கொலைப் பழியும் உண்மை நிலையும்!

"ராஜீவ்காந்தியை விடுதலைப் புலிகள்தான் கொன்றார்கள்'’என பழிபோட்ட அப்போதைய சட்டத் துறை அமைச்சர் சுப்பிரமணியசாமியின் நெருங்கிய நண்பரான திருச்சி வேலுச்சாமி அவர்கள் ராஜீவ்காந்தி படுகொலை சம்பந்தமாக விசாரித்து வந்த ஜெயின் கமிஷனிடம் தன் வாய்மை நிறைந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.

அந்த வாக்குமூலம் எந்தக் குப்பைத் தொட்டியிலோ போடப்பட்டது. ஏன் போட்டார்கள்? அந்த வாக்குமூலத்தில் அப்படியென்ன சொல்லியிருந்தார் திருச்சி வேலுச்சாமி?

1991-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி சேலம் ஆத்தூரில் பொதுக் கூட்டத்தில் சுப்பிரமணியசாமியுடன் திருச்சி வேலுச்சாமியும் கலந்துகொண்டார். கூட்டம் முடிந்து 21-ஆம் தேதி சென்னைக்கு வந்தார் சுப்பிரமணியசாமி. ஒருநாள் விட்டு 22-ஆம் தேதி மதுரை பொதுக் கூட்டத்திலும் அவர் பேச ஏற்பாடாகியிருந்தது. அவருடன் வேலுச்சாமியும் கலந்துகொள்ள விருந்தார்.

Advertisment

பொதுக்கூட்டம் சம்பந்தமாக சுப்பிரமணியசாமியுடன் பேச முயற்சி செய்திருக்கிறார் வேலுச்சாமி. அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. இதனால் டெல்லியில் சாமியின் வீட்டுக்கு தொலைபேசியில் பேசியுள்ளார். சுப்பிரமணியசாமியின் மனைவியோ, “""அவர் சென்னையில்தானே இருக்கார்... டெல்லிக்கு வரவில்லையே''’எனச் சொல்லியுள்ளார்.

rajivgandhi

இதைத்தான் ஜெயின் கமிஷனில் வாக்குமூலமாக கொடுத்திருந்தார் வேலுச்சாமி.

21-ஆம் தேதியன்று இரவுதான் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

22-ஆம் தேதி மதுரைக் கூட்டத்திற்குச் செல்ல சுப்பிரமணியசாமி பெயரில் விமான டிக்கெட் முன்பதிவு செய்திருக்க வேண்டும். எதிர்பாராத விதமாக ராஜீவ் கொலைச் சம்பவம் நடந்திருந்தால் அந்த பயணச்சீட்டை ரத்து செய்திருக்கவேண்டும். ஆனால் பயணச்சீட்டு ரத்து செய்யப்படவில்லை. ஏனென்றால் பயணச்சீட்டே பதிவு செய்யப்படவில்லை. எடுக்காத டிக்கெட்டை எப்படி ரத்து செய்யமுடியும்?

ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட நாளில், சுப்பிரமணியசாமி சென்னையில்தான் இருந்திருக்கிறார். ஆனாலும் ட.ப.ஒ. செய்தி நிறுவனம் மூலம், சுப்பிரமணியசாமி அன்றைய தினம் டெல்லியில் இருந்ததாக இரண்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தது.

எதற்காக?

"ராஜீவ் கொல்லப்பட்டபோது நான் டெல்லியில் இருந்தேன்'’என்று பத்திரிகை செய்தியைக் காட்டி, தன்னைப் பாது காத்துக்கொள்ள நினைத்திருக்கிறார் சுப்பிர மணியசாமி.

சுப்பிரமணியசாமி யின் பல அந்தரங்க செய்திகளை அறிந்து வைத்திருக்கின்ற, அவரின் நெருங்கிய நண்பரான திருச்சி வேலுச்சாமி, "ராஜீவ்காந்தியை கொல்ல சதி செய்தது சுப்பிரமணிய சாமிதான்'’என்பதை எங்கும், எப்போதும் சொல்லத் தயாராக இருக்கிறார்.

ராஜீவ்காந்தி கொலையில், விடுதலைப்புலிகள் மீது பழி போட்டவர்கள், சாணக்கியத் தன்மையில் கரை கண்டவர்கள். சதித் திட்டம் தீட்டுவதில் சாமர்த்திய மானவர் கள். அதிகார மையங்களில் இருந்தவர்கள். அதனால் பழியைப் புலிகள் மேல் போட்டு விட்டு, அதையும் நம்பச் செய்யும்படி செய்துவிட்டார்கள்.

நான் எனக்குத் தெரிந்த ஒன்றை உங்களிடம் தெளிவாக்க விரும்புகிறேன்....

நான் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் மாவீரன் தம்பி பிரபாகரன் உட்பட இயக்கத் தம்பிகள் எல்லோருடனும் நன்கு பழகி யவன், என் வீட்டில் தம்பி உட்பட பல போராளிகளும், உரிமையோடு வந்து உணவருந்தி அளவளாவுவதை வழக்கமாகக் கொண்டவர்கள் என்பதையெல்லாம் நான் ஏற்கனவே விரிவாக உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றி எனக்கு ஓரளவு தெரியும். அந்த இயக்கம் உலகில் உள்ள எந்த இயக்கத் தைக் காட்டிலும் மிகவும் கட்டுப்பாடானது. அவர்கள் வீரம்மிக்கவர்கள் மட்டுமல்ல, வியக்கவைக்கும் மிகச்சிறந்த ஞானம் மிக்கவர்கள், போர் விமானத்தைக்கூட தங்கள் சொந்த மண்ணில் தயாரிக்கும் அறிவியல் திறம் மிக்கவர்கள். எதிரிகளின் ராடார் கருவிகளின் கண்களுக்கும் புலப்படாமல், எதிரிகளின் எல்லைவரை சென்று தாக்கிவிட்டுத் திரும்பும் ஆற்றல் மிக்கவர்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு... " அமைதிப் படை' என்ற பெயரில் தங்கள் மக்களைக் கொன்றொழிக்க ராணுவத்தை அனுப்பியதாக ராஜீவ்காந்தி மீது கோபம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதற்காக தமிழகத்தில் வைத்து ராஜீவை கொலை செய்கிற அளவிற்கு அவர்கள் பகுத்தறிவற்றவர்களும் அல்ல, பைத்தியக்காரர்களும் அல்ல. அப்படிச் செய்வது பயங்கரவாதிகளின் பாணி. லட்சியவாதிகள் அப்படிச் செய்யமாட்டார்கள். தமிழ்நாட்டின் அரவணைப்பும், பாசமும் எப்போதும் அவர்களுக்குத் தேவை. தமிழக மக்களின் அங்கீகாரம் தமிழ் ஈழத்திற்கு வேண்டும். அதனால் ராஜீவ் கொலையை அவர்கள் நிகழ்த்தியிருப்பார்கள் என்கிற அடிப்படை வாதம் சரியானதல்ல.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நூறுபேர் ஓரிடத்தில் குழுவாக கூடியிருந்தாலும், ஒருவருக்கு ஒப்படைக்கப்பட்ட பணி என்ன என்பது மற்ற 99 பேர்களுக்குத் தெரியாது. ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட சிவராசனோ, தணுவோ, குற்றம்சாட்டப்பட்ட வர்களோ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்களோ அல்லது தொடர்புடையவர் களோ கிடையாது. சிவராசன் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு சம்பந்தப்பட்டவரென்றால்... ராஜீவ் கொலையான அடுத்த ஐந்தாவது அல்லது ஆறாவது மணி நேரத்தில் ஈழத்தைச் சென்றடைந்திருக்க வேண்டும். ஒருவேளை போகிற வழியில் மாட்டிக்கொண்டிருந் தால் சயனைட் குப்பி கடித்து செத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லையே.

சிவராசன் பற்றிய ஒரு உண்மையை இலங்கை அரசு மறைத்துவிட்டதைச்....

(சொல்கிறேன்)

Advertisment

_____________

தந்தோம்... தந்...தோம்!

அண்ணன் எம்.ஜி.ஆரின் "உழைக்கும் கரங்கள்'’படத்தில் "நாளை உலகை ஆள வேண்டும்'’ பாடலுடன் ‘"ஆடிய பாதங் கள் அம்பலத்தில்'’ பாடலையும் எழுதியிருந்தேன். இயக்கம் கே.சங்கர். கதைப்படி புதுமுக நடிகை பவானி, பரதநாட்டிய மங்கை பங்கஜமாக நடித்திருப்பார். அவர் சிவன் கோவிலில் ஆடுவதாக அமைந்த பாடலை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எழுதினேன். பி.சுசீலா பாடியிருந்தார்.

பல்லவி:

dd

ஆடிய பாதங்கள் அம்பலத்தில் -இங்கு

ஆடிட நான் வந்தேன் உன் பலத்தில்

பார்வதி ஓர் அங்கம் உன்னிடத்தில் -அவள்

பார்க்கட்டும் தன்னைத்தான் என்னிடத்தில்

சரணம்-1:

கண்ணில் ஒன்றாய் இருக்க திங்களாய் பிறந்தேனோ

கற்றைக் குழலிருக்க கங்கையாய் நடந்தேனோ

கழுத்தில் சுழன்றிருக்க பாம்பெனப் பிறந்தேனோ

கையில் அமர்ந்திருக்க மானென பிறந்தேனோ

சரணம்-2:

கல்லைக் கனியென அருள்தர வரும் தில்லை

திருநகையினில் நடமிடும் உந்தன் வண்ணம்

எந்தன் விழிதன்னில் விளையாடிட

தகதகவென வரும் எழில் முகமொரு

தரிசனம் தந்தோம் தந்தோம் என்று

இங்கும் அங்கும் இன்றி

எங்கெங்கும் மின்னுகிற வடிவே

கொதித்திடும் உடல் உனது நினைவினில்

துடித்திடும் கரம் வருக அருகினில்

மதனினும் கொடியவன் விடும் ஒரு கணையினில்

நலிந்தும் மெலிந்தும் வருந்தும் எனக்கோர் துணையென

வழங்கும் சுகங்கள் அருளுக

(பாட்டுக் கச்சேரி தொடரும்)