வாழ்க்கை என்னவோ கசந்தபடிதான் இருந்தது நான் பார்த்தபோது.
கரும்புத் தோட்டத்திலே’ என்ற பாடலில் பாரதி எழுதியிருந்தான். அதிலிருந்து சில வரிகள்...
நாட்டை நினைப்பாரோ? -எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே- அன்னை
வீட்டை நினைப்பாரோ?- அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங்
குரல்
கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள்
அழுதசொல்
மீட்டும் உரையாயோ?- அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டும்
போயினர்!
-ஃபிஜு தீவு இந்தியர்களின், குறிப்பாக கரும்புத் தோட்ட தொழி லாளிகளின் துயரங்களைக் கேள்விப் பட்டு, மனதில் அவர்தம் கஷ்டங் களை உணர்ந்து, அந்தத் தீவுக்குப் போகாமலே அவர்தன் வேதனை களை பாட்டில் வைத்தான் பாரதி.
நான் நேரிலேயே ஃபிஜு மக்களை பார்த்துப், பேசிப் பழகினேன். ஆமாம்....
Commonwealth Parliamentary Conference எனப்படும் உலக நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு 1981-ஆம் ஆண்டு ஃபிஜு தீவு நாட்டில் நடைபெற் றது. அப்போது நான் தமிழக மேல்-சபையின் துணைத் தலைவராக இருந்தேன். முதலமைச்சர் புரட்சித்தலைவர் அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழக அரசின் சார்பில் அந்த மாநாட்டில் நான் கலந்துகொள்ள ஏற்பாடு செய்தார்.
(இந்த இடத்தில் அத்தியாயம் 32-ல் நான் எழுதியிருந்த ஒரு விஷ யத்தை இங்கே ஞாபகப் படுத்துகிறேன்...
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக தொடக்கவிழாவின் போது நடந்த கவியரங்கத்தில் நான் பாடிய கவிதை, அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியை தாக்குவதாகவும், “இப் போதுதான் பிரதமருக்கும் உங்களுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு சரியாகி வரும் நேரத்தில் பிரதமரை தாக்கி கவிதை பாடலாமா புலமைப்பித்தன்? என புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடம் சொல்லியதால்... விழா முடிந்து சென்னை திரும்பிய அன்று காலையில் என் வீட்டுக்கு போன் செய்த எம்.ஜி.ஆர். "இனி மேல் என்முகத்தில் நீங்கள் விழிக்காதீர்கள்' என்று சொல்லிவிட்டுத் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டார். அதற்குப் பின்னர் நான் ஏறத்தாழ இரண்டு மாதங்கள் அவரைச் சந்திக்கவே இல்லை. ஆனால் ஃபிஜித் தீவு மாநாட்டுக்கு செல்ல வேண்டுமென்ப தால்... வெளிநாடு போகும் போது முறையாக அவரைச் சந்தித்து விடைபெற நினைத்து மாலையும் கையுமாக என் மனைவி மக்கள் நண்பர்கள் பலரோடு ராமாபுரம் தோட்டத்துக்கு எம்.ஜி. ஆரைப் பார்க்கச் சென் றேன். சந்திக்க மறுத்து விட்டார். அதனால் கோபம் தணியாமல் வெளிநாடு சென்றேன்.
ஆஸ்திரேலியாவில் ஓரிருநாள் தங்கியிருந்த போது, ""நீ மனச்சாட்சியே இல்லாதவன்! நான் வெளிநாடு புறப்பட்டு வரும் போது உன்னை பார்த்து மாலை அணிவித்து மரியாதை தெரிவித்துவிட்டு வர விரும்பினேன்; ஆனால் என்னை அனாதையைப் போல நீ அனுப்பி வைத்தாய்'' என்று அங்கிருந்த படியே கடுமையான வார்த்தைகளால் அவரை திட்டி ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன். அந்த கடிதத்தை மிக நெருங்கிய ஒருவரிடம் காட்டி... ""புலவருக்கு என்மீது எத்தனை கோபம் பாருங்கள், எப்படித் திட்டி எழுதி இருக் கிறார்'' என்று சொல்லிவிட்டுச் சிரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். நான் திரும்பி வந்த பிறகு தலைவர் உண்மை புரிந்து சமரச மானார்.)
காங்கிரஸ் கட்சியின் பிரமுகராகவும் 1980 முதல் 1989 வரை நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராகவும் இருந்தவர் பல்ராம் ஜாக்கர். அவருடைய தலைமையில் இந்தியாவிலிருந்து 21 பேர்கள் சென்றோம். முதலில் மலேசியாவுக்குச் சென்றோம். அங்கே இரண்டு நாட்கள் தங்கியிருந்து விட்டு, பின்பு சிங்கப்பூர் சென்றோம்.
அண்ணன் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களை சிங்கப்பூரில் வெளியிடும் பிரபல விநியோகஸ்தரின் மகன் என்னை அங்கு சந்தித்து பணம் கொடுத்தார். “யார் கொடுக்கச் சொன்னது?’’என்று கேட்டேன். எம்.ஜி.ஆர்.’’என்று சொன்னார். எனக்குப் புரிந்தது. நான் தலைவர் மீது கோபமாக வெளிநாடு கிளம்பி வந்தேன். ஆனால் என்மீது அவருக்கு இருந்த கோபத் தையும் மறந்து என் செலவுக்காக சிங்கப்பூரில் பணம் கிடைக்க ஏற்பாடு செய்த பெருந்தன்மையை நினைத்துக் கொண்டேன்.
ஃபிஜி போய்ச் சேர்ந்தோம். இந்த மாநாட்டில் 44 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நான் ஆங்கிலம் பேசும் பாணியை ரசித்த பல்ராம் ஜாக்கர், ""இந்த மாநாட்டில் நீங்கள் பலுசிஸ்தான் பிரச்சினையை ஆங்கிலத்தில் எடுத்துச் சொல்லுங்கள்'' என்றார். ஆனால் அதற்குரிய விபரங்களைச் சொல்லிப் பேச நான் பேச்சு தயாரிக்கவில்லை என்பதால், பல்ராம் ஜாக்கரின் கோரிக்கையை மறுத்துவிட்டேன்.
இந்த மாநாட்டில் நான் பேசினேன். ஆங்கிலக் கவிதை ஒன்றையும் எழுதி வாசித்தேன்.
How long the Sky streches its hand
So long I see my Motherland
How long the Wind goes Singing
So long my Mind goes loving
The World is one
There is no North South West and East
These are all the blind views of our bright eyes
(எவ்வளவு தூரம் இந்த வானம் தன் கையை விரித்துள்ளதோ... அவ்வளவு தூரம் நான் என் தாய் நாட்டைப் பார்க்கிறேன். எதுவரை காற்று தன் பாட லை பாடிச் செல்கிறதோ... அதுவரை என் மனம் அன்பைச் செலுத்துகிறது. இந்த உலகம் ஒன்றுதான். இதில் வடக்கு, தெற்கு, மேற்கு கிழக்கு என்று எதுவுமில்லை. இவை எல்லாம் ஒளிமிகுந்த நம் கண்களின் குருட்டுப் பார்வை.)
இன பேதமற்ற இந்தக் கவிதைக்கு வரவேற்பு கிடைத்தது. ""தமிழ் சினிமாவில் பாடல் எழுதும் ஒரு தமிழ்ப் புலவர் அருமையாக ஆங்கிலக் கவிதை எழுதியுள்ளார்'' என பாராட்டினார்கள்.
தொடர்ச்சியாக அங்கே மாநாடு நடந்தது. 25 நாட்கள் ஃபிஜுவில் இருந்தேன். stay winds என்கிற விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தோம். நான் தங்கியிருந்த அறையின் பால்கனியில் நின்றால்... கடலின் அலைகள் நீர்த்துகளை என் மேல் வாரி இறைத்தது. அவ்வளவு அழகான காட்சி.
ஒருநாள் நான் தங்கியிருந்த இடம் வழியே ஒரு குழந்தை தன் தந்தையின் கைகளைப் பற்றிக்கொண்டு “அப்பா’என அழைத்து எதையோ சொல்லிக்கொண்டே போனது. அந்தக் குழந்தையின் தமிழ்ச் சொல்லைக் கேட்டதும் என் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. உடனே ஒரு கவிதையை எழுதினேன்.
செந்தமிழ் அமுதை
என் செவி வழி அருந்தாமல்
வெந்துகிடந்த வேளையில்
தந்தையொருவன் தன் கரம்பற்றி
வந்த மழலையால் வாய் மலர் அவிழ
அப்பா’ என்றே அழைத்தது
அப்போதுதான் என் ஆவியே பிறந்தது
-இப்போதும் அங்கு கேட்ட மழலையின் ‘அப்பா’ என்கிற அழைப்பு என் காதுகளில் துல்லியமாக ஒலிக்கிறது. ஏனென்றால்... ஃபிஜுவின் இந்திய வம்சாவழியின மக்கள் மத்தியில் இந்திதான் ஆதிக்கம் செலுத்துகிறது. அங்கே அதை குருவிக்காரன் பாஷை என்கிறார்கள்.
சேலத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.கவுண்டர் குடும்பம் ஃபிஜுவில் இருக்கிறது. நான் கவுண்டரின் வீட்டில் சில நாட்கள் தங்கினேன். கவுண்டரின் மகன் விமானியாக பணியாற்றி வந்தார். அங்கே என்னைச் சந்தித்த ஒரு பார்ப்பனப் பெண்... "நீங்கள் ஒரு நல்ல கவிதை சொன்னால் உங்களுக்கு சாதமும், ரசமும் சமைத்துத் தருவேன்' என்றார். நான் ஒரு கவிதை சொன்னேன். அந்தப் பெண்மணியும் சுவையான ரசமும், சாதமும் எனக்குச் சமைத்துத் தந்தார்.
என் பேச்சைக் கேட்டு ஃபிஜுத் தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டு அழுததைச்....
(சொல்கிறேன்)